தேர்தலுக்கு முன்னும் பின்னும் கலவரங்கள் !

1127
0
SHARE

வாக்கு வங்கி  உருவாக்கத்தில், அரசியல், சேவை ஆகியவற்றைப் போல் கலவரமும் முக்கிய இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. மதத்தின் பெயரில், சாதியின் பெயரில், இனத்தின் பெயரில், மொழியின் பெயரில் இந்தக் கலவரங்கள் தூண்டப்படுகின்றன. வகுப்புவாதம் இதைத் தீவிரமாக செயலாற்றும் நோக்கம் கொண்டது. வகுப்புவாதம் ஒரு அடையாளத்தை முன்னிறுத்தி மற்றொரு அடையாளத்தின் மீது வெறுப்பை உருவாக்குகிறது.

இத்தகைய குணம் கொண்ட, ஃபாசிசத் தன்மையை நோக்கி செல்லும் ஒரு அரசை கட்டமைக்க, இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் அமைப்புகள் இயங்கி வருகின்றன. பாபர் மசூதி, ராமர் பிறந்த இடத்தில் செயல்பட்டு வந்த ராமர் கோவிலை அழித்து அதன் மீது, கட்டப்பட்டதாகும், என பிரச்சாரம் செய்தது. இதன்மூலம் பாஜக தனது நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டது. சில மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றுதலும் நடந்தது. வாக்குவங்கி உருவாக்கத்தில், பாபர் மசூதி மற்றும் ராமருக்கு கோவில் கட்டுவது என்ற பிரச்சாரம், முக்கியப் பங்கு வகித்தது.

பாபர் மசூதியை இடித்து, ராமர் கோவிலைக் கட்டுவோம், என்ற முழக்கத்துடன், கிராமத்திற்கு ஒரு செங்கல் சேகரிக்கும் நிகழ்ச்சியும், பாபர் மசூதியை நோக்கி ரத யாத்திரை என்ற அணிவகுப்பும், சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கியது. பதட்டம் ஒவ்வொரு தனிநபருக்குள்ளும் அச்சமாக வடிவெடுக்கிறபோது, தன் அடையாளம் சார்ந்த மக்களுடன் ஐக்கியமாவது என்பதை பெரும்பான்மை வகுப்புவாதமும், அதைத் தொடர்ந்து சிறுபான்மை வகுப்புவாதமும் வளர்ச்சி பெறுவதை உறுதி செய்தது. இந்த அனுபவத்தை இந்தியாவில் உள்ள பாஜக வும், இந்துத்துவ அமைப்புகளும் தொடர்ந்து பின்பற்றி வருகின்றன.

கலவரங்கள் செய்த காரியங்கள்:

வகுப்பு வாத சக்திகளின் வளர்ச்சிக்கு, எப்போதுமே, மதவாதப் பதற்றங்கள் வழிவகை செய்து வந்துள்ளன. 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை வகுப்புவாதக் கலவரங்கள் இந்தியாவில் அநேகமாக இல்லை. 20ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் பசுவதை எதிர்ப்பு, பன்றிக்கறி உண்ணுதல், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களின் வழியாக செல்லும் இந்து ஊர்வலங்களில் ஒலி எழுப்புதல் ஆகிய காரணங்களால் மதக்கலவரங்கள் எழுந்தன. 1945 – 46 ஆண்டில் 72 கலவரங்கள் நடந்ததாக விவரங்கள் உள்ளன.

இந்த மதக் கலவரங்கள், மதவாத அரசியலின் வெளிப்பாடாக மட்டும் அல்லாமல், பெரும்பான்மை வகுப்புவாதத்தை நோக்கி, நகர்புற ஏழைகள் மற்றும் தலித் மக்களை ஈர்க்கப் பயன்பட்டுள்ளது, என்று, ’நம்மை சூழும் அபாயத்தை எதிர் கொள்ள’ என்ற பிரசுரத்தில், முனைவர். த. செந்தில்பாபு கூறுகிறார். இந்தியாவைப் பொறுத்த அளவில் பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதமாக இந்துமதம் குறிப்பிடப்படுவதால், இந்து மதத்தின் வளர்ச்சியைக் காட்டுவதற்காக ஒரு எதிரி தேவைப்படுகிறது. நமது நாட்டில் அந்த எதிரிகளாக முஸ்லீம்களும், கிறித்துவர்களும் அடையாளம் காட்டப்படுகின்றனர்.

