கம்யூனிச இயக்க நூற்றாண்டு பயணத்தில் ஒரு மைல்கல்

392
0
SHARE
  • என். குணசேகரன்

இந்தியாவில் உழைக்கும் வர்க்கத்தின் ஆட்சியை ஏற்படுத்தி, சோஷலிச மாற்றத்தை உருவாக்குவதற்கான இலட்சியத்துடன்தான் கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு பயணம் அமைந்திருந்தது. இதற்கான துல்லியமான புரட்சித் திட்டம் பற்றிய சிந்தனைகள் தொடக்க காலத்திலிருந்தே கம்யூனிச இயக்கத்தில் வெளிவந்துள்ளன.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இந்தியப் புரட்சி பற்றிய விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. நீண்ட நெடிய கருத்து மோதல்கள் இதையொட்டி எழுந்தன. 1964ஆம் ஆண்டு கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்ட பிளவிற்கு இதுவே முக்கிய காரணம்.

அதன் பிறகு,கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சிறு சிறு குழுக்களாக பிளவுகள் உருவானதற்கும், இந்தியப் புரட்சிப்பாதை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற பிரச்சினையே முக்கிய காரணமாக அமைந்தது.

இந்தப் பிளவுகள் கம்யூனிஸ்ட் இயக்கத்தை பலவீனப்படுத்தியது என்ற கருத்து இன்றும் பலரிடம் நிலவுகிறது. ஆனால் தெளிவான இலக்கு இல்லாமல் போனால் சோஷலிச இலட்சியப் போராட்டம் திசைமாறி சித்தாந்த ரீதியாக இயக்கம் பலவீனப்பட்டிருக்கும்.

கட்சித் திட்டம், இலக்கு, குறிக்கோள்களை மிகவும் தெளிவாகவும், மார்க்சியம் காட்டும் துல்லியமான பார்வையோடும் உருவாக்கிய பெருமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சாரும்.கட்சித் திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1964ஆம் ஆண்டு உருவாக்கியது.

இதுவே கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு பயணத்தில் முக்கிய மைல் கல்லாக திகழ்கிறது.

திட்டம்லெனினிய பார்வை

மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினராக ஒருவர் செயல்படுவதற்கு கட்சியின் திட்டத்தையும், அமைப்பு சட்டத்தையும் அவர் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பது அடிப்படையான தேவை. இதனை, கட்சி அமைப்புச்சட்டத்தினுடைய பிரிவு 4 வலியுறுத்துகிறது.

கட்சித்திட்டம் அந்த குறிப்பிட்ட நாட்டில் நிலவுகிற திட்டவட்டமான நிலைமைகளை மார்க்சிய, லெனினிய கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்கிற ஒரு ஆவணமாகும். அந்த நிலைமைகளை ஆய்வு செய்து அந்த குறிப்பிட்ட கட்டத்தில் புரட்சிக்கான வழிகாட்டுதல்களை கட்சித்திட்டம் விளக்குகிறது. அந்த கட்டத்தினை புரட்சிகர இயக்கம் வெற்றிகரமாக கடக்கும் வரை அந்த கட்சி திட்டமே வழிகாட்டுகிற ஆவணமாக விளங்குகிறது.

