சோசலிச எழுத்திற்கான பயிலரங்கு – பி.கே.ராஜன்

998
0
SHARE

பாரதி புத்தகாலயமும் லெஃப்ட் வேர்ட் (Left Word ) பதிப்பகமும் இணைந்து நடத்திய ‘சோசலிச எழுத்திற்கான பயிலரங்கு’ (Workshop On Socialist Writings) மே 31, ஜூன் 1 ஆகிய இரு நாட்களூம் சென்னை காப்பீட்டு ஊழியர் சங்க அரங்கில் நடைபெற்றது. தமிழகத்தில் ஊடகவெளியிலும் நூல் பதிப்பு வெளியிலும் பரந்து பட்ட இடதுசாரி நிலைபட்டில் நின்று (புனைவற்ற) எழுத்து பணியாற்றி வரும் 35 எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர். கலந்து கொண்டவர்கள் பெரும்பான்மையோர் இளவயதினர். லெஃப்ட் வேர்ட் பதிப்பகத்தின் தலைமை பதிப்பாசிரியர், பேராசிரியர்.விஜய் பிரசாத் மட்டுறுத்துனராக இருந்து இரு நாள் பயிலரங்கை நடத்தினார்.

புகழ்பெற்ற பத்திரிக்கையாளர், ‘Everyone Loves a Good Drought’ (’எல்லோரும் ஒரு நல்ல வரட்சியை நேசிக்கின்றனர்’ –  விரைவில் பாரதி புத்தகாலய வெளியீடாக தமிழில் வரவிருக்கின்றது) நூலின் ஆசிரியர் பி.சாய்நாத் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தியதுடன் இரு நாட்களிலும் விவாதங்களின் போதும் பங்கேற்று நிறைவுரையும் ஆற்றினார். மூத்த பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான இரா.ஜவஹர், சோசலிச தமிழ் எழுத்து என்பது குறித்து ஒரு அமர்வில் பேசினார்.

’சோசலிச எழுத்தின் அடிப்படைகள்’ குறித்து விஜய் பிரசாத் அவர்கள் மார்க் நோவாக் அவர்களுக்கு அளித்த நேர்காணல், பயிலரங்கிற்கு ஒரு வாரம் முன்பே தமிழ்ப்படுத்தப்பட்டு (தமிழில் : சி.சுப்பாராவ்) பங்கேற்பாளருக்கு அளிக்கப்பட்டிருந்தது. (பார்க்க : புத்தகம் பேசுது ஜூன் 2017) அது இருநாள் விவாதங்களுக்கு ஒரு துவக்கப் புள்ளியாக இருந்தது.

பி.சாய்நாத் ஒரு இடதுசாரியாக, இந்திய மாணவர் சங்கத்தில், ஜே.என்.யூவில் இருந்து பணீயாற்றிய பின்புலத்திலிருந்து இந்திய ஊடகத்துறைக்குள் சென்று பணியாற்றிய தன் அனுபவங்களை துவக்க உரையின் பகுதியாகப் பகிர்ந்துகொண்டது இருநாள் பயிலரங்கிற்கான களத்தை அமைத்துக் கொடுத்தது. ஒரு நிகழ்வை செய்தியை எழுதும்போது அதன் பின்புலம், வரலாற்று நிகழ்வுப் போக்கில் அதன் இடம் ஆகியவை பற்றிய விவரங்கள்தான் செய்திக்கு மேலாக பெருமதியை எழுத்திற்கு அளிக்கும் என்பதை விளக்கினார். இன்றைய ஊடகக் கதையாடலின் மையமாக இருக்கும் ‘மாடு” என்பதை எடுத்துக் காட்டாக கொண்டு அவர் அதன் பல அம்சங்களை விளக்கினார். எந்தவொரு நிகழ்விலும் பாதிக்கப்பட்ட மக்களின் அனுபவங்களோடு சேர்த்து பதிவு செய்வது அவசியம். ஒரு சோஷலிச எழுத்தாளர் கணிணி முன்பு மட்டும் அமர்ந்து செய்திகளைச் சேகரிக்கக்கூடாது. அவர் பிரச்னையோடு தொடர்புடைய மக்களைச் சந்திக்க வேண்டும். அவர்களுடன் உரையாட வேண்டும். அவர்கள் பார்வையிலிருந்து பிரச்னைகளைப் பார்க்கத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் பார்க்கும்போது ஒரு புதிய பரிமாணம் வெளிப்படுவதை உணர்ந்துகொள்ளலாம் என்பதை தனக்கே உரிய நகைச்சுவையுடனும் ஏராளமான அனுபவம் சார்ந்த எடுத்துக் காட்டிகளுடனும் விளக்கினார்.

இன்றைய ஊடகப் பெருவெடிப்பின் காலத்தில் இடதுசாரி எழுத்து வாசிப்பவர்களை உள்ளிழுத்து வாசிக்க வைப்பதாக இருக்க வேண்டியதன் இன்றியமையாமை, அவ்வாறு இருப்பதற்கு தேவையான கூறுமுறை நுட்பங்கள் ஆகியவை விஜய் பிரசாத்தால் பல்வேறு எடுத்துக் காட்டுகளுடன் விளக்கப்பட்டது.

