முதலாளித்துவ உலகின் இருப்பையே அச்சுறுத்திய நவம்பர் புரட்சி

404
0
SHARE

பிரபாத் பட்நாயக்

[இது ஜுலை 1, 2017 “மன்த்லி ரெவியூ” ( Monthly Review) இதழில் வெளி வந்த “The October Revolution and Survival of Capitalism” என்ற தலைப்பிலான கட்டுரையின் சுருக்கம்] 

நவம்பர் புரட்சி, மனித குல வரலாற்றில் கருத்தியல் ரீதியாக கருக் கொண்டு, நேர்த்தியாக வகுக்கப்பட்ட திட்டத்தின் வழி செயலாக்கப்பட்ட முதல் புரட்சி ஆகும்.  பிப்ரவரி புரட்சி இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் முதலாளித்துவப் புரட்சிகளைப் போன்று தன்னியல்பாக நடந்தேறியதுதான். ஆனால் நவம்பர் புரட்சி அத்தகையதல்ல. இது அதன் எதிர்ப்பாளர்கள் கூறுவது போல சில தனி நபர்களைக் கொண்ட குழுவால் நிகழ்த்தப்பட்ட எழுச்சி (Blanquist uprising) அல்ல. மாறாக இது குறிப்பிட்ட இணைவுச் சூழல் (Conjuncture) பற்றிய கூர்மையான  மதிப்பீட்டின் அடிப்படையில் நடந்தேறிய ஒன்று என்பதோடு அதற்கான கருத்தியலை நடைமுறைப்படுத்துவதாகவும் அமைந்தது. ஜார்ஜ் லூகாஸ் வார்த்தைகளில் “கருத்தியல் நடைமுறையாகி வெடித்தல்” (theory burst into praxis) என்று வர்ணிக்கலாம். 

அப்புரட்சியின் வீச்சு, அது உருவாக்கிய அளவற்ற ஊக்கம், உலக நிலைமைகளில் அது உருவாக்கிய மாற்றங்கள், முதலாளித்துவ உலகின் இருப்பையே அது அச்சுறுத்திய அளவு ஆகியன கருத்தியல் ரீதியான புரிதலின் அடிப்படைகளோடு ஒன்றியதாய் இருந்தன. எனினும் அந்த அச்சுறுத்தல் தற்போது மறைந்து போயிருக்கிறது. காரணம் முந்தைய கருத்தியல் புரிதல் எதிர்பார்த்திராத வகையில் குறிப்பிட்ட இணைவுச் சூழலில் (Conjuncture) ஏற்பட்டிருக்கிற மாற்றமே ஆகும். சோசலிசத்திற்கான பயணத்தில் இத்தகைய மாற்றங்களை உள் வாங்கி அதற்கேற்ற திட்டத்தோடு முன்னேற வேண்டியுள்ளது என்பதையே இங்கு விவாதிக்கப் போகிறோம். 

தொழிலாளர் – விவசாயி கூட்டணி

இணைவுச் சூழல் (Conjuncture) என்பது கருத்தியல் புரிதலின்படி, அது சில கட்டங்களில் உருவாவதுதான். 

முதலாவதாக, 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திற்கு பயணிப்போம். ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியில் ( Russian Social Democratic Labour Party) ஒன்றாக இருந்த அலெக்சாந்தர் மார்ட்டினோவ் மற்றும் சிலரின் “புதிய தீப்பொறி” (New Iskra) போக்கிற்கு எதிராக  லெனின் நடத்திய கருத்து மோதலை அறிவோம். லெனினின் கருத்து தரும் வெளிச்சம் என்னவெனில், முதலாளித்துவத்திற்கு தாமதமாக வந்து சேரும் நாடுகளின் வளரும் முதலாளி வர்க்கம் விவசாயப் புரட்சியை முழுமையாக நிறைவேற்ற சக்தியற்றவர்களாக உள்ளனர் என்பதே. அதாவது பிரான்ஸ் முதலாளிகள் 1789 ல் செய்ததை இவர்களால் நிறைவேற்ற இயலாது. காரணம் புதிய இணைவுச் சூழலை (Conjuncture)  முதலாளித்துவம் எதிர்கொண்டதுதான்.