இந்த திட்டத்தினை புரிந்து கொள்ள,தொலைநோக்கு உத்தி, நடைமுறை உத்திகள் பற்றி மார்க்சியப் பார்வையை புரிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்க எதிரிகளிடமிருந்து அரசியல் அதிகாரத்தினை பாட்டாளி வர்க்கம் புரட்சிகரமாக கைப்பற்றுகிற தொலைநோக்கு இலக்கினை கட்சித் திட்டம் கொண்டிருக்கிறது. இந்த தொலைநோக்கு இலக்கினை அடைய அவ்வப்போது பல  நடைமுறை உத்திகள் தேவைப்படும்.  அன்றாட வர்க்கப் போராட்டங்களை நடத்தி, வர்க்க சமன்பாட்டை மாற்ற நடைமுறை உத்திகள் அவசியமானவை.  எனவே, கட்சித் திட்டம் புரட்சிகர தொலைநோக்கு உத்தியை விரிவாகப் பேசுகிறது. கூடிய வரை நடைமுறை உத்திகள் கட்சித் திட்டத்தில் பேசப்படுவதில்லை. கட்சித்திட்டத்தின் தொலைநோக்கு இலக்கினை முன்னெடுத்துச் செல்ல இன்றைய அரசியல் நடைமுறை உத்தியாக இடது ஜனநாயக அணி அமைக்க 21-வது கட்சி காங்கிரஸ் முடிவு செய்தது. இது கட்சித் திட்டத்தின் தொலைநோக்கு இலக்கினை நோக்கி செல்வதற்கு இன்றைய சூழலில் அமைக்க வேண்டிய வர்க்கக் கூட்டணி.

தொலைநோக்கு இலக்கினையொட்டிய அரசியல் நடைமுறை உத்திகள் வகுப்பதற்கு மார்க்சிய இயக்கவியல் அணுகுமுறை அவசியம். ஒரு குறிப்பிட்ட நாட்டிலும், அதைச் சுற்றியிருக்கும் நாடுகளிலும், அதோடு இணைந்ததாக உலகம் முழுவதிலும் நிலவுகிற வர்க்க சக்திகள் குறித்த விருப்பு, வெறுப்பற்ற நிதானமான  ஆய்வுதான் சரியான முடிவுகளுக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் வருவதற்கு உதவிடும்.

“லெனினியத்தின் அடிப்படைகள்” என்ற நூலில் நடைமுறை உத்திக்கும், தொலைநோக்கு உத்திக்குமான தொடர்புகளை ஸ்டாலின் விளக்குகிறார். புரட்சியின் ஒரு கட்டத்தில் பாட்டாளி வர்க்கம் தொடுத்திருக்கும் பிரதான தாக்குதல் குறித்தும், அதற்கான புரட்சி சக்திகள், அவர்களின் துணை சக்திகள் ஆகியவை குறித்தும் தீர்மானிப்பதே தொலைநோக்கு உத்தி எனப்படுவது. புரட்சியின் கட்டம் மாறுகிற போது, அந்த உத்திகள் மாற்றம் பெறும். அந்த கட்டம் மாறாத வரை அந்த உத்திகள் அடிப்படையில் மாறாமல் தொடர்ந்திடும். புரட்சியின் கட்டங்கள் பல ஆண்டுகள் அல்லது பல பத்தாண்டுகள் கூட நீடிக்கக்கூடும். ஆனால் நடைமுறை உத்திகளின் நிலைமை வேறானது. ஸ்டாலின் கூறுகிற போது, புரட்சியின் ஏற்ற இறக்கங்கள், பாட்டாளி வர்க்க இயக்கத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு தகுந்தாற்போல ஒரு குறிப்பிட்ட குறுகிய கால சூழலுக்குள் பாட்டாளி வர்க்கம் எவ்வாறு செயல்பட வேண்டுமென்பதை நடைமுறை உத்திகள் தீர்மானிக்கின்றன.

இந்தியப் புரட்சியின் பரிமாணங்கள்

இந்திய புரட்சியின் முதலாவது கட்டம் இந்திய விடுதலையோடு நிறைவு பெற்றது. அப்போது முதலாளிகள், தொழிலாளி வர்க்கம், விவசாயப் பிரிவினர், குட்டி முதலாளிகள் போன்ற பிரிவினர் ஒன்று சேர்ந்து நடத்திய போராட்டத்தின் விளைவாக இந்திய விடுதலை சாத்தியமானது. இதன் மூலம் இந்திய புரட்சியின் முதலாவது கட்டம் முடிவுக்கு வந்தது. இதில் ஏகாதிபத்தியம் முதன்மை எதிரியாக விளங்கியது.

