அக்டோபர் மாத மார்க்சிஸ்ட் இதழில் …

1721
0
SHARE

மார்க்ஸ் பிறந்த இருநூறாவது ஆண்டையொட்டி  பல துறைகளில் மார்க்சின் பங்களிப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம்.

அறிவியலாளரும், மார்க்சிய ஆய்வாளருமான, ட்டி.ஜெயராமன் மார்க்ஸ், அறிவியல் பற்றி எழுதிய எழுத்துகளையும் , அவரது அறிவியல் கண்ணாட்டம் குறித்தும் இந்த இதழில் எழுதியுள்ளார். இரண்டு பகுதிகளாக அக்கட்டுரை வெளியாகவுள்ளது.

ஏங்கல்ஸ் மார்க்சின் அறிவியல் பார்வை பற்றி குறிப்பிட்டார்:
“மார்க்சைப் பொறுத்தவரையில் அறிவியல் என்பது வரலாறுரீதியாக உயிரோட்டமுள்ள, ஒரு புரட்சிகர சக்தியாகும்.”

இதனை புரட்சிகர இலட்சியம் கொண்டோர் அனைவரும் உணர்தல் அவசியம். சோசலிச மாற்றத்தை எட்டிட அறிவியல் சிந்தனை தேவை. அறிவியல் பார்வை வலுவாக பற்றி நிற்கும் போதுதான் பாட்டாளி வர்க்கம் புரட்சியை முன்னெடுத்துச் செல்லும். ட்டி.ஜெயராமன் கட்டுரையை வி.பா.கணேசன் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார்.

ஒருவரை இடதுசாரி அல்லது மார்க்சியர்  என்று அடையாளப்படுத்துவதற்கு எது அடிப்படையானது? அவரது ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு நிலை தான்.

இந்த உணர்வு நிலை கம்யூனிஸ்ட் இயக்க ஊழியர்களிடம் இருப்பது மட்டுமல்ல. இன்றைய நிலையில் இது உழைக்கும் மக்களின் உணர்வு நிலையாக மாற வேண்டும். இதற்கு ஏகாதிபத்தியத்தின் குரூரமான சுரண்டல் செயல்பாடுகள் பற்றிய ஆழமான புரிதல் தேவை. இந்தத் தேவையை நிறைவேற்றும் வகையில் ஆறுமுக நயினாரின் கட்டுரை அமைந்துள்ளது. அதன் வரலாற்று வளர்ச்சியையும் அவர் விளக்கியுள்ளார்.

மோடி அரசும் , சங் பரிவாரங்களும் இணைந்து செயல்படும் இன்றைய சூழல், வகுப்பு வாத நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இவற்றை விளக்கும் வகையில் ஏ.பாக்கியம் எழுதியிருக்கும் கட்டுரை, பாசிச சக்திகளின் அபாயம் இந்திய சமூகத்திலும்,அரசியலிலும் வளர்ந்து வருவதை ஏராளமான தரவுகளுடன் சித்தரிக்கிறது.

தற்போது கல்வி பற்றி சூடான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. வழக்கம் போல, இன்றைய கல்விச் சூழல் பற்றிய பல கூறுகள் காணாமல் போய் விடுகின்றன.
ஒவ்வொரு சமூகத்திலும் அதன் ஆளும் வர்க்கங்களின் தேவைகளை சார்ந்துதான், கல்விக் கொள்கைகள் வடிவமைக்கப்படுகின்றன.

இந்தியாவில், இந்த உண்மை அப்பட்டமாகத் தெரிகிறது.
ஏகபோக, பெருமுதலாளிகளின் தேவைகளை நிறைவேற்றவே அரசின் கொள்கைகள் செயலாற்றுகின்றன.

கல்விக் கொள்கைகளின் வர்க்கத் தன்மையை சண்முகசுந்தரம் தனது கட்டுரையில் விளக்கியுள்ளார்.

வி.பி.சிந்தன் என்ற பெயர் உணர்த்தும் தத்துவப் பரிமாணங்கள் பல. அவர் பாட்டாளி வர்க்க போராளி என்ற தளத்தில் மட்டுமல்ல, மார்க்சியம் கற்பிக்கும் சித்தாந்த ஆசிரியராகவும் செயல்பட்டு வந்துள்ளார். அவரோடு பணியாற்றிய தோழர் A. K.பத்மநாபன் கட்டுரையுடன்,VPC-யின் சில தத்துவ மேற்கோள் களையும் இணைத்துள்ளோம்.

கேள்வி – பதில் பகுதி,கட்சிக் கமிட்டிகள் செயல்பாடு குறித்து பேசுகிறது.

இக்கட்டுரைகளை விவாதித்து மார்க்சிஸ்ட் வாசகர் வட்டத்திலும் வாட்ஸ்அப் குழுவிலும் பகிர வேண்டுகிறோம்.

மார்க்சிஸ்ட் சந்தா சேர்ப்பில் 25000 என்ற இலக்கை தீர்மானித்தோம்.

மார்க்சிய தத்துவக் கல்வி இதழ்களில், அதிக வாசகர் பரப்பைக் கொண்ட நமது இதழ், இன்னும் பரவலானவர்களைச் சென்றடைய வேண்டும். சந்தா சேர்ப்பு மிக மிக முக்கியமான பணி. தோழர்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட திட்டமிட்டு பணியாற்ற வேண்டுமெனவும். வாசகர் வட்டங்களில் சந்தா எண்ணிக்கை அதிகரிப்பது பற்றி திட்டமிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

– ஆசிரியர் குழு

கருத்துக்கள் இல்லை

Please start yout discussion here ...