அண்மைக் கால உதாரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள், சிலைகளுடன் பெரும் ஊர்வலங்களாக வளர்ச்சி பெற்றுள்ளதை குறிப்பிடலாம். சிறிய கோவில் விழாக்கள் கூட பிரமாண்ட செலவில் நடத்தப்படுவதும் இந்தப்பின்னணியில்தான். இந்துத்துவா என்ற சொல்லை உருவாக்கிய, விநாயக் தாமோதர் சவர்க்கார், “இந்துத்துவா என்பது இந்துயிசத்துடன் எவ்விதத்திலும் சம்மந்தப்பட்டதில்லை” எனக் கூறியுள்ளார். இந்துத்துவா என்பது அரசியல் திட்டம், அதனடிப்படையில் அரசியல் ஒழுங்கை எப்படிக் கட்டியமைப்பது, என்பதை கோல்வாக்கர் கூறியுள்ளார் என சீத்தாராம் யெச்சூரி தனது புத்தகமான, ’மோடி மோடி அரசாங்கம் வகுப்பு வாதத்தின் புதிய அலை’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசியல் திட்டம் இந்து மத மக்களிடையே முழுமையாக ஏற்புடையதாக அமையவில்லை. கலவரங்களை அரங்கேற்றுவதன் மூலம், துவக்க கட்டமாக அரசியல் திட்டத்திற்குள், வளைக்கப்படுகின்றனர்.

கலவரங்கள் மூலம் ஆட்சியை பிடித்த பின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற, பாஜக கடந்த காலத்தில் குஜராத் மாநிலத்தில், மேலும் கலவரங்களை உருவாக்கியதையும், அம்மாநிலத்தின் சிறுபான்மையினரை அச்சம் கொள்ளச் செய்ததையும், நம் சமகால வரலாற்றில் கண்டிருக்கிறோம். இந்துத்துவாவை தங்களின் அடையாள அடிப்படையில் அறவே வெறுக்கும், இஸ்லாமியர்களின் ஒரு பகுதியினர் கூட பாஜகவிற்கு வாக்களிக்கும் அளவிற்கு அச்சம் ஊட்டப்பட்டனர், என்பதை இந்தியாவின் தேர்தல் ஆணையம் குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் நடத்திய தேர்தலின்போது குறிப்பிட்டுள்ளது.

2002 பிப்ரவரி இறுதியில் நடந்த கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு நிகழ்வைத் தொடர்ந்து, நடந்த கலவரத்தில் பல ஆயிரம் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். மாநிலத்தில் 6 மாதங்களுக்குப் பிறகும் இயல்பு நிலை திரும்பவில்லை. ஆனால் மாநில அரசு, சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது.  தேர்தல் மற்றும் மனித உரிமை ஆணையங்கள், ”இன்னும் இஸ்லாமியர்கள் பலர் நிவாரண முகாம்களில் தங்கி உள்ள நிலையில், இயல்பு நிலை திரும்பியதாக எதை வைத்து கூறுகிறீர்கள்?”, என்ற கேள்வியை, எழுப்பியது. ஆனாலும் மத்திய பாஜக அரசில், தனக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, தேர்தலை சில மாதங்களுக்கு முன்னதாகவே நடத்தியது. அத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

இதேபோன்ற ஒரு அனுபவம்  உ.பி யில் முசாபர்பூர் பகுதியில் நடைபெற்ற கலவரத்தில், 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இஸ்லாமியர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அச்சூழலில் நடந்த தேர்தலில், பாஜக அதிக எண்ணிக்கையிலான, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது. கலவரங்களுக்கான பிரச்சாரம் மூலம் ஆட்சிக்கு வருவதும், ஆட்சியில் அமர்ந்தபின், வகுப்புவாத உணர்வுகளை தூண்டி, தனக்கான செல்வாக்கை உறுதி செய்து கொள்வதும், இந்துத்துவா அமைப்பினரின், நிகழ்ச்சி நிரலாக உள்ளது.