தற்போதைய இரண்டாவது கட்டத்தில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கடமைகள் நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, பெருமுதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம் ஒன்றுபட்டு உழைக்கும் வர்க்கங்களுக்கு எதிராக அதிகாரம் செலுத்துகிற இந்த சூழலில்  இந்த மூன்றுக்கும் எதிரான வர்க்க கூட்டணி அமைத்து புரட்சிக்கு முன்னேறுவதுதான் இந்திய புரட்சியின் இரண்டாவது கட்டமாக விளங்குகிறது. இந்த கட்டத்தில் அணி சேர வேண்டிய வர்க்கங்களாக தொழிலாளி வர்க்கம், விவசாய பிரிவினர், நடுத்தர வர்க்கங்கள், ஏகபோகமல்லாத முதலாளித்துவ பிரிவினர் ஆகியோர் அடங்குவர். இவை அனைத்தையும் கட்சித் திட்டம் மக்கள் ஜனநாயக அணி என்கிற தலைப்பின் கீழ் ஒவ்வொரு பிரிவினரும் வகிக்கும் பங்கு குறித்து விரிவாக விளக்குகிறது.

திட்டம்லெனின் வரையறுப்பு

கட்சித் திட்டம் – லெனினிய வழிகாட்டுதல்கள்

லெனின் ஒரு மார்க்சிய கட்சித் திட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வரையறுத்துள்ளார்.  கீழ்க்கண்டவை பற்றிய அழுத்தமான நிர்ணயிப்புக்களை கட்சித் திட்டம் கொண்டிருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

1. குறிப்பிட்ட நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் தன்மை;

2. முதலாளித்துவ வளர்ச்சியின் விளைவாக ஏற்படுகிற ஏழ்மை உள்ளிட்ட விளைவுகள், அதையொட்டி தொழிலாளர்களிடையே எழுகிற எதிர்ப்பு நிலை;

3. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை வழிநடத்தும் வழிமுறைகள்;

4. கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் இறுதி லட்சியம்; தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுகிற நடவடிக்கைகள், அதனையொட்டிய சர்வதேச தாக்கம்;

5. வர்க்கப் போராட்டத்தினை அரசியல் தன்மை கொண்ட அரசியல் போராட்டமாக உருவாக்குகிற கடமைகள்;

6. தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கும், அதன் அரசியல் குறிக்கோளுக்கும் எதிராக இருக்கும் ஆளுகிற அதிகார வர்க்கங்களின் நிலை;

7. ஆளுகிற வர்க்கங்களுக்கு எதிராக நடத்துகிற போராட்டத்தில் புரட்சிகர இயக்கம் அணி சேர்க்க வேண்டிய சக்திகள்;

8. அடிப்படை ஜனநாயக கோரிக்கைகளின் பட்டியல்;

9. தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கான கோரிக்கைகளின் தொகுப்பு;

10. விவசாயப் பிரிவினரின் நலனுக்கான கோரிக்கைகள்;

-ஆக இந்த அம்சங்கள் அனைத்தும் கொண்டதாக கட்சித் திட்டம் இருக்க வேண்டுமென லெனினியம் வழிகாட்டுகிறது.

கட்சித் திட்டத்தின் நெடிய வரலாறு

இந்த அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரு திட்டத்தை உருவாக்கிட துவக்க காலங்களிலிருந்தே முயற்சித்து வந்தது. லெனின் உருவாக்கிய “காலனிய ஆய்வுரைகள்”, கட்சித் திட்டம் பற்றிய சிந்தனைகள் உருவாவதற்கான  துவக்க புள்ளியாக அமைந்தது. ஆனால் பல தவறான நிர்ணயிப்புகளும் எழுந்தன. எடுத்துக்காட்டாக, எம்.என்.ராய் காலனி நாடுகளுக்கான ஒரு மாற்றுக்கொள்கை என்பதை முன்மொழிந்தார். அதில் முதலாளித்துவ உறவுகள் வளர வளர இயல்பாக ஒரு நாட்டில் காலனித்துவ அம்சங்கள் மறைந்து நாடு மாற்றத்தை நோக்கி முன்னேறும் என்கிற கருத்தை முன்வைத்தார். இதனை லெனினே நிராகரித்து விட்டார்.

