பி.எஸ்.கிருஷ்ணன் : அதிகார வர்க்கத்தில் ஒரு கலகக்காரர்

465
0
SHARE

– எஸ்.ஜி. ரமேஷ்பாபு

​”வேகமான பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடைவதற்கு சாதிகளற்ற சமத்துவ சமுதாயத்தை ஆட்சியாளர்கள் உருவாக்க வேண்டும். தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட சமூகங்களோடு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அந்த வளர்ச்சியில் நல்லிணக்கம் ஏற்பட்டு சமூகமும் தேசமும் ஒருங்கிணையும் என்பதை சொல்ல வேண்டும்.” (பக். 361)

பி.எஸ்.கிருஷ்ணன். போகிற போக்கில் கருத்துச் சொல்லி சொல்பவரோ, அல்லது கள யதார்த்தம் புரியாமல் அந்தரத்தில்  நின்று அறிவுரை வழங்கும் மனிதரோ அல்லை . இந்திய சமூக ஏற்றத்தாழ்வுகளின் பின்புலத்தில், அரசியல் அற உணர்வோடு தனது வாழ்வில் எற்றுக் கொண்ட பணியில் சமரசமற்ற போராளியாக வாழ்ந்த ஒரு மனிதர்.

”நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். மற்ற எல்லாப் பிரச்சனைகளையும் நான் பார்க்கிற முறையிலேயே அரசியல் கட்சிகளையும் பார்க்கிறேன். அதாவது தலித், பழங்குடிகள், பொதுவாக பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் குறிப்பாக நலிந்த சாதிகள், நிலம் சொந்தமாக வைத்திருக்காத சாதிகள் ஆகியவற்றிற்கு சாதகமான சார்பு நிலையிலிருந்தே நான் அரசியல் கட்சிகளை பார்க்கிறேன். (பக் 380) இந்த சார்பு நிலை அவர் வாழ்வின் எல்லா நிலைகளிலும் அவருடன் பயணித்தது.

பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுடன் முனைவர் வே. வசந்திதேவி அவர்கள் நடத்திய உரையாடலாக சவுத் விஷன் புக்ஸ் வெளியிட்டிருக்கும்  “சமூக நீதிக்கான அறப்போர்- நலிந்தோர் நலனுக்காக ஓர் வாழ்வின் அர்ப்பணம்”  என்ற நூலில் மேற்கண்ட மேற்கோள்களே அவர் யார் ? அவரது அரசியல் என்ன? எனப் புரிந்துகொள்ள போதுமானது. கடந்த நூற்றாண்டின்  இந்திய சமூகநீதி வரலாற்றை எழுதும் யாரும் இவரை புறக்கணித்துவிட்டு எழுத முடியாத அளவுக்கு இவரது பணி அமைந்துள்ளது. 

பொருளாதார சுரண்டலுக்கும், சகல விதமான சமூக சுரண்டலுக்கும் உள்ளான வர்க்கங்கள் புரட்சிகர உணர்வு பெற்று,புரட்சியின் மூலம் சோஷலிச மாற்றத்தை கொண்டு வரும்போதுதான் உண்மையான விடுதலை சாத்தியமாகும் என்பது மார்க்சிஸ்ட்டுகளின் பார்வை.இந்திய சாதிய அமைப்பின் பின்னணியில் வர்க்கங்களை எப்படி புரிந்து கொள்வது? உடமையற்ற நிலையில் உழைப்பு சக்தியை விற்று மட்டும் வாழும், தொழிலாளர் எல்லோரையும் சரிசமமான தட்டில் நிறுத்திப் பார்க்க முடியாத இந்திய சமூகத்தின் சவாலான பிரச்னையை பி.எஸ். கிருஷ்ணனின் பேசுகிறார். சமூக அங்கீகாரம் மறுக்கப்பட்ட நிலையில் சமூக அங்கீகாரத்திற்கான போராட்டம், ஓயாத ஒன்றாக, நீடிக்கிறது. உடைமையற்ற, உழைப்பு சக்தியை விற்று வாழ்க்கை நடத்துவோர் என்ற வர்க்க ஒற்றுமை உருவாவது, மேற்குறிப்பிட்ட அங்கீகரிப்பு போராட்டத்துடன் இணைந்ததாகவே இருக்க முடியும்.​