நிலப்பிரபுத்துவ உடமைகள் மீது தாக்குதல் தொடுத்தால் அது முதலாளித்துவ உடமைகள் மீதான தாக்குதலாகவே பின்னர் வளர்ச்சி அடையுமென்ற அச்சமே. ஆகவே பழைய நிலப்பிரபுத்துவ சமூக ஒழுங்கோடு அது சமரசம் செய்து கொண்டது. ஆகவே முதலாளித்துவத்திற்கு தாமதமாக வந்து சேர்ந்த நாடுகளில் விவசாயப் புரட்சியை முழுமை அடையச் செய்ய வேண்டிய கடமை, அதாவது நிலப்பிரபுத்துவ நுகத்தடியில் இருந்து விவசாயிகளை மீட்பது என்பது, அந்தந்த நாடுகளின் தொழிலாளி வர்க்கத்தின் தோள்களில் விழுந்துள்ளது. வரலாற்று அரங்கில் தாமதமாகத் தோன்றினாலும் அதன் எண்ணிக்கை மிகச் சிறியதாய் இருந்தாலும் இக் கடமையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தொழிலாளி வர்க்கத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இதனால் தொழிலாளி – விவசாயிக் கூட்டணி தேவையாக இருக்கிறது. அதன் தலைமையாக தொழிலாளி வர்க்கம் இருக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. ஆனால் அந்த கூட்டணி, நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்துவதோடு நிறுத்திக் கொள்ளாது. அப்படி நிறுத்திக் கொண்டு தொழிலாளி வர்க்கம் மீண்டும் தன்னைச் சுரண்டலுக்கு ஆளாகிற வர்க்கமாக, தானே உருவாக்க உதவிய முதலாளித்துவ சமூக ஒழுங்கிற்குள் போய் அடைந்து கொள்ளாது. முதலாளித்துவப் புரட்சியை நடத்தி முடிக்கிற தொழிலாளி வர்க்கம் இடையறாத புரட்சிகர வழிமுறையில் சோசலிசத்தை நோக்கி முன்னேறும். ஆனால் இப் பயணத்தின் போது தொழிலாளி- விவசாயி கூட்டணியில் அங்கம் வகிப்பவர்களில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். 

லெனின் தனது “ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு உத்திகள்” (1905) என்ற நூலில் கூறுவது போல “தொழிலாளி வர்க்கம் ஜனநாயகப் புரட்சியை முழுமை அடையச் செய்ய வேண்டும். அது விவசாய மக்கள் திரளோடு கை கோர்த்து எதேச்சதிகார ஆட்சியை பலவந்ததைப் பிரயோகித்து வீழ்த்த வேண்டும். முதலாளி வர்க்கத்தின் ஊசலாட்டத்தையும் நிலை குலையச் செய்ய வேண்டும். தொழிலாளி வர்க்கம் சோசலிசப் புரட்சியையும் நிறைவேற்ற வேண்டும். அரைப்பாட்டாளிகள் உள்ளடக்கிய வெகு சனத் திரளோடு கைகோர்த்து முதலாளிகளின் எதிர்ப்பை,  பலவந்தத்தைப் பிரயோகித்து நசுக்க வேண்டும். விவசாயிகள் மற்றும் சிறு முதலாளிகளின் ஊசலாட்டத்தை நிலை குலையச் செய்ய வேண்டும்.”

இரண்டு கட்டங்களிலும் எதிரியை வீழ்த்துவதும், அதே நேரத்தில் அணிவகுப்பில் இணைபவர்கள் மத்தியிலுள்ள ஊசலாட்டங்களை நிலை குலையச் செய்து உறுதியாக அழைத்துச் செல்வதுமான கடமை தொழிலாளி வர்க்கத்திற்கு இருக்கிறது. ஆகவேதான் அதன் தலைமையும் அவசியமாக இருக்கிறது. 