2014 நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, 2013இல், வகுப்புவாத வன்முறையின் கீழ் 823 நிகழ்வுகள் நாடுமுழுவதும் நடந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 247 வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றபின் மகராஷ்ட்ரா மாநிலம் உள்ளிட்ட சில பகுதிகளில், 2014 ஏப்ரல் – ஜூன் காலகட்டத்தில், 149 வகுப்புவாத மோதல்கள் நடைபெற்றுள்ளன. உ.பி.யில் 605 நிகழ்வுகள் இந்த இரண்டு ஆண்டுகளில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இவை ஒருபுறம் தேர்தலை மையப்படுத்தியும், மற்றொரு புறம் தனது வகுப்புவாத அரசியலை அரங்கேற்றும் வகையிலும், இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் பிரிவு மக்களை தனக்கு சாதகமாக உறுதி செய்து கொள்வதையும், உள்ளடக்கி உள்ளது.

மதுரா, கைரானா நிகழ்வுகள்:

இப்போது மதுரா பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினரின் மையமாக மாறியுள்ளது. அங்குள்ள கிருஷ்ணன் கோவில், மற்றும் மசூதிக்கு இடையில் புனைந்த மத அடிப்படையிலான சிக்கல், மற்றும் பதட்ட உணர்வு, தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. அண்மையில் மதுரா ஜவஹர் பாக்-இல் உள்ள 288 ஏக்கர் நிலம், இரண்டு ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு, ஜெய்குரு தேவ் அறக்கட்டளை அமைப்பை சார்ந்தோர் இந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர். தர்ணா போராட்டம் நடத்த அனுமதி பெற்ற இந்தக் கூட்டம், காவல்துறையினருடன் துப்பாக்கி சூட்டில் ஈடுபடும் அளவிற்கு பயிற்சி பெற்றுள்ளனர்.

இந்தக் கூட்டம் ஆர்.எஸ்.எஸ் ஐச் சார்ந்த ராஜீவர் என்ற குருஜி என்பவரால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் என்பது வெளி வந்து கொண்டிருக்கும் உண்மை ஆகும். ஜூன் 30 இந்தியன் எக்ஸ்பிரஸ், இது குறித்து விரிவான கட்டுரை எழுதியுள்ளது. ஜவஹர் பாக் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தலைமை தாங்கிய, வீரேஷ் யாதவ் ஒரு மாதம் கழித்துதான் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் காவல் துறைக்கு அளித்து வரும் வாக்குமூலத்தில், கொள்ளைக்கார கும்பலின் செயல் வடிவங்களும், அவர்கள் தங்களுடைய குழுவை நிர்வாகம் செய்யும் நடைமுறையும் சொல்லப்பட்டு இருக்கிறது.

அரசுக்கு சொந்தமான பொது இடத்தை ஆக்கிரமிக்க மத்திய பிரதேசத்தில் இருந்து வந்தது. அதன் பின் ஆக்கிரமித்த பகுதிகளுக்குள் செக்போஸ்ட் அமைப்பது, குழுக்கள் மூலம் பராமரிப்பது, குடியிருப்புகள் உருவாக்கி அனைத்து அடிப்படை வசதிகளும் உருவாக்கப்பட்டது, நகரில் அல்லது வேறுபல இடங்களில் நடந்த வன்முறை நிகழ்வுகளில், தாக்குதல் நடத்தும் கும்பலாக பயன்படுத்தப்பட்டது ஆகியவை, பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு குழுவினரால் மட்டும்தான், முடியும்.

ஐ.எஸ் அமைப்பின் செயல்பாடுகள், நக்ஸல் அமைப்பின் செயல்பாடுகள் ஆகியவை, பொது மக்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு ஊடகங்களில் முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால் வீரேஷ் யாதவ் மற்றும் அவர் குழுவினரின் செயல்பாடுகள், ஒரு நாள் செய்தியாக முடிக்கப்படும் நிலை உள்ளது. இதுவே திட்டமிட்ட ஒன்றாக கருத இடமளிக்கிறது. 15 முதல் 20 வயது மதிக்கத் தக்க இளைஞர்கள் இந்தக் குழுக்களில் பயன் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பயிற்சி அளித்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்ற வாக்குமூலத்தை, இந்திய ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து வெளியிடவில்லை.

உ.பி.யில், எதிர்வரும் தேர்தலை தன் வசப்படுத்த, தொடர்ந்து பல ஆண்டுகளாக பாஜக செயலாற்றி வருகிறது. முசாபர் நகர் கலவரங்கள் குறிப்பிடத்தக்கது. இந்துத்துவா அமைப்பினர் வைத்துள்ள பட்டியலில், கைரானா இப்போது முக்கிய இடம் பிடித்துள்ளது. ஹூகும் சிங், பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர். இவர் வெளியிட்ட ஆதாரமற்ற செய்தியை, அமித் ஷா மற்றும் மோடி இருவரும் அலகாபாத் பாஜக கூட்டத்தில் பேசுகின்றனர். காஷ்மீரில் இருந்து இந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டது போல், கைரானாவில் இருந்து இந்துக்கள் முஸ்லீம்களால் வெளியேற்றப் படுகின்றனர் என்பதே அந்த விஷம் கக்கும் செய்தியாகும்.