கேரளாவில் உயர் சாதி குடும்பத்தில் பிறந்தாலும், இந்திய சமூகத்தின்  அடித்தட்டில் உள்ள  தலித் மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக தனது வாழ்வை அர்பணித்துக்கொண்ட பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுடய வாழ்வு மிகப்பெரிய படிப்பினை. 1955ஆம் ஆண்டு தேர்வு எழுதி 1956 ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தது முதல் அவர் ஒடுக்கப்பட்டோரிடம் காட்டிய அன்பும் அவர்களுக்கு அவர் செய்த சேவைகளும்தான்  அவரது உயர் அதிகாரி அவரைக் குறித்த எதிர்மறை குறிப்புகளை எழுத அடிப்படைக் காரணமானது. எனினும் அது அவரின் வளர்ச்சிக்கு தடையாக அமையவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

​தலித்துகள் மற்றும் பழங்குடி மக்களின் இருப்பிடம் தேடிச்சென்று அவர்களுடன் தங்கி, அவர்களுடன் உணவருந்தி,  அவர்களது துன்பங்களை கற்றறிந்தது மட்டுமல்ல அவர்களுக்காக சாதி சான்றுகளையும் வீட்டுமனைப் பட்டாக்களையும் அவர்களது கிராமங்களிலேயே வழங்கியதில் துவங்கிய அவரது பணி, மண்டல் கமிஷன் அமலாக்க வரைவு உருவாக்குவதில் உச்சத்திற்கு சென்றது. ஆம் மண்டல் கமிஷன் அறிக்கையும் அதை அமலாக்கிய வி.பி.சிங் அரசை எதிர்த்து நடந்த கலவரங்களும், அத்வானியின் ரத யாத்திரையும் அவரது அரசு கலைந்த வரலாறும் எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் நாம் அறியாதது அந்த அறிக்கை அமலாக்கத்தின் பின்னே உள்ள வரலாறு. அதிலும் பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒரு அதிகாரியின் அர்ப்பணிப்புமிக்க பணி.

ஜனவரி 1990இல் மத்திய அரசின் நல்வாழ்வு அமைச்சகத்தின் செயலாளராக பி.எஸ். கிருஷ்ணன் பொறுப்பேற்கிறார். சமூகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் மண்டல் கமிஷன் அறிக்கை மீது எழுதப்பட்ட ​இவரது குறிப்புகளின் அடிப்படையில்தான் அன்றைய பிரதமர் வி.பி.சிங் அரசாங்கம் மண்டல் கமிஷன் அமலாக்கம் என்ற முடிவை எடுத்தது. அரசுப் பணிகளிலும், கல்வியிலும்  பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து வி.பி.சிங் ஆற்றிய மறக்கமுடியாத உரை இவரது தயாரிப்பு என்பது ஆச்சரியமான தகவல். பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகளை எதிர்த்து இவர் கொடுத்த ஆதாரபூர்வமான, வரலாற்று ரீதியான தரவுகள்தான் இன்றைக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தொடரக் காரணம் என்பது ஆர்வமூட்டும் செய்தி. 