காலத்திற்கேற்றாற் போல் மாறுகிற வர்க்க உள்ளடக்கம் கொண்ட இந்த தொழிலாளி – விவசாயி கூட்டணி என்கிற கருத்தாக்கம் ஜனநாயகப் புரட்சியை முழுமையடையச் செய்து மேலும் சோசலிசம் நோக்கி முன்னேறுகிற சூழல் பற்றிய புரிதலுக்கான முக்கியமான நகர்வு ஆகும். ஆனால் அதற்கும் மேலாக இது மார்க்சீய தத்துவத்திற்குள்ளேயே சமூக மாற்றத்திற்கான வழிகள் பற்றிய விவாதமும் ஆகும். அந்த வகையில் அது ஓர் அடிப்படையான முன்னெடுப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஆகும்.

முதலாவதாக, இது விவசாயிகள் பற்றிய அணுகுமுறையில் ஓர் மாற்றம் ஆகும். தொழிலாளி வர்க்கம் தலைமையிலான புரட்சிகர சக்திகளின் அணி வகுப்பில் அவர்களை இடம் பெறச் செய்வதாகும். 

முதலாளிகள் பிரெஞ்சுப் புரட்சியின் போது விவசாயிகளின் ஆதரவைப் பெறுகிற ஆற்றல் உடையவர்களாக இருந்தனர். பின்னர் பாரிஸ் கம்யூனை தோற்கடிப்பதிலும் அவர்களை ஈர்த்தார்கள். விவசாயிகள் மற்றும் 1789 புரட்சியால் பயன் பெற்றவர்கள் மத்தியில் சோசலிசப் புரட்சி என்பது முதலாளித்துவ உடமைகள் மீது மட்டுமின்றி குட்டி முதலாளிகளின் உடமைகளையும் பறித்து விடுமென்ற அச்சத்தை உருவாக்கி இதை சாத்தியமாக்கிக் கொண்டார்கள். இருப்பினும், புதிய இணைவுச் சூழலில்  (Conjuncture) விவசாயிகள் பாட்டாளிகளின் முகாமில் இணைகிற நிலைமை ஏற்பட்டது.

இரண்டாவதாக, விவசாயிகள் பற்றிய புதிய அணுகுமுறை அதுவரை ஐரோப்பாவுக்கு மட்டுமே பொருந்துவதாக கருதப்பட்டு வந்த மார்க்சீயத்தை ஒட்டு மொத்த உலகத்திற்கே பொருந்துகிற தத்துவமாக உருவெடுத்தது. அங்கேயெல்லாம், முதலாளித்துவ வளர்ச்சி மிக மிகக் குறைவாக எட்டப்பட்டிருந்தாலும், அந்த நாடுகளும் மார்க்சீய பார்வைக்குள் உள்ளிழுக்கப்பட்டன. 

மூன்றாவதாக, சோசலிசத்தை நோக்கி சில கட்டங்களாக முன்னேறுவது எல்லா நாடுகளிலும் மக்களின் விடுதலைக்கான பரிணாம வழியாக  மாறியுள்ளது. 