இதுபோன்று  திட்டம் குறித்து பல கருத்துக்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் விவாதிக்கப்பட்டு, கருத்து மோதல்கள் தொடர்ந்து வந்தன. ஆனால், 1920-லேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட போதிலும், வரையறுக்கப்பட்ட ஒரு திட்டத்தினை உருவாக்கிட இயலவில்லை. மீரட் சதி வழக்கிற்குப் பிறகு, 1930ம் ஆண்டு “செயல்பாட்டுக்கான ஒருமேடை – நகல் திட்டம்” என்பது உருவாக்கப்பட்டது. அதற்குப் பிறகு, 1933ம் ஆண்டு நகல் அரசியல் ஆய்வறிக்கை என்பது அன்றைய மத்திய கமிட்டியால் உருவாக்கப்பட்டது. பிறகு 1936ம் ஆண்டு மூன்றாவது ஆவணமாக “செயல்பாட்டுக்கான மேடை”  என்பது உருவாக்கப்பட்டது.

இந்த ஆவணங்களின் மீதான விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் கம்யூனிஸ்ட் இயக்கம் தீவிரமாக விடுதலை இயக்கத்தில் செயல்பட்டு வந்தது. அவ்வப்போது வெளியிடப்படும் கட்சியினுடைய அரசியல் அறிக்கைகளின் வழிகாட்டுதல்கள் அடிப்படையில் நீண்ட காலம் கட்சி செயல்பட்டு வந்தது. விடுதலைக்குப் பிறகு, அரசின் வர்க்கத்தன்மை, இந்திய முதலாளித்துவ வளர்ச்சியின் தன்மை, புரட்சியின் தன்மை, வர்க்க மதிப்பீடுகள் உள்ளிட்ட பலவற்றில் கருத்து மோதல்கள் தொடர்ந்தன. இவை அனைத்திலும் தவறான நிர்ணயிப்புக்களை எடுத்துரைத்து, புரட்சிகர இயக்கத்தை திசை திருப்பும் முயற்சிகள் நடந்தன.

இந்த திருத்தல்வாதக் குழப்பங்களுக்கு எதிராக போராடி சிபிஐ-யிலிருந்து வெளியேறி, 1964ஆம் ஆண்டு தெனாலியில்  மார்க்சிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு நடத்தப்பட்டது. அதில் அடுத்து வரும் கட்சியின்  7வது மாநாட்டில் கட்சி திட்டத்தை உருவாக்குவது என்றும், அதற்கான நகல் திட்டத்தை உருவாக்கும் பணியினை தோழர் பசவபுன்னையா, தோழர் சுந்தரய்யா, தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஆகியோர் மேற்கொள்ள வேண்டுமெனவும் நிச்சயிக்கப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற ஒரு நீண்ட நெடிய விவாதத்திற்குப் பிறகு 7வது கட்சி காங்கிரசில் கட்சித்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆவணம் மட்டுமல்ல

இந்த வரலாறு எடுத்துரைக்கும் ஒரு உண்மையை நாம் மறந்திடக் கூடாது. கட்சித் திட்டம் வெறும் ஆவணம் மட்டுமல்ல. கட்சித் திட்டம் உருவான வரலாற்றின் பின்புலமாக இந்திய, சர்வதேசிய நிலைமைகள், புரட்சிகர செயல்பாடு போன்றவற்றைப் பற்றி மார்க்சிய, லெனினிய நோக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நடந்த கடுமையான உட்கட்சி விவாதத்தில் உருவான ஆவணம் அது. ஆழமான தத்துவார்த்தப் பிரச்சனைகளை ஆழமாக அலசி ஆராய்ந்து அதன் அடிப்படையில் சரியான நிர்ணயிப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த நாட்டில் சோசலிசம் மலர வேண்டுமென்ற தணியாத தேசபக்த அக்கறையின் வெளிப்பாடே இது. வேறு இயக்கங்களில் இப்படிப்பட்ட கூர்மையான அறிவுப்பூர்வமான, அறிவியல் ரீதியான விவாதம் நடந்ததில்லை. இது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்துவம் ஆகும்.