​அவரது மற்றொரு சிறந்த பங்களிப்பு வன்கொடுமைத் தடுப்பு சட்டமும் அதன் திருத்த சட்ட அமலாக்கத்திலும் இருந்தது. பி.எஸ்,கிருஷ்ணன் உள்துறை அமைச்சகத்தின் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வுத்துறை இணைச் செயலாளராக பதவியை விருப்பத்துடன் ஏற்கிறார். இதன் விளைவாக தலித் மற்றும் பழங்குடிகள் மீதான வன்முறைகளை கண்காணித்து கொடூரமான வழக்குகளில் மாநில அரசுகளை சிறப்பு நீதிமன்றம் அமைக்க செய்து விரைவாக பாதிகப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்க செய்தார். இந்த சூழலில்தான், ”பட்டியல் சாதியினர் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் – 1989”  இயற்றபட்டது. இதன் உருவாக்கத்திலும் அதைச் சட்டமாக இயற்றுவதிலும் இவரது பங்களிப்பு முழுமையாக இருந்தது. அச்சமயத்தில் பட்டியல் சாதியினருக்கான சிறப்பு ஆணையாளராக இருந்தது இவருக்கு கூடுதலாக உதவியது. ​எனினும் இவரின் ஆலோசனைகள் முழுமையாக ஏற்கப்படவில்லை. உதாரணமாக, வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதற்காக மாவட்ட அளவில் தனி சிறப்பு நீதிமன்றங்கள் அதில் ஒன்று. அதேபோல பல நபர்கள் சேர்ந்து பலரை கொலை செய்தல், பாலியல் வன்புணர்வுகள், ஊரை விட்டு ஒதுக்கிவைத்தல், பொருளாதார ரீதியாக ஒதுக்கி வைத்தல் உள்ளிட்ட குற்றங்களை இந்த சட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற அவரது ஆலோசனைகள் இடம்பெறவில்லை. இதற்காக அவர் ஓய்ந்துவிடவில்லை. இவரது தொடர் முயற்சியின் காரணமாக ”பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடிகள் மீதான வன்கொடுமை தடுப்புத் திருத்தச்  சட்டம் – 2015” ஓரளவு முழுமை பெற்றது. பழைய சட்டத்தில் 22 குற்றங்கள்தான் வன்முறையாக வரையறுக்கப்பட்டன, ஆனால் புதிய சட்டத்தில் 37 குற்றங்களாக விரிவுபடுத்தப்பட்டது. அதாவது அவரது வாழ்வின் 26 ஆண்டுகால போராட்ட வெற்றி இது.​

இவை அனைத்திற்கும், சமூகத்தில் நடந்த போராட்டங்களின் தாக்கமும் காரணம் என்பதையும் எவரும் மறுக்க முடியாது. ஒடுக்கப்பட்டோர் மீதான தாக்குதல், பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் ஆகியவற்றால் உருவான கழிவிரக்கம் காரணமாகவே இத்தகைய சட்டம் உருப்பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே இவை சலுகைகளாக பார்க்கப்படுகின்றன. சமூக உரிமையை அடைவதற்காக இந்தியாவில் எண்ணற்ற போராட்டங்கள் நடந்துள்ளன. நிலம் என்கிற உடமையின் மூலம், உழைப்பு சக்தியை பெற்றுக் கொள்ளும் நிலப்பிரபுத்துவம், அளிக்க வேண்டிய நியாயமான கூலி, சமூக அமைப்பு முறையில் சாதி காரணமாக அடித்தளத்தில் இருப்பதை, சுரண்டலுக்கான உரிமம் என கருதுவது கூடாது என்ற கோரிக்கைகளும் போராட்டங்களும் மிகை மதிப்பீடு செய்யப்படாவிட்டாலும், குறை மதிப்பீடு செய்ய முடியாதது. அதில் கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்த போராட்டங்களும் அதில் களப்பலியான வெண்மணி தியாகிகளும், பழங்குடி மக்களும் நினைவு கூற வேண்டியவர்கள். சமூக இயக்கங்களும் மறுக்கப்பட முடியாதவை.