சோசலிசம் என்பது வளர்ந்த முதலாளித்துவ நாடுகளுக்கான தத்துவம் மட்டுமல்ல. அது வளர்ச்சி குன்றிய முதலாளித்துவ நாடுகளின் புரட்சிகர நிகழ்ச்சி நிரலிலும் பொறிக்கப்படுவதாக மாறியிருக்கிறது. இது மார்க்சீயத்தை குறிப்பிட்ட “கட்டங்களுக்கான கருத்தாக்கம்” (Stage Theory) என்கிற குறை மதிப்பீட்டை நிராகரித்திருக்கிறது. “கட்டங்களுக்கான கருத்தாக்கம்” (Stage Theory) என்பது, வெவ்வேறு பொருளுற்பத்தி முறைமைகள் முன் கூட்டித் தீர்மானிக்கப்பட்ட வகையில் ஒன்றன் பின் ஒன்றாக வரலாற்றுக் கட்டாயமாக மலரும் என்பதே. இது இயந்திர கதியான வழி முறையாக அமைந்து விடாது என்பதே அனுபவம் ஆகும். வளர்ந்த முதலாளித்துவ நாடுகளின் சோசலிசம் நோக்கிய பயணம், நேரடியானதாக இருக்க இயலும். அதே நேரத்தில் வளர்ச்சி குன்றிய முதலாளித்துவ நாடுகளில் வெவ்வேறு கட்டங்களைக் கடந்து செல்கிற நீண்ட நெடிய வரலாற்றுப் பரிணாமமாகவே இருக்கும்; ஆனால் சோசலிசம் என்பதே எல்லா புரட்சிகரப் போராட்டங்களுக்கும், எங்கு நிகழ்ந்தாலும் இறுதி இலக்காக இருக்கும். 

ஏகாதிபத்தியம்

இரண்டாவது மிக முக்கிய கருத்தியல் நடவடிக்கை என்பது முதல் உலக யுத்த காலத்தில் லெனின் வளர்த்தெடுத்த, அன்றைய புதிய இணைவுச் சூழலுக்குப் (Conjuncture) பொருத்தமான “ஏகாதிபத்தியம்” என்கிற கருத்தாக்கம் ஆகும். ஏகாதிபத்தியம் குறித்த லெனின் தந்த வரையறுப்புகளை இப்படி சுருக்கமாக சொல்லலாம். 

* நிதி மற்றும் தொழில் துறைகளில் நிகழ்ந்த மூலதனம் மையமாதல். 

* கார்ல் மார்க்ஸ் எடுத்துரைத்த அத்தகைய முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த போக்கினால் உருவான நிதி, தொழில் ஏகபோகங்கள்.

* சிறு குழுக்களான நிதி ஏகபோகம் நிதி, தொழில் ஆகிய இரண்டு தளங்களையும், பெருமளவு நிதி மூலதனத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல். 

* இது அரசுடன் ஓர் “நெருக்கமான இணைப்பையும்” (Personal union), அரசின் மீது கட்டுப்பாட்டையும் உருவாக்கி கொண்டு, அரசின் தன்மையையும் மாற்றுகிறது. 

இவையே முதலாளித்துவம் எட்டிய புதிய கட்டத்தின் சாரம் ஆகும். 

இக் கட்டத்தில் மூலதனங்களுக்கு இடையேயான போட்டி,  வெவ்வேறு வளர்ந்த முதலாளித்துவ நாடுகளைச் சேர்ந்த ஏகபோகங்களுக்கு இடையிலான மோதலாக வடிவம் எடுத்தது. ஒருவர் செலவில் இன்னொருவர் உலகத்தின் “பொருளாதாரப் பிரதேசங்களைக்” கைப்பற்ற முனைந்தன. ஏற்கெனவே அவர்களுக்குள் பங்கு வைக்கப்பட்டிருந்த சந்தைதான். எனினும் மறு பங்கீடை செய்வதற்கு போர்களில் இறங்கின. 

இத்தகைய போர்கள், உதாரணமாக முதல் உலகப் போர் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களுக்கிடையே அகழிகளை வகுத்துக் கொண்டு பரஸ்பரம் கொன்று குவித்தனர். நிதி ஏகபோகங்களின் நலன்களுக்காக காலனி, அரைக் காலனி, சார்ந்திருந்த நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்கள் பீரங்கிகளின் இரைகளாக மாற்றப்பட்டனர். முதலாளித்துவம் உருவாக்கிய “ஏற்றத் தாழ்வான வளர்ச்சியும்”, பொருளாதார அதிகாரங்களின்  ஒப்பீட்டு பலத்தில் ஏற்பட்ட மாற்றங்களுமே இத்தகைய சந்தை மறுபங்கீட்டை கட்டாயமாக ஆக்கியது. 

