கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (2)

1193
0
SHARE

கட்சித் திட்டம், சில வரலாற்று நினைவுகள்!

–         என்.சங்கரய்யா

1935 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பி.சி.ஜோஷி பொதுச் செயலாளராக ஆனதில் இருந்து கட்சிக்கு ஒரு (கொள்கை,செயல்) திட்டம் இருந்தது. அதனடிப்படையில் முதல் மாநாடு 1943 ஆம் ஆண்டு பம்பாயில் நடந்தது. அப்போது நான் சிறையில் இருந்தேன்.

முதல் மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து பி.ராமமூர்த்தி தலைமையிலான பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் பங்கெடுத்தனர். சிறு எண்ணிக்கையிலான மத்தியக் குழுவும் 3 பேர் மட்டும் கொண்ட பொலிட் பீரோ தேர்ந்தெடுக்கப்பட்டது.  அதில் பி.சி.ஜோஷி முதல் பொதுச் செயலாளர், பி.டி.ரணதிவே, ஜி.அதிகாரி ஆகியோர் மட்டும் அதில் இடம்பெற்றிருந்தனர். மத்தியக் குழுவில் தமிழ்நாட்டில் இருந்து யாரும் இல்லை. சுந்தரய்யா தமிழகத்தை கவனித்தார். இ.எம்.எஸ்  போல சிலர் மட்டும் இடம்பெற்றிருந்தது நினைவில் உள்ளது.

பம்பாய் கெத்வாடி மெயின் ரோட்டில் இருந்த அலுவலகத்தில் இருந்து, கட்சித் தலைமை இயங்கியது. 1943 ஆம் ஆண்டு வரை, 3 வது  கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஒரு பகுதியாக கட்சி இருந்தது. அதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (கம்யூனிஸ்ட் அகிலத்தின் பகுதி)  என குறிப்பிடுவோம். அகிலம் அங்கீகரித்த ஒரு கட்சியாக, அவர்களின் சர்வதேச நிலைப்பாடு, தத்துவார்த்த புரிதலை ஏற்றுக் கொண்டதாக கட்சி செயல்பட்டது. தத்துவார்த்த விசயங்கள் மட்டுமல்ல, அமைப்பு முறை கூட சர்வதேச விதிகளை ஒட்டித்தான் அமைந்தது. அவ்வாறான கட்சிகளையே அகிலம் அங்கீகரித்தது.

மாஸ்கோவில் அகிலத்தின் தலைமையகம் இருந்ததால், சிபிஎஸ்யுதான்(சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி) செயல் அடிப்படையில் அகிலத்தின் தலைவராக இருந்தது. சர்வதேச மாநாடுகளுக்கு பிரதிதிகள் செல்வார்கள். அகிலத்தின் உறுப்பினர் கட்சிகளை அகிலத்தின் முடிவுகள் கட்டுப்படுத்தும். 1943 ஆம் ஆண்டில் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்த சூழலில், அகிலத்தில் இதுகுறித்த விவாதம் வந்தது. சர்வதேச தலைமையானது, ’இனிமேல் பழைய கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஒரு மையத்தில் இருந்து வழிநடத்துவது சாத்தியமில்லை’ என முடிவுக்கு வந்தது. யுத்தத்தின் நடுவிலேயே அந்த அமைப்பு கலைக்கப்பட்டது. அதன் பின்னர் நாம் ஒரு தனித்த கட்சியாக இயங்கினோம். ஆலோசனைகள் இருக்கும். அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பங்கேற்கச் செய்வோம். சர்வதேச கட்சிகளின் வாழ்த்துச் செய்திகளைப் பெற்றுக்கொண்டால் போதும் என்ற முடிவு செய்ட்யும் வரை இது நடந்துகொண்டிருந்தது. அதே சமயம், சர்வதேச அகில இணைப்பில் இருந்த கட்சிகள் மார்க்சிய லெனினிய அடிப்படைகளையும், ஸ்தாபன அமைப்பு வடிவத்தையும் தொடர்ந்து முன்னெடுக்கிறோம்.

1948 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது மாநாடு கல்கத்தாவில் நடைபெற்றது. தோழர் பி.டி.ரணதிவே கட்சி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு அவரின் சில வறட்டுவாத நிலைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்க நேர்ந்ததால் அஜய் குமார்  1951 ஆம் ஆண்டு செயலாளரானார்.1952 ஆம் ஆண்டு இறுதியில் 3 வது கட்சி காங்கிரஸ் மதுரையில் நடந்தது. நாங்கள் அதற்கான ஏற்பாடு செய்தோம். அதில் அஜய் குமார் கோஷ் பொதுச் செயலாளராக தேர்வானார்.