​2004ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச அரசு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பிற்பட்டோராக அறிவித்து அவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீட்டையும் அறிவித்தது. ஆனால் ஆந்திர உயர்நீதிமன்றம் ”மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் இதுபற்றி மாநில அரசு கலந்தாலோசிக்கவில்லை. மேலும் இந்த 5 சதத்தையும் சேர்த்தால் இட ஒதுக்கீடு மொத்தத்தில் 51 சதவிகிதம் ஆகிறது. இது இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதி மன்றம் நிர்ணயித்த உச்சவரம்பான 50 சதவிகிதத்தை தாண்டுகிறது” என இரு  காரணங்களை கூறி இந்த ஒதுக்கீட்டை இரத்து செய்தது.

​இந்த நிலையில் ஆந்திரப் பிரதேச அரசு முஸ்லீம் சமூகத்தினரிடையே உள்ள சமூக அளவிலும் கல்வி ரீதியாகவும்  பிற்படுத்தப்பட்ட சமூக பிரிவுகளை அடையாளம் காண்பதற்கு பி.எஸ்.கிருஷ்ணன் உதவியை நாடியது. 2007ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச அரசின் பிற்படுத்தப்பட்ட சமூக பிரிவினரின் நல்வாழ்வுக்கான சட்ட ஆலோசகராக, மாநில அரசின் கேபினட் அமைச்சர் அந்தஸ்து உடைய பதவியில் அவர் அமர்த்தபட்டார்.

ஆந்திர முஸ்லீம்கள் மத்தியில் சமூக அளவில் பிற்படுத்தப்பட்ட 13 சமூக பிரிவுகளை அடையாளம் கண்டு, (மதம் மாறினாலும் சமூக ஏற்றத்தாழ்வு இருக்கிறது) அவர்களை மாநில பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் E என்று தனிப்பிரிவை உருவாக்கி சமூக நியாயத்தைப்பெறவும், நீதிமன்ற நியாயத்தை பெற அவர்களுக்கு 4 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குமாறும் ஆலோசனை வழங்கினார். அவரது அறிக்கையின் விளைவுதான் இன்று ஆந்திராவில் இஸ்லாமிய சமூகம் 4 சதவீத இட ஒதுக்கீட்டால் பயன் பெறுகிறது. 

​விடுதலை இந்தியாவில் தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும், துப்புரவு தொழிலாளிகளுக்கும், மதச் சிறுபான்மையினருக்கும்  அவர்களது வாழ்வில் சாதகமான சில அம்சங்களேனும் இந்த அரசு செய்திருக்கும் எனில் அதில் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பங்களிப்பும் உள்ளது என்பதே உண்மை. 

​இந்நூலை முன்வைத்து பல விவாதங்களை முன்னெடுக்கலாம், எனினும் எனக்கு கீழ்காணும் இரண்டு விவாதங்கள் முக்கியமாகப் படுகிறது. இது வாசிப்போரை பொறுத்து மாறலாம்.

​1. பழங்குடிகள் உரிமைகளையும் நாட்டின் வளர்ச்சியையும் முரண்படுத்த தேவையில்லை. பழங்குடி மக்களின் நிலங்களை பாழ்படுத்தாமல் நவீன பொருளாதார செயல்பாட்டை முன்னுக்கு கொண்டுவரவேண்டும். பழங்குடி பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்ற ஆலோசனை அவர் முன்வைக்கிறார். ஆனால் இந்தியாவின் கடந்த அரை நூற்றாண்டு கால அனுபவம் அவரின் இந்த கூற்றை அல்லது ஆசையை கேள்விக்குள்ளாக்குகிறது. வளர்ச்சி என்றால் என்ன? யாருக்கான வளர்ச்சி என்ற கேள்விகளோடு இதை அணுகும்போது வனங்களில் வாழ்ந்த மக்களும் கடற்கரையோர மக்களும் பாரம்பரியமான தங்கள் நிலங்களிலிருந்து விரட்டப்பட்ட பின்பு அவர்களுக்கு எந்த வளர்ச்சியும் அங்கு இல்லை என்பதும், அவர்களுக்கும் அங்கு வரும் நிறுவனங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதுமே   யதார்த்தமாய் இருக்கிறது.