தமிழ் நாளேடுகளும் இந்த செய்திகளை வெளியிட்டனர். இது உண்மையற்ற செய்தி என்பதை, உ.பி. அரசு அமைத்த விசாரணைக்குழு மூலம் அறியலாம்.  பாஜக வெளியிட்ட 119 நபர்கள் கொண்ட பட்டியலில், 10 ஆண்டுகளுக்கு முன், கைரானா நகரத்தை விட வேறு நல்ல வேலை தேடி சென்ற, இடம்பெயர்ந்த 66 மனிதர்கள் உள்ளனர். ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ளவர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்திகளுக்கு முக்கிய இடத்தை ஊடகங்களும், மத்திய அரசும் வழங்கவில்லை. பிரதமர் உள்ளிட்ட, அரசின் முக்கியப் பிரமுகர்கள், தங்களது அரசியல் உரையில், இப்படி எந்த ஒரு ஆதாரமும் இல்லாத அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைப்பது, ஃபாசிச நிகழ்ச்சி நிரலின் பகுதியே என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இத்தகைய அனுகுமுறை காரணமாக, உ.பி.யின் பல கிராமங்கள், முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு, முஸ்லீம்கள் இல்லாத கிராமங்களாக உருவெடுக்கின்றன. நகருக்கு வெளியே புதிய குடியிருப்புகளை கட்டமைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர். அதையும் லிட்டில் பாகிஸ்தான் என நக்கலடிக்கும் பிரச்சாரமும் நடந்து வருகிறது. இவை அனைத்துமே இந்துத்துவா என்ற அரசியல் திட்டத்தை அரங்கேற்றும் நோக்கத்தில் செய்யப்படுகிற ஒன்று. இதில் மத அடையாளம் காரணமாக அப்பாவிகளும் ஈடுபடுத்தப்படுகின்றனர். சிவில் சமூகத்தினர் உள்ளிட்டு படிப்படியாக இந்த வளையத்திற்குள் வளைக்கப்படுகின்றனர் என்பதை, முசோலினி ஆட்சியை விமர்சனம் செய்த, கிராம்சியும், இந்தியாவில் கே.என். பணிக்கர் போன்ற அறிஞர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

கலவரங்களும்கார்ப்பரேட்டுகளும்:

மதுராவில் ஜவஹர் பாக்-இன் 288 ஏக்கர் நிலத்தை மீட்கும் போராட்டத்தில், காவல் துறையின் ஒரு மாவட்ட கண்காணிப்பாளர் கொல்லப்பட்டுள்ளார். இதற்கான துணிச்சல், சாதாரண ஆக்கிரமிப்பாளர்களுக்கு இருக்க முடியாது. நன்கு பயிற்சி பெற்ற, ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்ட ஒரு குழுவினரால் தான் இது சாத்தியம். வீரேஷ் யாதவ் தலைமையிலான அந்தக் குழு, 47 துப்பாக்கிகள், 6 ரைஃபிள் துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான கிரேனேடுகள் என சகலவித தாக்குதலையும் எதிர் கொள்ளும் ஆயுதங்கள், கலவரத்திற்குப்பின், கைப்பற்றப்பட்டுள்ளது.

சொகுசு கார்கள், பல ஆயிரம் கோடி சொத்து மதிப்பு கொண்ட ஜெய் குருதேவ் ஆசிரமம் ஆகியவை திடீரென உருவாக முடியாது. டில்லி – மதுரா நெடுஞ்சாலையில் பிரமாண்டமாக காட்சியளிக்கும் இந்த ஆசிரமம், பல கருத்துக்களைப் பிரச்சாரம் செய்து வருகிறது. சைவ உணவையே உண்ணுங்கள், இந்த ஆசிரமத்திற்கு, புலால், மீன், முட்டை போன்ற உணவு உட்கொள்ளூவோர் நன்கொடை அளிக்க வேண்டாம். முல்லா, மௌல்வி போன்றோர் சரியான பாதையில் சென்றால், பிரச்சனை இல்லை, என பல வடிவத்தில் அசைவ உணவு உண்போருக்கு எதிரான கருத்துக்களை பரப்புகின்றனர். 1000 பசுக்களுக்கும் மேலான, கோசல்யா, இந்த டிரஸ்ட் மூலம் நடத்தப்படுகிறது. இதற்கான பராமரிப்பு என்பது, ஒரு சில நன்கொடைகளில் மட்டும் சாத்தியமல்ல.