இந்த வரலாறு குறித்த புரிதல் அவசியம். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சிபிஐ தலைமை மேற்கொண்ட திருத்தல்வாத நிலை, நக்சலைட்டுகள் மேற்கண்ட குறுங்குழுவாத நிலை ஆகியவற்றையொட்டி நடந்த சித்தாந்த விவாதம் போன்றவை பற்றிய புரிதலும் தேவை.

1964-இல் உருவாக்கப்பட்ட கட்சித் திட்டம்  2000-ஆம் ஆண்டில் நடந்த ஒரு சிறப்பு மாநாட்டில் தற்கால நிலைமையினை உள்ளடக்கி மேம்படுத்தப்பட்டது.

கட்சித் திட்டத்தின் முக்கிய உள்ளடக்கம்

தற்போதைய இந்திய புரட்சியின் கட்டமாக மக்கள் ஜனநாயக புரட்சி என்பது நமது கட்சித் திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1. புரட்சியின் கட்டம், தொலைநோக்கு நடைமுறை உத்திகள் பற்றிய பார்வை

2. மக்கள் ஜனநாயக  அணியின் வர்க்க சேர்க்கை- பல்வேறு பிரிவினர் வர்க்கங்கள் வகிக்கிற பங்கு

3. தொழிலாளி வர்க்கத்தலைமை

4. மக்கள் ஜனநாயக திட்டம்

– ஆகிய அம்சங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

 லெனினிய பார்வையோடு, கட்சித் திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள தொலைநோக்கு உத்தி கீழ்க்கண்ட அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

1. இந்தியா விடுதலை பெற்ற சூழலும், அதன் முக்கியத்துவமும்; கம்யூனிஸ்டுகளுடைய பங்கும்.

2. இந்திய அரசினுடைய வர்க்கத்தன்மை பற்றிய நிர்ணயிப்பு – முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசாக இந்திய அரசு செயல்படுகிறது என்பதையும், இதற்கு பெருமுதலாளித்துவம் தலைமை தாங்கி வருகிறது என்பதையும் கட்சித் திட்டம் வரையறை செய்கிறது.

3. இந்திய அரசும், அரசாங்கமும் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் நாட்டின் பொருளாதாரத்தை கொண்டு செல்கிற நடவடிக்கையையும், அந்நிய நிதிமூலதனத்தோடு, வலுப்பெற்று வருகிற அதன் கூட்டையும்,  கட்சித் திட்டம் விளக்குகிறது. நவீன தாராளமயக் கட்டத்தில் முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சிப் போக்குகளை கட்சித் திட்டம் துல்லியமாக விளக்குகிறது.

4. விவசாயம், தொழில் மற்றும் வெளியுறவு கொள்கையைப் பற்றிய துல்லியமான மதிப்பீட்டை கட்சித் திட்டம் கொண்டிருக்கிறது.

5. அரசு கட்டமைப்பு மற்றும் ஜனநாயகம் குறித்த விளக்கங்கள் கட்சித் திட்டத்தில் உள்ளன.  உண்மையான ஜனநாயகம் பெரும்பகுதியான மக்களுக்கு மறுக்கப்படுவது குறித்தும், நாட்டின் தேச ஒருமைப்பாட்டுக்கு எதிரான சக்திகளின் வளர்ச்சி, வகுப்புவாத சக்திகளால் மதச்சார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து, அதிகரித்து வரும் சமூக ஒடுக்குமுறை ஆகியன கட்சித் திட்டத்தில் விளக்கப்படுகிறது.

6. மக்கள் ஜனநாயக அரசு அமைகிற போது, அது ஏற்று அமலாக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து கட்சித் திட்டத்தில் விரிவாக விளக்கப்படுகிறது. தொழிலாளிகள், விவசாயிகள், நடுத்தர மக்கள் உள்ளிட்டோரும் வாழ்வாதார கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகிற திட்டங்கள் அனைத்தும் விளக்கப்படுகிறது.