முதலாளித்துவத்தின் வளர்ச்சிக் கட்டமாக ஏகாதிபத்தியத்தை லெனின் முன் வைத்த 

கருத்தியல் வளர்ச்சி ஏற்படுத்திய தாக்கங்கள் நிறைய.

முதலாவது, எந்த பொருளுற்பத்தி முறைமையும் வரலாற்று ரீதியாக செல்லாததாக ஆகும் வரை வேறு ஒரு பொருளாதார முறைமையால் மாற்றப்படாது. ஆனாலும் இத்தகைய ” வரலாற்று காலாவதி” (Historical Obsolescence) குறுகிய பொருளாதார விதிகளாகப் புரிந்து கொள்ளப்பட்டது. எட்வர்ட் பெர்ன்ஸ்டெயின் மார்க்சீயத்தை “திருத்த” வேண்டுமென்றார். முதலாளித்துவ வீழ்ச்சி கண்களுக்கு புலப்படாத சூழலில், புரட்சியின் மூலம் அச் சமூகத்தை தூக்கியெறிவதற்கு மாறாக முதலாளித்துவ முறைமைக்குள்ளேயே சீர்திருத்தங்களை வலியுறுத்தலாம் என்றார் அவர். ரோசா லக்சம்பர்க் புரட்சிகரப் பார்வையை முன்வைத்தார், மூலதனக் குவிப்பின் காரணமாக முதலாளித்துவ முறைமையின் வீழ்ச்சி தவிர்க்க இயலாதது என்றார். லெனின் முன் வைத்த வாதங்கள் இந்த விவாதத்தின் போக்கையே முற்றிலுமாக மாற்றியது. முதலாளித்துவம் வரலாற்று ரீதியாக செல்லாததாக ஆகி விட்டது; அதாவது மரணத்தின் விளிம்பில் நிற்கிறது என்றார். ஏனெனில் ஏகாதிபத்தியக் கட்டத்தில் அது மனித குலத்தை தொடர்ந்த, துயரம் தருகிற போர்களுக்குள் மூழ்கடித்துள்ளது.

ஆகவே, ஒரே தெரிவுதான் வளர்ந்த நாடுகளின் தொழிலாளர்கள் முன்பாக உள்ளன. எல்லைகளுக்கு அப்பால் உள்ள சக தொழிலாளர்களைக் கொல்வது அல்லது தோட்டாக்களை சமூக அமைப்பை நோக்கித் திருப்புவது என்பதே ஆகும். இதுவே லெனினின் பார்வை. அதாவது ரோசா லக்சம்பர்க் வார்த்தைகளில் குறிப்பிட்டால் “சோசலிசம் அல்லது அராஜகம்” என்பதே. 

இரண்டாவதாக, வளர்ந்த முதலாளித்துவ நாடுகளின் தொழிலாளர்கள் மட்டுமின்றி ஒடுக்கப்பட்ட நாடுகளின் உழைப்பாளி மக்களும் இப் போர்களில் பீரங்கி இரையாக மாற்றப்பட்டனர். இந்த போர்கள் அவர்களிடமும் மாற்றங்களை உருவாக்கின. அவர்கள் உணர்வில் மாற்றங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு கிட்டிய இராணுவப் பணி உள்ளிட்ட பயிற்சிகளும் பெரும் தாவல், பாய்ச்சல்களை உள்ளடக்கியவையாக இருந்தன. ஆகவே அவர்களும் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். ஏனெனில் அவர்களுக்கும் ஒரு தெரிவுதான் இருந்தது. விடுதலை அல்லது அராஜகம் என்பதுதான்.

