மக்கள் ஜனநாயகத்தில் தேர்தலும், அரசியலும் ….

1541
0
SHARE

குரல்: தேவி ப்ரியா

எடிட்: மதன்ராஜ்

  • ஜி.ராமகிருஷ்ணன்

சுதந்திரப் போராட்ட காலத்தில் அன்னியராட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் முழக்கம். அரசியல் சுதந்திரம்கிடைத்தால் மட்டும் போதாது, நிலப்பிரபுத்துவ ஒழிப்பு, சாதி ஒடுக்கு முறைக்கு முடிவு கட்டுதல், பன்னாட்டு மூலதன (ஏகாதிபத்திய), உள்நாட்டு ஏகபோக முதலாளிகளுடைய ஆதிக்கத்தை தகர்ப்பது போன்ற சமூக பொருளாதார மாற்றத்திற்கான உறுதியான திட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் முன்வைத்தனர். அன்னியராட்சி அகற்றப்பட்டது. ஆனால், சமூகப் பொருளாதார சுதந்திரம் கிடைக்கவில்லை.

இத்தகைய மாற்றம் வேண்டும் என்பதைதான் அரசியல் சட்ட வரைவுக்குழு தலைவரான அண்ணல் அம்பேத்கார் குறிப்பிட்டார். 26.01.1950இல் அரசியல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட அன்று தன்னுடைய உரையில் கீழ்கண்டவாறு பதிவு செய்தார்.

“அரசியலில் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. ஆனால், சமூக பொருளாதார வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு நீடிக்கிறது. அரசியலில் ஒருவருக்கு ஒரு ஓட்டு, அந்த ஓட்டுக்கு ஒரு மதிப்பு என்பது அமலுக்கு வந்துள்ளது. ஆனால், சமூக பெருளாதார ஏற்றத்தாழ்வு நீடிக்கின்ற காரணத்தினால் மக்களின் அன்றாட பொருளாதார சமூக வாழ்க்கையில் ஒருவருக்கு ஒரு மதிப்பு என்பது மறுக்கப்படுகிறது. எவ்வளவு நாளைக்கு இத்தகைய முரண்பட்ட வாழ்க்கையை அனுமதிக்கப்போகிறோம்?”

சமூக பொருளாதார வாழ்க்கையில் சமத்துவத்தை உருவாக்குவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொலைநோக்கு திட்டத்தை முன்வைத்து அந்த லட்சியத்தை அடைய அன்றாடப் பணிகளில் ஒன்றாக இடது ஜனநாயக அணியை கட்டக்கூடிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இடது ஜனநாயக அணியினுடைய முழக்கங்களில் இன்றைய தேர்தல் முறையை மாற்றி விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அமலாக்கிட வேண்டும் என்பதும் முக்கியமான ஒன்று.

விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை ஏன்?

சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் கூடுதல் வாக்குகளைப் பெறுபவர் வெற்றி பெறுபவார் என்பது இன்றைய தேர்தல் முறை (First-Past-The -Post) இம்முறையில் முரண்பாடு உள்ளது. ஒரு தொகுதியில் பதிவான வாக்குகளில் 20 அல்லது 30சதவீதம் வாக்குகளைப்பெற்று ஒருவர் வெற்றி பெறலாம். இது எப்படி சரியாகும்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 31 சதவிகித வாக்குகளைப்பெற்று  50 சதவிகிதத்துக்கு மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளை  பாஜக பெற்றது. 19.3 சதவிகித வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சியால் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. 2009 ஆம் ஆண்டு 18.5 சதவிகித வாக்குகளைப்பெற்ற பாஜக 116 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது முரண்பாடு இல்லையா?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 20 சதவிகித வாக்குகளைப்பெற்ற பகுஜன சமாஜக் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை.

தமிழ்நாட்டில் 27 சதவிகித வாக்குகளைப்பெற்ற திமுகவுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை. ஒரிசாவில் 26 சதவிகிதத்தைப்பெற்ற காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதே மாநிலத்தில் அதே தேர்தலில் 22 சதவிகித வாக்குகளைப் பெற்ற பாஜக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. மேற்கு வங்கத்தில் 30 சதவிகித வாக்குகளைப் பெற்ற இடது முன்னணி 2 தொகுதிகளில்  மட்டுமே வெற்றி பெற்றது.

சிறிய கட்சிகள் ஒரு மாநிலத்தில் பரவலாக பல மாவட்ங்களில் வாக்குகளைப் பெற முடியும். ஆனால், இனறுள்ள தேர்தல் முறையில் இத்தகைய கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது.

விகிதாச்சார தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தினால் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் தொகுதிகளில் வெற்றிபெற முடியும்.

நாடாளுமன்றம் சட்டமன்றம் ஆகிய இரண்டு தேர்தல்களிலும் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை அமலாக்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

சட்ட ஆணையம் சமர்ப்பித்த தனது 170ஆவது அறிக்கையில், இன்றுள்ள தேர்தல் முறையோடு விகிதாச்சார முறையையும் அமலாக்கிட வேண்டும் என்கிற ஆலோசனையையும் முன்வைத்துள்ளது.

தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான மக்கள் ஜனநாயக அரசில்  “திரும்ப அழைக்கும் உரிமையுடன் கூடிய விகிதாச்சார பிரதிநிதித்துவ நெறிமுறையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே அரசு அதிகாரத்தை செயல்படுத்தும் உயர் அதிகார அமைப்பினர் ஆவர்” என்ற தேர்தல் முறையே அமலாக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கட்சித்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும், அகில இந்திய அளவில் மக்களவை மாநிலங்களவை என இரண்டு அவைகள் இருக்கும். பெண்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் உத்தரவாதப்படுத்தப்படும் எனவும் கட்சித் திட்டம் கூறுகிறது.

மக்கள் ஜனநாயக அரசில் ஜனநாயக கட்டமைப்பை கட்சித்திட்டம் உத்தரவாதப்படுத்தியுள்ளது. மனித உரிமை, நாட்டின் எந்தபாகத்திலும் குடியேறும் உரிமை, விசாரணையின்றி யாரையும் சிறையில் அடைப்பதற்கு தடை, மனசாட்சியின் படி நடந்துகொள்ள தங்குதடையறற் சுதந்திரம், விரும்பும் மதத்தின் மீது நம்பிக்கை-வழிபாட்டு உரிமைஈ பேச்சுரிமை, பத்திரிகை சுதந்திரம், கூட்டம் கூடும் உரிமை, வேலை நிறுத்தம் செய்யும் உரிமை, அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் அமைக்கும் உரிமை, மாற்றுக்கருத்து கூறும் உரிமை என பரந்த ஜனநாயக கட்டமைப்பை மக்கள் ஜனநாய அரசு கடைப்பிடிக்கும்.

மக்கள் ஜனநாயக அரசில் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வற்ற, சாதி மத பேதமில்லாத சோசலிசத்தை நிர்மாணிப்பதே தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான இந்த அரசின் நோக்கம். அதே வேளையில் மேற்கண்ட ஜனநாயக கட்டமைப்பை உடைய அரசில் பல கட்சிகள் இயங்குவதையும், செயல்படுவதையும் மக்கள் ஜனநாயக அரசு உத்தரவாதப்படுத்திடும்.

தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையும் அரசியலில் பல கட்சிகள் இயங்கிடும் நடைமுறையையும் மக்கள் ஜனநாயக அரசின் முக்கியமான நோக்கங்களாகும்.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்