வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே தேர்தல் போராட்டம் … 2

1188
2
SHARE

– டி.கே.ரங்கராஜன்


இடது ஜனநாயக அணியைக் கட்டுவதென்பது, மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு. இந்தப் பின்னணியில், மக்கள் நலக் கூட்டணியுடன் கட்சியின் அணுகுமுறை எவ்வாறு இருந்திட வேண்டும்?

இந்தக் கேள்வியானது இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமானது. 1982 ஜனவரியில் விஜயவாடாவில் நடைபெற்ற 11வது கட்சி காங்கிரசின் அரசியல் தீர்மானத்தை முன் மொழிந்து விவாதத்திற்கு தொகுப்புரை வழங்குகிறபோது – தொகுப்புரையின் ஒரு பகுதியாக தோழர் பி.டி.ரணதிவே வழங்கிய தொகுப்புரையில் “இடது ஜனநாயக ஒற்றுமை” என்ற தலைப்பின் கீழ் வரும் விபரங்களை இங்கே பொருத்திப் பார்ப்பது, உதவிகரமாக இருக்கும்; கல்கத்தாவில் சமீபத்தில் நடந்து முடிந்த ப்ளீனத்தின் முடிவுகளை நாம் புரிந்துகொள்ளவும் அது உதவியாக இருக்கும்.

“… இடது ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையின் அவசியத்தை நாம் உணர்ந்துள்ள போதிலும் இன்னமும் சில குழப்பங்கள் நம்மிடையே நீடிக்கின்றன. இடது ஜனநாயக ஒற்றுமையின் அவசியத்தை பொதுவாகப் புரிந்துகொண்ட நிலைமை நிலவுகிறது. துரதிஷ்டவசமாக நாம் சொல்வதை ஒரு சட்டகத்தின் கீழ் பதிவு செய்திட முடியாது. ….

மகாராஷ்டிராவில் இடது ஜனநாயக அணி அல்லது அதைப் போன்ற ஓர் அணி உள்ளது. … கேரளாவிலும் இடது ஜனநாயக அணி உள்ளது.

கேரளாவில் நம்முடன் உள்ள எதிர்க் கட்சிகள், நம்முடன் கூட்டுச் சேர்ந்து அமைச்சரவையில் பங்கேற்றபோது, அவர்கள்தான் இந்தப் பெயரை ஆலோசனையாகக் கூறினர். இந்த ஆலோசனைக்காக அவர்களிடம் விவாதம் செய்வது சரியாக இருக்காது.

மேலும் “நாங்கள் சொல்வதை ஒப்புக்கொள்; இல்லையேல் கூட்டு அமைச்சரவை கிடையாது” என்று கூற முடியுமா?

ஆனால், அவர்கள் கூறுவதைக் கேட்டு விட்டு நம்மிடையே சிலர் குழப்பிக் கொள்கின்றனர். இடது ஜனநாயக ஒற்றுமை என்பது கூட்டு மந்திரி சபை என்று சிலர் நினைத்துக் கொள்கின்றனர். கேரள தோழர்கள் (மாநாட்டில்) கொண்டுவந்த திருத்தம் இதன் அடிப்படையில் இருந்தது.
‘இடது ஜனநாயக ஒற்றுமை’ என்பதை பாராளுமன்ற சவுகரியத்திற்காக அல்லது தேர்தல் வழிமுறைக்கானதாக சுற்றி வளைப்பது என்று உருவானால் நாம் முழுவதும் சீர்திருத்தவாதியாகிவிட்டோம் என்றாகிவிடும்.

ஏனென்றால் நாம் சொல்லும் இடது ஜனநாயக ஒற்றுமை என்ற திட்டம் மற்ற பூர்ஷ்வா கட்சிகளின் திட்டத்திற்கு நேர்எதிரானது.

இது உழைக்கும் மக்களுக்கும் சுரண்டும் வர்க்கத்திற்கும் இடையே இன்று உள்ள பலாபலன்களை மாற்றுவதற்கான திட்டமாகும்.

இன்றுள்ள சமூக பொருளாதார அமைப்பை மாற்றியமைக்கவுள்ள ஓர் ஏற்பாடும் ஆகும்.
படிப்படியாக நமது செல்வாக்கை உயர்த்திடவும், பிறகு தொழிலாளி வர்க்கத்தின் செல்வாக்கையும், மார்க்சிஸ்ட் கட்சியின் செல்வாக்கை உயர்த்திடவும் ஆன ஒரு திட்டமாகும்.
இதில் புரட்சிகர முக்கியத்துவமும் அடங்கி உள்ளது. இதன் ஆயுதமே வர்க்கப் போராட்டம்தான். வெகுஜனப் போராட்டம்தான்.