மூன்றாவதாக, முதலாளித்துவ சமூகம் வரலாற்று ரீதியாக காலாவதியானது மட்டுமின்றி அது உலகப் புரட்சியை வரலாற்று நிகழ்ச்சி நிரலில் தவிர்க்க இயலாத அம்சமாகக் கொண்டு வந்தது. ஏகாதிபத்தியம் மற்றும் அதனோடு தொடர்புடைய போர்கள் மனித குலத்தின் மீது யதார்த்தமான தெரிவைத் திணித்தன. அராஜகத்திற்கும், சோசலிசத்திற்கும் இடையில் ஒன்றை உடனே தெரிவு செய்ய வேண்டிய கட்டாயமே அது. 

இவ்வாறு உருக் கொண்ட “இணைவு சூழல்” குறித்த  புரிதலின் முதல் அம்சம் என்னவெனில், இத்தகைய இணைவுச் சூழல் கொண்ட எல்லா நாடுகளுமே வெவ்வேறு வழிகளில் சோசலிசத்தை நோக்கிப் பயணித்தால்தான் அந்தந்த நாட்டு மக்களின் விடுதலையை எட்ட இயலுமென்பது முன் நிபந்தனை. 

இப் புரிதலின் இரண்டாவது அம்சம் எல்லா ஆண்டுகளின் இந்த பயணங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்தது. ஏகாதிபத்தியம் தனது சங்கிலியால் இந்த நாடுகள் அனைத்தையும் பிணைத்து வைத்துள்ளது. ஆகவே இச் சங்கிலியின் பலவீனமான கண்ணியை உடைத்தெறிந்தால் அது ஒட்டு மொத்த சங்கிலியையும் அறுத்தெறியும். அத்தகைய இணைவுச் சூழல் அன்று நிலவியது. 

இந்தப் புரிதலின் வெளிச்சத்தில் அகிலம் அமைக்கப்பட்டது. அதாவது கம்யூனிஸ்ட் அகிலம். அது போன்ற ஏற்பாட்டை உலகம் அதற்கு முன்பு கண்டதில்லை. பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் நாட்டுப் பிரதிநிதிகளும், சீனா, இந்தியா, மெக்சிகோ, எகிப்து, வியட்நாம் பிரதிநிதிகளோடு தோளோடு தோள் உரசிக் காட்டிய தோழமை வித்தியாசமான நிகழ்வு. 

இணைவுச் சூழல்: எப்படி புரிந்து கொள்வது?

நவம்பர் புரட்சியின் வழியாக அறியப்பட்ட கருத்தாக,  முதலாளித்துவம் தனது அந்திமக் காலத்தை எட்டி விட்டது; முன்பு போல அது முன்னேற இயலாது என அன்றைய காலத்திய சிந்தனையாளர்கள் பலரால் முன் வைக்கப்பட்டது. ஏன், கம்யூனிச வைரிகள் கூட அவ்வாறு பேசினார்கள் என்பது அன்றைய இணைவுச் சூழலுக்கு சாட்சியம் ஆகும். ஆகவே அம் மதிப்பீடு அன்றைய நிலைமையில் சரியானதாகவே இருந்தது.

1933 இல் ஜான் மேனார்ட் கீன்ஸ் “சமாதானத்தின் பொருளாதார விலைகள்” என்ற நூலில் எழுதினார். “உலகம் முழுவதும் சீர் கெட்டு வரும், ஆனால் தனித்தன்மை கொண்ட முதலாளித்துவத்தின் கரங்களில் போர்களுக்குப் பின்னர் வெற்றி இல்லை. அது அறிவார்ந்ததாக இல்லை. அழகானதாகவும் இல்லை. நியாயமானதாக இல்லை. ஒழுக்கமானதும் இல்லை. அது நல்லதை தரவில்லை. சுருக்கமாக நாம் அதை வெறுக்கிறோம். இழிவாக கருதுகிறோம். ஆனால் நமக்கு திகைப்பாக இருக்கிறது. அதனை மாற்ற வேண்டுமெனில் அந்த இடத்தில் எதை வைப்பது? அதில் நமக்கு விடையில்லாத தவிப்புதான் மிஞ்சுகிறது”. முதலாளித்துவ நிபுணர் கீன்சே அன்றைய முதலாளித்துவ சமூகத்தை மதிக்கத் தக்கதாக கருதவில்லை. 