4வது மாநாடு பாலக்காட்டில் நடைபெற்றது நானும் அதன் பிரதிநிதியாக பங்கேற்றேன்.  காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிச் செல்லவேண்டும் என்ற பி.சி.ஜோஷி பிரிவினர் முன்வைத்த முடிவுக்கும், அதற்கு மாற்றான பெரும்பான்மைக்கு எதிராக விவாதம் நடைபெற்றது. சுந்தரய்யா, ராமமூர்த்தி, ஏ.கே.கோபாலன் உட்பட தோழர்கள் காங்கிரஸ் கட்சியுடன் நெருங்குவதை எதிர்த்தோம். நானும் விவாதத்தில் பங்கேற்றேன். தமிழகத்தின் பெரும்பான்மை பிரதிநிதிகள் எதிர்த்தோம். இருப்பினும் அந்த மாநாட்டில் ஒரே தலைமையை தேர்வு செய்தோம்.

இக்காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும், வெகுஜன இயக்கங்களும் பெரிய அளவில் வளர்ந்தன. தேர்தல் முடிவுகளில் மட்டுமின்றி, இடைக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பொது அரசியல் செல்வாக்கிலும் பெரிய போராட்டங்களிலும் அது தெரிந்தது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அதிகாரத்திற்கு வந்தது.

இந்தச் சூழலில் இக்கடமைகளை – வெகுஜன இயக்கத்தை வலுப்படுத்த கட்சி ஸ்தாபனத்தை கெட்டிப்படுத்த, தத்துவார்த்த அடிப்படையை உறுதிப்படுத்த போன்றவைகளை ஆதாரமாகக் கொண்ட ஒரு வெகுஜனக் கட்சியை கட்டுவதில்தான் கட்சி கவனம் செலுத்த வேண்டும் என்ற முடிவிற்கு தலைமை வந்தது. இதனை ஒட்டி பஞ்சாபில் அமிர்தசரஸ் நகரில் 1958 ஏப்ரல் வரை கட்சியின் விசேஷ காங்கிரஸ் நடத்தப்பட்டது. தேசிய கவுன்சில் தேர்ந்தெடுத்தோம்  அதில் 101 பேர் வரை இருந்தனர். இந்தக் கவுன்சில் ஒரே மனதாகத்  தேர்வானது. அதில் தமிழகத்தில் இருந்து நானும்,பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், ரமணி, ஜீவா உள்ளிட்டோர் தேர்வானோம். செயற்குழு இருந்தது. மத்திய செயற்குழு இருந்தது. இப்படி மூன்றடுக்கான முறை உருவாக்கப்பட்டது.

1961 ஆம் ஆண்டில் விஜயவாடாவில் நடைபெற்ற 6 வது மாநாட்டில் மீண்டும் அரசியல் நிலைப்பாடு பற்றிய விவாதம் வந்தது. அந்தக் காலக்கட்டத்தில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முழுமையான கருத்து வேற்றுமைகள் வேகமாக பரவி வந்தது. இந்தியா – சீனா எல்லைப் பிரச்சனைகள் சம்பந்தமாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டினையும், இதன் பால் சோவியத் கட்சியின் பார்வையைப் பற்றியும் இந்தப் பின்னணியில் இந்தியாவில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை உத்திகள் குறித்தும், கட்சி முழுவதும் விவாதம் நடந்தது. அரசியல் குழப்பங்களும், ஒற்றுமையின்மையும் தலைதூக்கியிருந்தது. இதற்கு மேலாக இந்தியாவில் ஆளும் கட்சியாகிய காங்கிரஸ் கட்சி பாத்திரத்தைப் பற்றி, அதன் வர்க்கத் தன்மையைப் பற்றி விவாதங்கள் தீவிரமாகின.

6 வது மாநாட்டிற்கான அரசியல் தயாரிப்பு பணிகளும் முறையே நடந்த வந்தன. அதற்கு முன்னோடியாக கட்சி மாநாட்டில், விவாதிக்க வேண்டிய அரசியல் – ஸ்தாபன நகல் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் தேசிய கவுன்சிலிலும், மத்தியக்குழுவிலும், நடைபெறத் துவங்கின. ஆனால், இவ்வமைப்புகளில் விவாதிப்பதற்கான நகல் அறிக்கைகள் மீதும் கூர்மையான கருத்து மாறுபாடுகள் தோன்றின. இரண்டு ஆவண வரையறைகள் முன்வைக்கப்பட்டன. கூர்மையான விவாதங்களுக்குப் பின் தோழர் அஜய் கோஷ் அவர்களின் தொகுப்புரையை ஆதாரமாகக் கொண்டு கட்சியில் ஒற்றுமையை உத்தரவாதப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இக்கட்டத்தில்தான் டாங்கே அரசுக்கு எழுதியதான கடிதங்கள் வெளியாகின. கட்சிக்கு உள்ளே அதுபற்றிய விவாதம் நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில் இந்திய சீன யுத்தத்தில் இடதுசாரிகளாக கருதப்பட்டவர்களை கைது செய்தார்கள். யாரெல்லாம் அரசுக்கும், ராணுவத்திற்கும் ஆதரவாக உள்ளார்களோ அவர்களை மட்டும் கைது செய்யவில்லை. மற்றவர்களை சீன ஆதரவாளர்கள் என்று கைது மேற்கொண்டனர்.