​2.  இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு குறிப்பிடத்தக்க மாறுதல்களை செய்துள்ளார் பி.எஸ்.கிருஷ்ணன். அவரது சில முயற்சிகள் மீண்டும் பின்னோக்கி தள்ளப்படலாம். உதாரணமாக பழங்குடி பள்ளிகளில் பழங்குடி மக்களே ஆசிரியர்களாக இருக்கலாம் என்பது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள சட்டம். இந்த சட்டத்தை சமீபத்தில் உச்ச நீதிமன்ற ஐந்து பேர் கொண்ட constitution-bench இந்த ஒதுக்கீடு, உச்சநீதிமன்ற  இடஒதுக்கீடு வழிகாட்டுதலுக்கு எதிராக உள்ளதாகக் கூறி, அதனை தள்ளுபடி செய்துள்ளனர். இடஒதுக்கீடு பிரச்சனையைத் தாண்டி 5ஆவது அட்டவணையின் கீழ் ஆதிவாசி இன மக்களுக்குக் கிடைத்து வரும் சிறப்பு அரசியல் சாசன விதிகளின் மீது இத்தீர்ப்பு தாக்குதல் தொடுத்துள்ளது.

பாபாசாகேப் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுவந்த பல சீர்திருத்தங்கள், சட்ட நடவடிக்கைகள் ஆளும் வர்க்கத்தால் பலமுறை சிதைக்கப்பட்டுள்ளன. அதில் அத்திபூத்தாற்போல பி.எஸ்.கிருஷ்ணன்கள் தோன்றி சில மகத்தான பணிகளை செய்யலாம். ஆனால் இப்போதுள்ள அரசியல் சட்டம் இந்திய ஆளும் வர்க்க நலனையே முன்னிறுத்துகின்றன என்கிறபோதும்  அரசியல் அமைப்பு சட்டத்தில் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்கு பயன்படுத்திய  பி.எஸ்.கிருஷ்ணனை போன்ற சிறந்த மனிதர்களின் உழைப்பு மேன்மையுற வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் அமலாக்கப்படும் பல திட்டங்கள்  முதலாளித்துவ மூலதன
வளர்ச்சிக்கே உதவுகிறது. சமூகத்தின் பெரும்பான்மையான உழைப்பாளர்களையும், இயற்கையையும் ஏகபோகமாக்கும் பணியை செய்து வருகிறது. இந்துத்துவா ஆட்சியாளர்கள் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக, மூலதன ஏகபோகத்திற்கு உதவுகின்றனர் என்பதையும் கணக்கில் கொண்டு, இந்த அமைப்பு முறையை மாற்றும் பணியில் நம்மை அர்ப்பணித்துக் கொள்வதே  அடிப்படை பணியாகும்.

​கல்வியாளர் வசந்திதேவி அவர்கள் அவரது வாழ்வின் சாரத்தை புரிந்துகொண்டு, அவரது வாழ்வில் எந்ததெந்த முக்கிய விஷயங்களை தொகுக்க வேண்டுமோ அவற்றை மிகுந்த அக்கறையுடன் கேள்விகளாக தொகுத்துள்ளார். மிகச் சிறந்த புத்தகங்களை தமிழக அரசியல் களத்திற்கு வழங்கியுள்ள சவித் விஷன் பதிப்பகம் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது.  வழக்கறிஞர் ஆனந்தன் உள்ளிட்ட குழுவினரின் முயற்சி பாராட்டுக்குரியது. 

சமூக நீதிக்கான அறப்போர்- நலிந்தோர் நலனுக்காக ஓர் வாழ்வின் அர்ப்பணம்

வெளியீடு: சவுத் விஷன்  பக்கம்: 560  ​விலை: ரூ. 350.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்