அந்த நூலில் ஜான் மேனார்ட் கீன்ஸ் அந்த நூலில் உலக முதலாளித்துவத்தின் தகர்வு பற்றி தெளிவான சித்திரத்தை தந்திருந்தார். அந்த நூலில் இருந்து விரிவாக மேற்கோள் காட்டி 1920 கம்யூனிச அகிலத்தில் பேசிய லெனின் உலகப் புரட்சிக்கான காலம் கனிந்து விட்டது என்றார். லெனின் வார்த்தைகளில் “ஒருபுறம் மக்களின் பொருளாதார வாழ்வு சகிக்க இயலாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது எனில் இன்னொரு புறம் கீன்ஸ் சொன்ன உடைப்பு துவங்கி விட்டது. வெற்றி பெற்ற பலமான நாடுகளில் உள்ள மிக மிகக் குறைவான சிறுபான்மையினர் மத்தியில் அதற்கான உணர்வுகள் முளை விட்டிருந்தன. உலகப் புரட்சிக்கான இரு நிபந்தனைகள் முதிர்ச்சி அடைகிற கால கட்டத்தில் நாம் உள்ளோம்.” 

லெனினும், போல்ஷெவிக்குகளும் நவம்பர் புரட்சியை மிக முக்கியமான விளை பொருளாக கருதினர். அன்றைய இணைவுச் சூழல் பற்றிய செல்லத் தக்க புரிதல் அது. 

இந்த இணைவுச் சூழல், முதல் உலக யுத்தத்திற்கு முன்னரே துவங்கி இரண்டாம் உலக யுத்தம் முடிவுற்று சில ஆண்டுகள் வரை, அதாவது காலனி ஆதிக்கம் தகர்கிற காலம் வரை நீடித்தது. இத்தகைய இணைவுச் சூழலின் முக்கிய குணங்களில் ஒன்று ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான  முரண்பாடுகளோடு தொடர்புடையது. முதல் உலக யுத்தம், இரக்கமற்ற வெர்செயில்ஸ் ஒப்பந்தம், உலகப் பெரு மந்தம், பாசிச வளர்ச்சி, பாசிச நாடுகளின் ஆக்ரமிப்புகள், இரண்டாம் உலக யுத்தம் ஆகியன ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான தீவிர முரண்பாடுகளின் வெளிப்பாடுகளே. 

சோவியத் யூனியன் பிழைத்ததற்கே ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே நிலவிய முரண்பாடுகள்தான் என்கிறார் லெனின். “கொஞ்சம் நல்லது எனினும் நல்லதே” (Better fewer; but better) என்ற நூலில் ரஷ்ய எதிர்ப் புரட்சிக்கு ஆதரவாக பல ஏகாதிபத்திய நாடுகள் மேற்கொண்ட கூட்டு இராணுவ நடவடிக்கை தோல்வி அடைந்ததற்கு காரணம், அவர்களுக்குள் குறிப்பாக மேலை – கீழை ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகளே ஆகும் என்கிறார். இந்த முரண்பாடுகள் நமக்கு “மறு பிறப்பை” தந்தது என்கிறார். 

இந்த வரலாற்று இணைவுச் சூழல் நவம்பர் புரட்சியில் துவங்கி இரண்டாம் உலக யுத்தம் வரை நீடித்தது.

(இதன் இரண்டாம் பகுதி அடுத்த இதழில்)

தமிழில் *க. சுவாமிநாதன்*

.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்