7. மக்கள் ஜனநாயக அரசை அமைப்பதற்கு கட்ட வேண்டிய புரட்சிகரமான மக்கள் ஜனநாயக அணி அதில் அங்கம் வகிக்க வேண்டிய வர்க்க சக்திகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையான விசயங்கள் ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு அந்த நாட்டில் ஆற்ற வேண்டிய புரட்சிகர கடமையை அடிப்படையாகக் கொண்டது. மார்க்சிய – லெனினிய வழிகாட்டிய அடிப்படையில் இந்த அம்சங்கள் அனைத்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தில் விளக்கப்பட்டுள்ளன.

வர்க்கங்களிடையே முரண்பாடுகளும், வர்க்கத் திரட்டலும்

மக்கள் ஜனநாயக அணியில் அங்கம் வகிக்கும் வர்க்கங்கள் மற்றும் பல்வேறு பிரிவினரைப் பற்றி கட்சித்திட்டம் விரிவாக விளக்குகிறது. அந்த விளக்கங்களின் சுருக்கம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது:

“7.5 தொழிலாளி வர்க்கம் மற்றும் அதன் அரசியல் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தலைமையின் கீழன்றி மக்கள் ஜனநாயக முன்னணியை வெற்றிகரமாகக் கட்டவோ, புரட்சியை வெற்றி பெறச் செய்யவோ முடியாது. வரலாற்று ரீதியில், நவீன சமுதாயத்தில் தொழிலாளி வர்க்கத்தைத் தவிர வேறு எந்த ஒரு வர்க்கமும் இந்தப் பணியை ஆற்றக்கூடியதாக இல்லை என்ற உண்மையை நமது காலத்தின் மொத்த அனுபவமும் தெளிவாக உணர்த்துகின்றது.

 “7.6 தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் வலுவான கூட்டணிதான் மக்கள் ஜனநாயக முன்னணிக்கு மையமானதும், அடித்தளமானதும் ஆகும். நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்கவும், நீண்டகால விளைவுகளை தரக்கூடிய ஜனநாயக மாற்றத்தைக் கொணரவும், ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தை உறுதிப்படுத்தவும் இந்த கூட்டணி மிக முக்கியமான சக்தியாக இருக்கும். புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் இதர வர்க்கங்கள் வகிக்கும் பாத்திரம் தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணியின் வலிமை, ஸ்திரத்தன்மை ஆகியவற்றையே இது முக்கியமாக சார்ந்துள்ளது.

 “7.7 விவசாயத்தில் முதலாளித்துவம் ஆழமாக ஊடுருவியுள்ளதால், விவசாயிகளிடையே தெளிவான முரண்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, புரட்சியில் பலவகைப்பட்ட பகுதியினரும் பல்வேறு வகையான பாத்திரத்தை வகிப்பார்கள். நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளித்துவவாதிகளின் ஈவு இரக்கமற்ற சுரண்டலுக்கு கிராமப்புறங்களில் மிகப்பெரும் எண்ணிக்கையில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகள் ஆளாகியுள்ளனர். இவர்கள் தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படையான கூட்டாளிகளாக இருப்பார்கள். நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ நிலப்பிரபுக்களின் கந்துவட்டி மூலதனத்தாலும், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முதலாளித்துவ சந்தையாலும், கிராமப்புறங்களில் உள்ள நடுத்தர விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புற வாழ்க்கையில் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தால் இவர்களது சமூக நிலையும் பல்வேறு வகைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மக்கள் ஜனநாயக முன்னணியில் நம்பகமான கூட்டாளிகளாக இருப்பார்கள்.