அதற்கான, முக்கிய ஆயுதமே மக்களின் உணர்வு நிலையை மாற்றுவதுதான். இதனால் மக்கள் பூர்ஷ்வா கட்சிகளையும், பூர்ஷ்வா சித்தாந்த மாயையிலிருந்தும் விலகுவர்.
இரண்டாவதாக, நம்மிடையே உள்ள நேச சக்திகள் இடது ஜனநாயக ஒற்றுமைக்கான போராட்டத்தில் எவ்வளவு தூரம் நிற்பார்கள் என்பதிலும் நாம் தேவையில்லாமல் குழப்பிக்கொள்ளக் கூடாது.
இன்று, இந்த மாநிலத்திலோ அல்லது அந்த மாநிலத்திலோ அல்லது இந்த அமைச்சரவையிலோ அல்லது அந்த அமைச்சரவையிலோ நம்மோடு கூட்டு சேர்ந்துள்ள இடதுசாரிக் கட்சிகள் அனைத்துமே புரட்சிக்கான நேச சக்திதான் என்று உத்தரவாதம் கொடுக்க முடியுமா?

இடதுசாரிக்கான குணாம்சத்துடன் இன்று நம்முடன் நிற்கும் சிலர் நம்மை விட்டு விலகலாம். ஆனால், அந்த குணாம்சம் நீடிக்கும். நம்மிடையே நிலைத்திட்ட ஒரு பகுதிக்கு பூர்ஷ்வா செல்வாக்கு நீடிக்கும். ஆனால் மக்களோ, முன்னேற்றத்தை நோக்கி போய்க் கொண்டே இருப்பார்கள். புதிய கட்சிகள் வரும். புதிய குழுக்கள் வரும். இந்த வழியில்தான் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்று சேர்க்க முடியும்.

இந்தச் செயல்வழிக்கான திட்டத்தில் இன்று சில இடதுசாரிக் கட்சிகளுடனும், ஒரு சில ஜனநாயகக் கட்சிகளுடனும் தொடங்கி இருக்கிறீர்கள். நாளையே இந்தக் கூட்டு எந்த வடிவம் எடுக்கும் என்று யாருக்குத் தெரியும்?

புரட்சிகர இயக்கத்தில் தாராளவாதியாகத் தொடங்கியவர், தொடர்ந்து இருந்து கம்யூனிஸ்டாக மாறிய நிகழ்ச்சிகள் உண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் நேச சக்தியாக இருந்த சமூக ஜனநாயகவாதிகள் (social democrat) பலர் தாராளவாதியாக (liberals) மாறிய நிகழ்ச்சியும் உண்டு.
தோழர்களே, இப்படிப்பட்ட சரித்திர அனுபவங்களை நாம் முற்றிலும் கற்றுணர வேண்டும்.
சில தோழர்கள் இடது ஜனநாயக ஒற்றுமையை தேர்தலுக்கான போராட்டத்துடன் இணைத்து அதன் பொருளை சிதைக்கிறார்கள். (இடது ஜனநாயக ஒற்றுமை என்பது) இது வேறு தன்மை கொண்டது. ஆகவே, நிலப்பிரபுக்களுக்கு, முதலாளிகளுக்கு எதிரான வெகுஜன போராட்டம், ஜனநாயக சக்திகளை கோரிக்கையின்பால் ஒன்று சேர்ப்பது போன்றவற்றின்மீது நாம் குறிப்பிட்டுள்ளதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு பூர்ஷ்வா அரசாங்கத்தை நீக்கி மற்றொரு பூர்ஷ்வா அரசாங்கத்தை அதனிடத்தில் நிறுவுவது என்ற கடமைக்குக் கட்டுப்பட்ட கட்சி அல்ல நாம்.
பாராளுமன்ற அமைப்பைப் பாதுகாத்துக் கொண்டே நாம் முன்னேறிச் செல்ல வேண்டியுள்ளது. அப்போது கூட்டாட்சி, தொழிலாளி வர்க்கத் தலைமை போன்ற கேள்விகள் எழும்.
மக்கள் ஜனநாயகப் புரட்சி என்பது தொழிலாளி வர்க்கத்தின் கூட்டியக்கத் தலைமையில்தான் வெற்றி பெறும் என்பதை நாம் உணர்த்தியாக வேண்டும்.

