மக்களே இறையாண்மை கொண்டவர்கள்

1351
1
SHARE
  • என்.குணசேகரன்

இந்திய கூட்டாட்சி முறை தற்போது கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது. பாஜகவின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரல், ஒரு பாசிச அரசை அமைக்கும் நோக்கம் கொண்டது. இன்றைய இந்திய கூட்டாட்சி முறையை அழித்து அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசுக்கே என்ற சர்வாதிகார அரசமைப்பினை உருவாக்க பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்-ம் நீண்ட கால நோக்கில் செயல்பட்டு வருகின்றன.

இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ், மாநிலத்தின் அதிகாரங்களை பறித்து, மத்திய அரசுக்கே அதிக அதிகாரங்களைக் குவித்திடும்  ஜனநாயக விரோதப் பாதையில் சென்றது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சித் திட்டம் முன்வைக்கும் கூட்டாட்சி முறை கோட்பாடுகள், இதற்குச் சிறந்த மாற்றுப் பாதையாக திகழ்கின்றது.

இந்திய கூட்டாட்சி முறை

தற்போதைய இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியக் குடியரசைக் “மாநிலங்களின் ஒன்றியம்” என்று குறிப்பிடுகிறது. இதனால், இந்தியக் குடியரசு, ஃபெடரல் (கநனநசயட) என்ற கூட்டாட்சி அமைப்பு கொண்டதாக விளங்குகிறது.
மத்திய, மாநில அரசாங்கங்களுக்குரிய சட்ட, நிர்வாக அதிகாரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இரு தரப்பும்    இணைந்து  பகிர்ந்து கொள்வது என்ற வகையில் பொதுப் பட்டியல் அதிகாரங்களும் வரையறுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசுக்கு 100, மாநில அரசுகளுக்கு 61, பொதுவாக 52 என்ற எண்ணிக்கையில் அதிகாரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியல்கள் வெளிப்படையாக ஒரு உண்மையை தெளிவுபடுத்துகின்றன. தொடர்ந்து மத்திய அரசுக்கு அதிகாரங்கள் அதிகரித்து வருவதும், மாநிலங்களின் அதிகாரங்கள் குறைந்து வருவதும், பொதுப் பட்டியல் என்பதிலும் கூட மத்திய அரசுக்கே கூடுதல் அதிகாரங்கள் என்ற நிலையும் ஏற்பட்டு வருவதைக் காண முடியும்.
முதல்  பிரதமரான நேரு, கேரளத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை கலைத்தார். நிலச்சீர்திருத்தம், அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வகையிலான பல முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட அந்த அரசாங்கம், விதி 356 என்ற அரசியலமைப்பு சட்ட விதிக்கு பலியானது. இவ்வாறு கடந்த காலத்தில் அரசியலமைப்பு விதி 356 அடிப்படையில்  தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மத்திய அரசு பல முறை கலைத்தது. இவ்வாறு இந்திய ஆளும் வர்க்கங்கள் கூட்டாட்சி கோட்பாட்டினைக் கேலிக்கூத்தாக மாற்றிவிட்டன.
இன்றைய முதலாளித்துவ அரசு தேசிய இனங்களிடையே பகைமையை ஏற்படுத்துகிறது. ஒரு மொழிக்கு சலுகை கொடுத்து இதர தேசிய இனங்களை எதிரும் புதிருமாக திருப்புகிறது. காவிரிப் பிரச்னையில் அரசியல் ஆதாயத்திற்காக உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கிறது. இது போன்ற நதி நீர் தாவா, எல்லை தாவா பிரச்னைகளில் தேசிய வெறியை தூண்டி இரு தரப்பினை மோத விட்டு அதன் மூலம் தனது அதிகாரத்தை ஆளும் வர்க்கம்  தக்க வைத்துக் கொள்கிறது.
பண்பாட்டு சிறப்பு கொண்ட தமிழ் இனத்தின் பண்பாட்டு சிறப்புக்களை மேலும் வளர்த்தெடுப்பதற்கு பதிலாக அவற்றை அழிக்க முயற்சிக்கிறது. இது போன்று இந்தியாவின் பன்முக பண்பாடுகளை சிதைக்கும் வேலையில் மத்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர்.
தேசிய இனங்களின் உரிமைகள்
தேசிய இனங்களுக்கிடையே சமத்துவம் என்பது உண்மையில் பாட்டாளி வர்க்க நலனை பாதுகாக்கும். கட்சித் திட்டத்தில்,
அரசு கட்டமைப்பு பற்றி குறிப்பிடும்போது, ”இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களுக்கும் உண்மையான சமத்துவம் மற்றும் சுயாட்சி தந்து அதன் அடிப்படையில் இந்திய யூனியனின் ஒற்றுமையை பாதுகாத்து முன் னெடுத்துச் செல்ல”  பணியாற்றும் என்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ( பாரா: 6.3).

மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் இருப்பதை இந்திய ஆளும் வர்க்கம் எப்போதும் அனுமதித்ததில்லை. அனைத்து அதிகாரங்களும் கொண்ட மையப்படுத்தப்பட்ட அரசுதான் ஆளும் முதலாளித்துவ வர்க்க நலனை பாதுகாக்கும். இதனால் வலுவான மத்திய அரசு, பலவீனமான மாநில அரசுகள் என்ற அரசு கட்டமைப்பையே ஆளும் வர்க்கங்கள் நிலை நிறுத்த முயற்சிக்கின்றனர். சமமான, அதிக அதிகாரங்கள் கொண்ட மாநிலங்கள் செயல்படும் உண்மையான மாநில சுயாட்சிக் கோட்பாட்டை பற்றி கட்சி திட்டம் பேசுகிறது.
இன்றைய முதலாளித்துவ அமைப்பில், பொதுவாக மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. அதிலும் மாற்று அரசியல் கருத்தோட்டம் கொண்ட அரசாங்கங்களை புறக்கணிக்கும் போக்கினை மத்திய அரசு கடைப்பிடிப்பதுண்டு. இடதுசாரி அரசாங்கங்கள் அமையும் போதெல்லாம் நிதி ஒதுக்கீட்டை வெட்டுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, பழிவாங்கும் வகையில் நடந்து கொள்வது  மத்திய அரசின்  வழக்கமான வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.`

இதற்கு மாறாக, சம அதிகாரங்கள் கொண்ட மாநிலங்கள் மட்டுமல்லாது, பின் தங்கிய பிரதேசங்களும் முன்னேற்றமடைய, தன்னாட்சி அதிகாரம் கொண்ட  பிரதேச சுயாட்சியையும் கட்சி திட்டம் பேசுகிறது: “பிற்பட்ட மற்றும் பலவீனமான மாநிலங்கள், பிராந்தியங்கள், பகுதிகள் தங்கள் பிற்பட்ட தன்மையிலிருந்து விரைவாக மீள நிதி மற்றும் இதர உதவிகள் தந்து சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.” அதாவது, நிதி ஒதுக்கிடு போன்றவற்றில் தற்போதுள்ளது போன்ற பாரபட்சம் இருக்காது.

”ஆதிவாசி மக்கள் வாழும் பகுதி அல்லது ஒத்த சமூக மற்றும் பண்பாட்டு முறையை பின்பற்றும் குறிப்பிட்ட இன மக்கள் தொடர்ச்சியாக மற்றும் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்தால், அந்தப் பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட மாநில அமைப்புக்குட்பட்ட பிரதேச சுயாட்சி வழங்கப்படும். அந்தப் பகுதிகளின் வளர்ச்சிக்கு முழு உதவி செய்யப்படும்.” (பாரா: 6.3.ii) என்று கட்சி திட்டம் உறுதியாக குறிப்பிடுகிறது.

மக்களே அனைத்தும்…

மக்கள் ஜனநாயக அரசு செயல்பாட்டின்  ஒவ்வொரு அம்சத்திலும் மக்களே தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவார்கள். தேர்தல்கள் முறையாக நடத்தப்படுவது மட்டுமல்லாமல், தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி சரியாக செயல்படவில்லை என்றால், அவரை பதவிலிருந்து அகற்றுகிற  ‘திருப்பி அழைக்கும் உரிமையும்’ மக்களுக்கு உண்டு.

மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கட்டுப்படுத்தும் வகையில் தற்போதுள்ள மேலவை, ஆளுநர் பதவி போன்ற எதுவும் மக்கள் ஜனநாயக அரசின் கீழ் இருக்காது.

பல்வேறு மாறுபட்ட பண்பாடுகளோடு  பலவகையான தேசிய இனங்களைக் கொண்ட 130 கோடி மக்கள் வாழும் பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. அதன் ஒற்றுமை பாதுகாக்கப்படுவது மிக முக்கியமான கடமை. பாட்டாளி வர்க்க நலனுக்கும் இது முக்கிய தேவை. இதற்கு கட்சி திட்டம் காட்டும் கூட்டாட்சிப் பாதையே சிறந்த பாதை
புரட்சிக்கு பிறகு அமையவிருக்கும் மக்கள் ஜனநாயக அரசின் ஒவ்வொரு அசைவும்  “மக்களே இறையாண்மை கொண்டவர்கள்.”என்று உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்திருக்கும்.

ஒரு கருத்து

Please start yout discussion here ...