பி. எஸ். கிருஷ்ணன்: சமூக நீதிக்கானக்கான குரல்

441
0
SHARE

சு. லெனின் சுந்தர்

ஓய்வு பெற்ற அதிகாரிகள் தங்கள் பணிக்கால அனுபவங்களை புத்தகமாக எழுதுவது புதிதல்ல. எனினும் பி. எஸ். கிருஷ்ணன் அவர்கள் முனைவர். வசந்தி தேவி அவர்களுடன் உரையாடி கேள்வி பதிலாக வந்திருக்கும் “சமூக நீதிக்கான அறப்போர்” என்ற புத்தகம் வேறு வகை. 

கேரளத்தை பூர்விகமாக கொண்டு, ஆந்திராவில் பெரும் காலமும் மைய அரசு பணியில் சில ஆண்டுகளும் என 1956 முதல் 1991 வரை பணியில் இருந்த திரு. பி எஸ் கிருஷ்ணன் அவர்களுடைய அனுபவம் அதிகார மையத்தை நோக்கி வினா எழுப்பியதாகும். பிறப்பால் உயர் குடியில் பிறந்தாலும் பட்டியலின, பழங்குடி, மிகப் பிற்படுத்தப்பட்டோர் வாழ்வுரிமை உயர்ந்திட அவரது பணி அமைந்திருந்ததை இப்புத்தகம் வெளிக்கொணர்கிறது.

பல ஆயிரம் ஆண்டுகளாக நீடித்திடும் சாதிய சமூக அமைப்பு முறையும், அதன் வழிபட்ட சுரண்டலால் தாழ்நிலைக்கு சென்ற பட்டியலின, பழங்குடி மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் வாழ்நிலை என விரிந்து செல்லும் பின்புலத்தில் சமூக நீதி நடவடிக்கைக்கான செயல் திட்டம் ஒன்றையும் திரு. பி எஸ். கிருஷ்ணன் முன் மொழிகிறார்.

அழகாக அமைக்கப்பட்ட 41 கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில் விளக்கங்கள் அரசியல் களத்தில் எளிய மக்களோடு நிற்போர் அவசியம் புரிந்து கொள்ள வேண்டியது. SC/ ST வன்கொடுமை சட்டம் 1989இல் உருவானதிலும்,  அதனை அரசியல் சாசன திருத்தம் மூலம் 1990ஆம் ஆண்டு  அதற்கு அரசியல் சாசன அந்தஸ்தை உருவாக்கிக் கொடுத்ததும் அவரது பங்களிப்பாகும்.

1990-91இல் மண்டல் கமிஷன் பரிந்துரை அமல் செய்ய மறைந்த வி பி சிங் அரசுக்கு உதவியது… அது உச்ச நீதி மன்றத்தில் வழக்கானபோது இரவு பகல் பாராது பணியாற்றியது…. வி பி சிங் அவர்களது பாராளுமன்ற உரையினை தயாரித்து கொடுத்தது…(பொதுவாக அதிகாரிகள் இத்தகைய பணிகளையும் செய்வதுண்டு) என பிரமிப்பை தரும் அவர் பணிகள்…1993-ல் மனிதர்களே மனிதக்கழிவுகளை அகற்றும் நிலை ஒழிப்பு மற்றும் உலர் கழிவறை தடுப்பு சட்டத்தை உருவாக்கியதில் திரு. பி எஸ் கிருஷ்ணன் அவர்களின் பங்கு..

1996ல் SC/ ST /MBC  சமூக நீதிக்கான தேசிய குழு மூலம் அன்று அமைந்த ஐ மு கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி. ராஜா, ஜெயராம் ரமேஷ் ஆகியோரை சந்தித்து பேசியதை நினைவு கூறுகிறார். அப்போது அவரது ஆலோசனை முழுவதும் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் ஏற்று கொள்ளப்பட்டது குறித்தும் குறிப்பிடுகிறார்.

மலம் அள்ளும் கொடுமையில் இருந்து ஒடுக்கப்பட்டோரை மீட்டு, அவர்களுக்கு மாற்று பணியாக ரயில்வே கேன்டீன் சர்வர் பணி, பால் விநியோகம் என முன் மொழிகிறார். கிராம கர்ணம் பணிக்கு தலித் ஒருவரை 1950களின் இறுதியில் நியமித்ததை பெருமையுடன் சொல்கிறார். இவை அன்றைய சமூக கட்டத்தில், புரட்சிகர செயலாக பார்க்கப்பட வேண்டியதும் கூட. 