 “7.8 விவசாயப் பகுதியினரில் பணக்கார விவசாயிகள் ஒரு செல்வாக்குப் படைத்த பகுதியினர் ஆவர். முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ விவசாயக் கொள்கைகளால் இவர்களில் சில பகுதியினர் ஐயத்திற்கிடமின்றி பலம் பெற்றுள்ளனர். மேலும் சுதந்திரத்திற்குப் பிறகு வந்த ஆட்சிகளாலும் இவர்கள் பலம் பெற்றுள்ளனர். தங்களது பண்ணைகளில் விவசாயத் தொழிலாளர்களை கூலிக்கு அமர்த்துவது என்ற தன்மையின் காரணமாக இவர்கள் முதலாளித்துவ, நிலப் பிரபுத்துவ அணியுடன் இணையும் நிலையில் உள்ளனர். ஆனால் இடைவிடாத விலைகளின் ஏற்ற-இறக்கத் தாக்குதல், ஏகபோக வர்த்தகர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் உள்ள சந்தையின் சூறையாடல் காரணமாக அவர்கள் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசாங்கத்திற்கு எதிராக எழுகிறார்கள். அவர்களிடம் ஊசலாட்ட குணம் உள்ளபோதும் சில தருணங்களில் அவர்களையும் மக்கள் ஜனநாயக முன்னணியில் கொண்டுவரமுடியும். இவர்களும் மக்கள் ஜனநாயகப் புரட்சியில் பங்கு வகிக்க முடியும்.

“7.9 முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியால் நகர்ப்புற மற்றும் கிராமப்புற நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும் எண்ணிக்கையிலான நடுத்தர வர்க்க ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழில்முறையாளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் அறிவு ஜீவிகளின் புதிய பிரிவினர் ஆகியோர் முக்கியமான பகுதியினராகவும், செல்வாக்கு செலுத்தும் பகுதியினராகவும் உள்ளனர்.. மக்கள் ஜனநாயக முன்னணியில் இவர்களை கூட்டாளிகளாக இருக்கவைக்க முடியும்; இருப்பார்கள்; புரட்சிக்காக இவர்களை வென்றெடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த பிரிவினரை ஜனநாயக லட்சியங்களுக்காக அணிதிரட்டுவதில் முற்போக்கான அறிவு ஜீவிகளின் பணி முக்கியமான ஒன்றாகும்.

“7.11. ஏகபோகம் அல்லாத முதலாளிகளாக உள்ள, பெருமுதலாளிகள் அல்லாதவர்கள் பல வழிகளிலும் பெருமுதலாளிகளிடமிருந்தும், பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்தும் சமமற்ற போட்டியைச் சந்திக்கின்றனர். முதலாளித்துவத்தின் நெருக்கடி, பன்னாட்டு நிறுவனங்களின் தங்குதடையற்ற நுழைவு காரணமாக இவர்களுக்கும் அன்னிய மூலதனத்திற்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடையும். பெருமுதலாளி வர்க்கம் தனது நெருக்கடியை தீர்க்க பொருளாதாரத்தில் தனக்குள்ள ஆதிக்கத்தை பயன்படுத்தியும், அரசில் தனக்குள்ள தலைமை பாத்திரத்தைப் பயன்படுத்தியும், தனது பலவீனமான சகோதர வர்க்கத்தின் தலையில் கை வைக்கும். இதனால் பெருமுதலாளி அல்லாத முதலாளிகள் அரசு அதிகாரத்தை எதிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவார்கள். மக்கள் ஜனநாயக முன்னணியில் இவர்கள் ஒரு இடம் பெறமுடியும்.”

மக்கள் ஜனநாயக அணியில் இடம்பெறும் வர்க்கங்கள் மற்றும் பல்வேறு பிரிவினர்களுக்கும்  முதலாளித்துவ அரசிற்கும் ஏற்படும் முரண்பாடுகள்தான் அந்த வர்க்கங்களை திரட்டும் பணிக்கான ஆதாரம்.