உள்கட்சி போராட்டத்தில் விவாதங்கள் வலுவடைந்தன. ஆதிக்கம் செய்த குழு அடுத்த குழு மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். டாங்கே கடிதங்கள் பரிசீலனை செய்யப்படவேண்டும். தலைமையில் இருக்கக் கூடாது என்பது போன்ற குரல்கள் எழுந்தன. தில்லியில் 1963 ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியக் குழு கூட்டத்தில் இருந்து 32 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் கூடி ஒரு கட்சி உருவாக்குவதென முடிவெடுத்தோம். அப்போது இ.எம்.எஸ் வெளிநடப்புச் செய்யவில்லை . அஜய் கோஷ் நடுநிலை வகித்தார். 32 பேரில் தமிழகத்தில் இருந்து பிராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், ரமணி வெளிநடப்பு செய்தனர்.

தமிழகத்தில் கும்பகோணத்தில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நிலையில் வெளிநடப்பு நடத்தினோம். தமிழகத்தில் இந்த முரண். தேசிய அளவில் வெளிநடப்பு என்ற சூழலில் வெளிநடப்பு செய்த 32 பேர் தலைமையில் முடிவெடுத்து தெனாலியில் ஒரு கன்வென்சன் நடத்த முடிவு செய்தோம்.

அதில் விவாதம் நடத்தியபோது, இனிமேல் ஒரே கட்சியாக செயல்பட முடியாது என்ற முடிவை அது எடுத்தது. சொந்த அமைப்பு சட்டம், அரசியல் நிலைப்பாட்டுடன் செயல்பட முடிவு செய்தோம். அதன் விளைவாக 7 வது கட்சி காங்கிரஸ் கல்கத்தாவில் கூட்டப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்ற முடிவையும்,ஸ்தாபன அமைப்பில் மத்தியக் குழு, அரசியல் தலைமைக் குழு போன்ற ஏற்பாடுகள் முடிவு செய்யப்பட்டன.

அந்த மாநாடு முடித்து வெளியே வந்த உடனே அரசு அடக்குமுறைஒயை எதிர்கொள வேண்டியிருந்தது. சுமார் ஆயிரம்பேர் கைது செய்யப்பட்டனர். இ.எம்.எஸ்,ஜோதிபாசு என மாநாடு முடிந்து வீடு திரும்புவதற்குள்ளாகவே இந்தக் கைது நடைபெற்றது. கடலூர் சிறையில் 200 பேர் இருந்தோம். எம்.ஆர்.வி, ராமமூர்த்தி,ஏ.பி.என்ஸ், ரமணி, ஹேமச்சந்திரன், உமாநாத் ஆகியோர் இருந்ததாக நினைவு.

1964 ஆம் ஆண்டிலேயே கட்சி வரைவு திட்ட அடிப்படையில் செயபட்டது. கட்சித் திட்டத்தை இறுதி செய்திட ஒரு குழு ஏற்படுத்தினோம். அந்த குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம், அமைப்பு சட்டத்தை வடிவமைத்தது. அதற்கென ஒரு ஆணையம் அமைத்து செயல்படுத்தினோம். 1968 ஆம் ஆண்டு மாநாடு கொச்சின் மாநாட்டுக்கு பின் 1972 ஆம் ஆண்டில் மதுரை மாநாடு நடந்தது.

மக்கள் ஜனநாயக புரட்சி, அதனை நிறைவேற்று வர்க்கங்கள், தொழிலாளி வர்க்கத் தலைமை, விவசாயி தொழிலாளி ஒற்றுமை ஆகியவற்றை நமது திட்டம் இறுதி செய்தது. கட்சி திட்டத்தில் ஒரு திருத்தம் வந்தாலும் அது எப்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஒரு முறையை உருவாக்கினோம். திருத்தம் முன்மொழிதல் தொடங்கி விவாதம் வரை எப்படி நடக்க வேண்டும் என முடிவு செய்தோம்.

கட்சித் திட்டத்தை நவீனப்படுத்தும் பணி பின்னர் மேற்கொள்ளப்பட்டது. அதுதான் இப்போது இறுதியான ஆவணம். கட்சியின் திட்டம்தான் நமக்கு அடிப்படை ஆவணம். ஒவ்வொரு மாநாடு நிறைவேற்றும் தீர்மானமும் கட்சி திட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அமைய முடியும். தீர்மானங்களின் நோக்கம் கட்சி திட்டத்தை நடைமுறைச் சாத்தியமாக்குவதுதான்.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்