பட்டியலின, பழங்குடி மக்கள் மட்டுமின்றி, மீனவர், இதர பிற்படுத்தப்பட்டவர் நலன் குறித்தும் பல முன்மொழிவுகளைச் செய்துள்ளார். பிற்படுத்தப்பட்டவர் நலன் மேம்பட கல்வி, மேற்கல்வி, பணி வாய்ப்பு உள்ளிட்டவற்றில் செய்ய வேண்டியதாக அவர் முன் மொழியும் ஆலோசனைகள் பரவலாக ஏற்புடையதே. குறிப்பாக பாரம்பரிய கைத்தொழில் செய்வோர், மீன் பிடி தொழில் செய்திடும் மக்கள் என அனைத்துவகையிலும் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வாழ்வுரி மை,  தொழில்நுட்பம், சந்தைப்படுத்த உதவி, நிதி உதவி என முன்வைக்கிறார். கல் குவாரியில் அவர்களே அதனை நடத்தும் வண்ணம் கிரஷர் எந்திரங்கள், லாரிகள், பெண் தொழிலாளர்களுக்கெஎன பிரத்தியேக வசதி, குழந்தை காப்பகம் என்பது சமூக உரிமைகளின் பகுதியே. இவை சமூக ஏற்றத் தாழ்வை விரட்டி, பொருளாதார முன்னேற்றத்திற்கும், சுய முன்னேற்றத்திற்குமான உழைப்பு முறை குறித்த வழிகாட்டுதல்கள் ஆகும். 

நிலம், அதன் மீதான உரிமை பட்டியலின, பழங்குடி மக்களிடம் இருப்பது பற்றி அவர் தன் காலம் முழுவதும் முயன்று இருப்பது சிறந்த பின்பற்றுதலுக்கு உரியதாகும். நில உரிமை தொடர்பாக பல பணிகள் செய்துள்ள பி எஸ் கிருஷ்ணன் அவர்கள் மனைப்பட்டா உள்ளிட்ட அம்சங்களில் ஆந்திர  கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் மேற்கு வங்க கம்யூனிஸ்ட் இடதுசாரி அரசு குறித்தும் நேர்மறையான கருத்துக்களை சொல்லியுள்ளார்.

மறைந்த கே ஆர் நாராயணன் அவர்கள் குடியரசு தலைவராக இருந்தபோது 2008இல் அமைக்கப்பட்ட ஆளுநர்கள் கமிட்டி நாடு முழுவதும் இருந்த நிலம் குறித்து ஆய்வு செய்ததை நினைவு கூறுகிறார் .அன்றைக்கு மகாராஷ்ட்ர மாநில ஆளுநராக இருந்த திரு. பி சி அலெக்சாண்டர் தலைமையில் அமைந்த இக்குழு நிலமற்றோர் அனைவரும் பயன் பெறும் வண்ணம் போதுமான நிலம் நாட்டில் இருப்பதாக சொன்னது. அதை உறுதி செய்யும் வகையில் 2011-ல் அமைந்த திரு. பி எஸ். கிருஷ்ணன் தலைமையிலான குழு பூதான நிலங்கள் உட்பட ஆய்வு செய்து அறிக்கை தந்தது.

வேறுபாடுகளும் மார்க்சிஸ்ட் கட்சியும்

 “இடதுசாரிகளின் சாதி, தீண்டாமை பிரச்சனை அணுகுமுறை” குறித்த 28 வது கேள்விக்கு (பக்கம் 343/344/345) சாதிய ஒடுக்குமுறை குறித்து இடதுசாரிகளுக்கு புரிதல் இல்லை என சொல்கிறார். இவை போன்ற விமர்சனங்கள் இடதுசாரிகள் மீது வைக்கப்படுவது ஏற்புடையதாக இல்லை. ஏனெனில் சமூக ஒடுக்குமுறைகளைஇடதுசாரிகள் எதிர்த்த அளவிற்கு வேறு யாரும் எதிர்த்துப் போராடவில்லை என்கிற உண்மையும், அது தனது வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதிஎன்று கம்யூனிஸ்டுகள், குறிப்பாக மார்க்சிஸ்டுகள் தமது திட்டத்திலேயே முன்வைத்துள்ளனர்.