மக்கள் ஜனநாயகத்தை நோக்கிய பணி

மக்கள் ஜனநாயக அணி அமைக்கும் நிகழ்வுப்போக்கினை கீழ்க்கண்ட பாராக்கள் விளக்குகின்றன:

“7.16 தொழிலாளி – விவசாயி கூட்டை மையமாகக் கொண்டு அனைத்து தேசபக்த, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையின் மூலம் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் லட்சியங்களை அடைவதற்கான போராட்டம் சிக்கலானதும், நீண்டகால தன்மை கொண்டதும் ஆகும். வேறுபட்ட சூழல்களில் வெவ்வேறு கட்டமாக இதை நடத்த வேண்டியிருக்கும். புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கின் தனித்துவ கட்டங்களில் பல்வேறு வர்க்கங்களும், ஒரே வர்க்கத்தின் பல்வேறு பகுதியினரும், பல வகைப்பட்ட நிலைபாடுகளை எடுப்பார்கள். ஒரு பலமான கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே வெகுஜன இயக்கங்களை வளர்த்தெடுத்து, தொலைநோக்கு இலக்கை அடைவதற்கு பொருத்தமான ஐக்கிய முன்னணி உத்தியை உருவாக்கி, மாற்றங்களை உருவாக்குவதன்மூலம் இத்தகைய பிரிவினரை தனது அணிக்குள் ஈர்க்க முடியும். இத்தகைய கட்சியால்தான் மிகுந்த அக்கறைகொண்ட, சகல தியாகங்களுக்கும் தயாராக உள்ள பகுதியினரை தனது அணிக்குள் கொண்டுவந்து, புரட்சிகர இயக்கத்தின் பாதையில் ஏற்படும் பல்வேறு திருகல்கள், திருப்பங்களின் போது மக்களுக்கு தலைமை தாங்கிச் செல்ல முடியும்.”

இதில்தான் தற்போது கட்சி மேற்கொண்டுள்ள நடைமுறை உத்தியான இடது ஜனநாயக அணியின் அடிப்படை அமைந்துள்ளது.

மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகள் பற்றிய சில விளக்கங்களும் முக்கியமானவை. அது பற்றி கீழ்க்கண்டவாறு விளக்கப்பட்டுள்ளது:

“7.18 மக்கள் ஜனநாயகம் மற்றும் சோசலிச சமூக மாற்றத்தை அமைதியான வழியில் அடையவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) விழைகிறது. வலிமையான வெகுஜன புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுப்பதன் மூலமும், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நடைபெறுகிற போராட்டங்களை இணைப்பதன் மூலமும் பிற்போக்கு சக்திகளின் எதிர்ப்பை முறியடிக்க தொழிலாளி வர்க்கமும், அதன் கூட்டாளிகளும் முயல்வதோடு, அமைதியான வழிமுறையில் இத்தகைய மாற்றங்களை கொண்டுவர பாடுபடுவர். எனினும், ஆளும் வர்க்கங்கள் தங்களது அதிகாரத்தை ஒருபோதும் தாமாக விட்டுத் தரமாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக, சட்டத்திற்கு புறம்பாகவும், வன்முறை மூலமாகவும் இதைப் பின்னுக்குத் தள்ள முயல்வார்கள். எனவே நாட்டின் அரசியல் வாழ்க்கையில் ஏற்படக் கூடிய திருப்பங்கள், திருகல்களையும் கவனத்தில் கொண்டு அனைத்து சூழ்நிலைகளையும் சந்திக்கின்ற வகையில் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும்.”

கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான ஆவணமாக கட்சித் திட்டம் விளங்குகிறது. எனவே கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் போதிக்கும் பணி முக்கியமானது மட்டுமல்ல; புரட்சிகரமான பணியும் கூட. கம்யூனிஸ்ட் கட்சியில் சேருகிறவர்கள் கட்சித் திட்ட லட்சியத்துடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ள வேண்டுமென்று லெனின் அறிவுறுத்தினார். அதற்கேற்ப கம்யூனிச இயக்கத்தின் கட்சி அணிகளை தயார் செய்திட வேண்டும். இதுவே கம்யூனிச இயக்க நூற்றாண்டு நமக்கு சுட்டிக்காட்டும் கடமை.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்