”பகுத்தறிவின்மையே தற்காலத்திய போக்காக மாறியுள்ளது. ஏனெனில் சந்தையில் உள்ள பகுத்தறிவின்மையோடு, மனிதர்களும் பகுத்தறிவின்மை உடன் ஒத்துப்போக வேண்டியுள்ளது. முதலாளித்துவ உலகமயமாக்கல் பொருளாதார கொள்கை, சந்தைகளை ஒருங்கிணைக்கும் போது, மனிதர்களைப் பிரிக்கிறது. தனது உலகச் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப, பயன்படுத்திக் கொள்வதற்கு மக்கள் ஓரணியாக, இணைந்திருப்பதை விட, தனித்தனியாக பிரிந்திருப்பது அனுகூலமாக இருக்கும். சமத்துவத்திற்கான அரசியலை, வேறுபாட்டிற்கான அரசியலாக மாற்றவும், கூட்டுறவோடு வாழவேண்டிய சமூகத்தை முடிவில்லா போட்டியின் அடிப்படையிலான சமூகமாக மாற்றவும், வர்க்க உணர்ச்சியை வகுப்புவாத உணர்ச்சியாக மாற்றவும் நடக்கும் இந்தப்போரின் முக்கிய ஆயுதமாக நவகாலனியாதிக்க தத்துவம் உள்ளது”, என்று அய்ஜாஸ் அகமது கூறுகிறார்.

ஃபாசிசம் பற்றி பேசுகிற போது முதலாளித்துவத்தின், செயலாக்க வடிவமாக அரங்கேறி வருகிற ஒரு கொள்கை கார்ப்பரேட் (பெரு நிறுவனமயமாதல்). இங்கு கார்ப்பரேட்டிசத்திற்கும், ஃபாசிசத்திற்கும் தொடர்பு இருந்தது, என்பதை, பேரா. பல்மிரோ டோக்ளியாட்டி, தனது உரைகளில் குறிப்பிட்டு உள்ளார். “கார்ப்பரேட்டிசம் என்பது பாசிச அரசு அமைப்பின் ஒரு வடிவம் என்று கருதப்பட வேண்டும். ஜெர்மனி, ஆஸ்த்திரியா ஆகிய நாடுகளில் கார்ப்பரேட் அரசை நிறுவுவதற்கு முயற்சி நடைபெற்று வருகிறது. இன்னமும் ஆட்சியைக் கைப்பற்றாத நாடுகளிலும், சிந்தாந்த பிரச்சார அம்சங்களில் ஒன்றாக கார்ப்பரேட்டிசம் இருப்பதைக் காணமுடியும். இந்த முழக்கம், அரசு கட்டமைப்பிற்கும், நடப்பு பொருளாதார முறைமைக்கும் ஒரு மாற்றாக முன்வைக்கப் படுகிறது.” இந்த வரிகள் பேரா. பல்மிரா டோக்ளியாட்டி, 1935ம் ஆண்டில், ஃபாசிசம் குறித்து, நிகழ்த்திய 15 உரைகளில் கார்ப்பரேட்டிசம் என்ற தலைப்பில் பேசியது.

இன்றைக்கு பிரதமர் மோடியும், பாஜக அரசும் முழங்கி வரும் எண்ணற்ற முழக்கங்களில், கார்ப்பரேட்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பல இந்துத்துவா அமைப்புகளுக்கு, கார்ப்பரேட்கள் வாரி வழங்கியுள்ள நன்கொடைகளுக்கும், அரசின் முழக்கங்களுக்கும் தொடர்பு இருப்பது, டோக்ளியாட்டி குறிப்பிட்ட பொருளில் அரங்கேறி வரும் உண்மை என்பதை அறியமுடியும். கலவரங்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் கார்ப்பரேட்டுகள் குறித்து, மத வழிபாடுகளில் ஈடுபடுபவர்கள் உணர்ந்திருப்பது இல்லை என்பது இந்துத்துவாவிற்கு சாதகமாக உள்ளது.