“சாதிய ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டுவதில், முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ முறை தோல்வி கண்டுள்ளது. இதனால் தலித் மக்கள் மிக மோசமான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். தலித் மக்கள் தீண்டாமை மற்றும் இதர அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்” என மார்க்சிஸ்ட் கட்சி திட்டம் (பாரா 5:10)

“தலித் மக்களில் மிகப் பெரும் பகுதியினர் உழைக்கும் வர்க்கத்தின் பகுதியாக உள்ள நிலையில், சாதிய முறைக்கும், தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் எதிரான ஒற்றுமை என்பது உழைக்கும் மக்களின் ஒற்றுமையே ஆகும். சமூக சீர்திருத்த இயக்கங்கள் மூலம் சாதிய முறை மற்றும் அதன் அனைத்து வடிவத்திலான சமூக ஒடுக்குமுறையை எதிர்த்து போராட வேண்டியது ஜனநாயகப் புரட்சியின் முக்கியமான பகுதியாகும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது வர்க்க சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகும்”. மார்க்சிஸ்ட் கட்சி திட்டம் (பாரா 5:12)

சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே எளிய மக்களை திரட்டும் நிகழ்ச்சி நிரலில் சாதி ஒடுக்குமுறை குறித்த புரிதலோடுதான் கம்யூனிஸ்டுகள் செயல்பட்டுள்ளனர். 1932-33 ஆண்டுகளில் ஒடுக்கப்பட்ட மக்களை குருவாயூர் கோயிலில் ஆலய பிரவேசம் செய்விக்க போராடி தாக்குதலுக்கு ஆளானவர்கள் கிருஷ்ண பிள்ளையும் ஏ கே கோபாலனும்,  தமிழகத்தின் வெண்மணி வரை ஏராளமானவற்றை நம்மால் சுட்டிக் காட்ட இயலும்.

மேற்கு வங்கம், கேரளாவில் நில சீர்திருத்தங்கள் மூலம் பட்டியலின, பழங்குடி மக்களுக்கு நிலங்கள் சென்றடைய வேண்டும் என்பிதை இலக்காக கொண்டே செயல்படுத்தப்பட்டது. . மேற்கு வங்கத்தில் 1977இல் அமைந்த தோழர். ஜோதிபாசு தலைமையிலான இடது முன்னணி அரசு மக்கள் தொகையில் 23 சதம் உள்ள பட்டியல் பழங்குடி மக்களுக்கு 56% சதவீத நிலங்களை விநியோகித்தது. அதாவது, மொத்தம் அடையாளம் காணப்பட்ட 27 லட்சம் ஏக்கர் நிலத்தில், பத்து லட்சத்து எழுபதாயிரம் ஏக்கரை அரசு கையகப்படுத்தி நேரடியாக 26 லட்சத்து 44,000 பேருக்குத் தந்தது. இதில் 14 லட்சத்து எண்பதாயிரத்து அறுநூற்று நாற்பது பேர் பட்டியலின, பழங்குடி மக்கள். இது தவிர, குத்தகைதாரர் நில பகிர்வில் பதினோரு லட்சத்து எட்டாயிரம் ஏக்கர் நிலம் 5,44,000 பேருக்கு பிரித்துத் தரப்பட்டது. இதில் 42% அதாவது நான்கு லட்சத்து முப்பத்தி இரண்டாயிரம் ஏக்கர் நிலம் பட்டியலின, பழங்குடி மக்களுக்கு தரப்பட்டது.

இடதுசாரிகள் ஆட்சியின் போதுதான் பஞ்சாயத்து பொறுப்புகளில் முறையான இட ஒதுக்கீடு முறையை அமலாக்கியதோடு பொது பிரிவிலும் பட்டியலின மக்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது. நாட்டிற்கே முன் உதாரணமாக அரசியல் அதிகாரம் பட்டியல், பழங்குடி மற்றும் பெண்களுக்கு என அதிகாரப் பகிர்வில் நியாயம் வழங்கப்பட்டது. 

இவை இடதுசரிகள் ஆட்சிப்பொறுப்பில் இல்லாத இடங்களில் போதுமான அளவு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமூக நீதிக்கான போராட்டங்களும், சமூகநீதிக்கான முழக்கங்களும்  ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் பங்கு வகித்திருந்த போதும், மேற்படி அதிகாரம் சமூகநீதியை அவரவர் சமூகத்துடன் சுருக்கிக் கொள்ளும் ஆளும் வர்க்க சிந்தனையையே வெளிப்படுத்தி இருக்கிறது.  இந்த பின்னணியில் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், வர்க்க போராட்டத்துடன் இணைந்த ஒன்று  என்று மார்க்சிஸ்ட் கட்சி முன்வைக்கும் முழக்கம குறிப்பிடத்தக்கது. 

மேற்கண்ட சில விமர்சனங்களை உள்ளடக்கிதாக “சமூகநீதிக்கான அறப்போர்” என்கிற இந்நூல் இருந்தாலும் சமூக நீதிக்கான போராட்டங்களை மேலும் முன்னெடுக்க இந்நூல் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்