அப்படிப்பட்ட கூட்டியக்கம் ஒரே நாளில் வந்துவிடாது. அப்படிப்பட்ட ஓர் இயக்கம் பல வடிவங்களில் வரும். தோற்றத்தில் பல வேறுபாடுகளைக் கொண்ட மாற்றங்களும் உருவாகும்.
இந்தியா போன்ற தேசத்தில் யாரோடு கூட்டு இயக்கம்? என்று என்னிடம் கேட்டால் தொழிலாளிவர்க்கம், விவசாயிகளோடுதான் என்பேன்.

என்ன நோக்கத்திற்காக? விவசாயப் புரட்சிக்காகத்தான். கூட்டு இயக்கம் என்பதே ஒரு புரட்சிகர எண்ணம்தான். இது போராட்டத்தின்போதே நமக்குக் கிடைத்திடும்.

ஆகவே இப்படிப்பட்ட இடது ஜனநாயக ஒற்றுமைத் திட்டத்தில் “இந்தக் கட்சியுடன் அல்லது அந்தக் கட்சியுடன் இன்று கூட்டு” அல்லது தேர்தல் கூட்டுக்கான ஒரு தொழில்நுட்பம் என புரிந்துகொள்ள வேண்டாம். இதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் ’நாம் எப்போது மந்திரி சபையில் சேருவது? அல்லது எப்போது அமைச்சரகத்தை உருவாக்குவது?’ போன்றவற்றிற்கான அணுகுமுறையை குறிப்பிட வேண்டுமெனக் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிர மாநில சட்டசபையில் நாம் 10 அல்லது 11 பேர் இருக்கும்போது சரத் பவார் அமைச்சரவை நமக்கு இரண்டு அல்லது மூன்று அமைச்சர் பதவிகளைத் தர முன்வந்தது. நாம் அதை நிராகரித்தோம். நமக்கு அது தேவையில்லை.

‘நம்மால் என்ன செய்ய முடியும்’ அரசின் கொள்கைகளை நாம் வடிவமைக்க முடியுமா?, ‘நம்முடைய சக்தி என்ன?’ போன்றவையே நம்முடைய மனநிலையைத் தீர்மானிக்கிறது.
1967 ஆம் வருடத்தில் பீகார் சட்டசபையில் நமக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் தரப்பட்டன. அன்றைக்கு இருந்த ஜனசங்கம் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்தான் கொடுக்க முன்வந்தார்கள்.

முதலில் ஒன்று கொடுத்தார்கள்; நாம் அதை நிராகரித்தோம். அப்போது நமக்கு இரண்டே இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்தான் இருந்தனர். பிறகு அவர்கள் இருவருக்குமே அமைச்சர் பதவி தர முன்வந்தனர். அதையும் நாம் நிராகரித்தோம்.

ஒரு அமைச்சரவையில் பங்கேற்பது அல்லது பங்கேற்காமல் இருப்பது என்பது அன்றுள்ள, யதேச்சதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை பொறுத்தது. இதில் நாம் எடுக்கவேண்டியது உத்தி பூர்வமான நடவடிக்கையாகும்.

அன்றைக்குள்ள ஸ்தூலமான நிலைமைகளை கணக்கில் எடுத்துச் செய்யவேண்டியது.
ஆனால், இடது ஜனநாயக ஒற்றுமைக்கான போராட்டம் என்பது மொத்த வர்க்கங்களின் அதிருப்தியைக் கட்டவிழ்த்து விடுவது என்பதாகும். இந்த வர்க்கங்களின் கூட்டே, மக்கள் ஜனநாயகப் புரட்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.

எனவே இந்த இரண்டு போக்குகளையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.”

தோழர் பி.டி.ரணதிவே வழிகாட்டுதல்கள் நமது அணுகுமுறையை செப்பனிட உதவுகின்றன.

<<< முந்தைய பகுதி அடுத்த பகுதி >>>

2 கருத்துக்கள்

  1. […] சட்டதிருத்தம்அடுத்த கட்டுரைவர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே த… Editorial var block_td_uid_1_5761368575548 = new td_block(); block_td_uid_1_5761368575548.id = […]

Please start yout discussion here ...