ஜனநாயகத்திற்கு எதிரான எதேச்சதிகார அனுகுமுறை:

ஃபாசிச சக்திகளின் வளர்ச்சியில் எதேச்சதிகாரம் படைத்த தலைமை முக்கிய பங்கு வகிக்கிறது. உள்கட்சி தேர்தல் நடத்தப்படுவதில்லை. படிப்படியாக அது ஒரு சிவிலியன் ராணுவமாக மாறும் நிலையை உருவாக்கிக் கொள்கிறது. ஆர்.எஸ்.எஸ் குறித்து மதிப்பீடு செய்கிற இந்தியாவின் பணிக்கர் போன்ற ஆய்வாளர்கள் கூற்று இதை உறுதி செய்கிறது. வரலாற்றின் அடிப்படையிலும், முசோலினியின் செயல்பாடுகள் இன்றைய இந்துத்துவா பின்பற்றும் செயல்பாடுகளுடன் ஒத்துப் போகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு ஜூன் 18-20 தேதிகளில் கூடியபோது மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டில், இந்தியாவில் மாநிலங்களுக்கான அதிகாரத்தை பறிக்கிற, தனக்கு எதிர்ப்பு அதிகம் இருக்கிற ராஜ்ய சபாவை புறக்கணிப்பது போன்ற செயல்களில், மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கை, வகுப்புவாத நடவடிக்கை ஆகியவற்றுடன் எதேச்சதிகாரம் ஆகிய பரிமாணங்களில் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது.

மேலே குறிப்பிட்ட உலக ஃபாசிச சக்திகளின் அனுபவமும், இந்தியாவில் தற்போது நடைமுறைப் படுத்தபடும் இந்துத்துவா அரசியலும் ஒத்துப் போவதை உணரமுடியும். எனவே உ.பி. போன்று, இந்தியா முழுமைக்கும் கலவரங்களை உருவாக்குவதும், அதற்கு தேவைப்படும் வன்முறையாளர்களை சிந்தாந்த ரீதியிலும், போராட்டப் பயிற்சி ரீதியிலும் உருவாக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் போதுமான துணை அமைப்புகள் உள்ளன. கார்ப்பரேட் களும் தீணி போடுவதற்கு தயாராக உள்ளனர்.

மதுராவில் வீரேஷ் யாதவ் போன்ற நபர்கள், ஆர்.எஸ்.எஸ் ஐச் சார்ந்த ராஜீவர் என்ற குருஜியின் மூலம் சண்டைப் பயிற்சி, கலவரப் பயிற்சி மட்டும் பெற்று இருக்கப்போவதில்லை. சாகா போன்ற சில நடவடிக்கைகள் வெளிப்படையானவை. வெளியே தெரியாத திட்டமிட்ட அரசியல் செயல்பாடுகளை ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் விரிவாக்கி வருகின்றன. சிந்தாந்தப் பயிற்சியும் பெற்று இருப்பர்.

அதன் காரணமாகவே, ஜவஹர் பாக் -இல், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து வித அரசு நெருக்கடிகளையும் எதிர் கொண்டு ஆக்கிரமிப்பைத் தொடர முடிந்துள்ளது. ஆசீமானந்தாவைப் போல் இந்த வாக்குமூலம் பரபரப்பாக பேசப்பட வில்லை. அதேநேரத்தில் பிரக்யாசிங் தாகூர் போல், பின்னாளில் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட முடியும். அதற்கான வலிமையை, இந்துத்துவா அரசியல், தனது செயல் திட்டம் மூலம் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. ஜெயகுருதேவ் உருவாக்கிய போஸ் சேனா என்ற அமைப்புக் கூட அத்தகைய பின்னணி கொண்டதாக இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே மதுரா நிகழ்வுகளை வெறும் கலவரமாக மட்டும் எண்ணி விட முடியாது. கைரானா போன்ற பிரச்சாரங்களை, ஒரு உளறுவாய் நாடாளுமன்ற உறுப்பினரின் அறியாத செயல் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. இவை தெளிவான இந்துத்துவா அரசியலின் நிகழ்ச்சி நிரல், முதலில் வாக்கு வங்கி பின்னர் ஃபாசிச அடக்குமுறைக்கான, ஆயுதம் என்பதே உண்மை.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்