விஜய் பிரசாத் முன்மொழிந்து விளக்கிய சில அம்சங்கள்

 • மொழி என்பது எலும்புபோல் இருக்கவேண்டும். ஒவ்வொரு சொற்றொடரும் பளிரென்று, தெளிவாக மிளிரவேண்டும். அனைவருக்கும்எளிதில் புரிதல் வேண்டும். புரியாத எழுத்தாக குழூவுக்குறியாக எழுதுபவரின் மேதா விலாசத்தைப் பரைசாற்றுவதற்காக எழுதப்படும் எழுத்து உண்மையில் எதனையும் சாதிக்காது.
 • வெடிக்கும் வாக்கியங்களை கொண்டதாக ’எழுத்து’ இருக்க வேண்டும். அத்தகைய வாக்கியங்களை ஒருபோதும் வாசகர்கள் மறக்க மாட்டார்கள். எடுத்துக்காட்டுக்கு ரோசா லம்சம்பர்கின் இந்த வாக்கியம். “Proletarians of all countries, unite in peace-time and cut each other’s throats in war!”  “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் – அமைதி காலத்தில் – போரில் ஒருவர் கழுத்தை ஒருவர் அறுங்கள்.”
 • எழுத்துநடைக்கு சோஷலிச எழுத்திலிருந்தே பல எடுத்துக் காட்டுகளை எடுத்துக்கொள்ளலாம். கார்ல் மார்க்ஸின் பிரான்ஸில் உள்நாட்டுப் போர், தெளிவாகவும் நேர்த்தியாகவும் எப்படி எழுதுவது என்று கற்றுக்கொடுக்கும். லெனினின் சிறிய அரசியல் பிரசுரங்கள் (எ-கா : ஓரடி முன்னால் ஈரடி பின்னால், ஏப்ரல் கொள்கை) ஒரு வாதத்தை எப்படி அழகாகவும் வலுவாகவும் முன்வைப்பது என்பதைக் கற்றுக்கொடுக்கும்.
 • போலியான வார்த்தைகளை எடுத்து உடைத்துக் காட்டவேண்டும். ஜனநாயகம், மதச்சார்பின்மை, வளர்ச்சி, முன்னேற்றம், வல்லரசு ஆகிய பதங்களில் உள்ள போலித்தனத்தை வெளிக்கொணர வேண்டும். அவ்வாறு செய்யும்போது அவற்றின் மெய்யான அர்த்தம் என்ன என்பது புரியவரும்.

சோஷலிச எழுத்து எப்படி இருக்கவேண்டும்? எனும் வினாவிற்கு பி. சாய்நாத் பகிர்ந்துகொண்ட சில யோசனைகள்

 • சொல்லவரும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிலுள்ள உண்மையை வெளியில் கொண்டுவரவேண்டும்.
 • புனிதங்களுக்குள் சிக்கிக்கொள்ளவேண்டாம். அறிவியல் என்னும் பெயரோடு வரும் எல்லாமே உயர்ந்தவை; நவீன தொழில்நுட்பம் கேள்விக்கு அப்பாற்பட்டது என்றெல்லாம் கருதவேண்டியதில்லை. இது அரசியல் அதிகார மையங்களுக்கும் பொருந்தும்.
 • என்ன நடந்தது என்பதை விவரித்தால் மட்டும் போதாது. ஒரு விஷயம் ஏன் அப்படி நடந்தது என்பதை ஆய்வு செய்து நிகழ்வுப் போக்கை (Process) வெளிப்படுத்தவேண்டும்.
 • எழுதப்படும் எல்லாமே புலனாய்வு எழுத்துதான். வெளிப்பார்வைக்குத் தெரியாதவற்றைத் தோண்டித் துருவி வெளிக்கொணர வேண்டும்.
 • எல்லாவற்றையும் கதைகளாகச் சொல்லவேண்டும். வெறும் புள்ளிவிவர விளக்கங்கள் அனைவரையும் சென்றடையாது.
 • எதையும் எளிமையாகச் சொல்ல வேண்டும். அது சாத்தியம்.
 • எளிய, கிராம மக்களிடம்கூட நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அவர்களைப் பற்றிய எழுத்துகளிலும் அந்த உணர்வு பிரதிபலிக்கவேண்டும். வறட்டுத்தனமில்லாது மெல்லிய நகைச்சுவை இழையோட எழுத வேண்டும்.
 • சார்பு இன்றி எழுதுதல் சாத்தியம் இல்லை. நடுநிலை வகிப்பது என்பது அதிகாரத்துக்குச் சார்புநிலை எடுப்பதாகவே சென்றுமுடியும்.
 • வாசிப்பு இல்லாமல் எழுத்து இல்லை.
 • நல்ல எழுத்து நேர்மையானதாக இருக்கும்.

தமிழ் சோசலிச எழுத்து, அதன் வரலாறு குறித்து எடுத்துரைத்த இரா.ஜவஹர் விளக்கிய சில முக்கியமானப் புள்ளிகள்

 • ஒரு சொற்றொடரில் நான்கைந்து சொற்களுக்கு மேலாக இல்லாமல் எழுதலாம். ஆங்கிலத்தில் வருவது போன்ற கூட்டு வாக்கியங்களை தமிழில் பிரதி எடுக்க வேண்டியதில்லை.
 • நெரடி மொழியில் (active voice) இயன்ற மட்டும் எழுதுதல் தெளிவு தரும். எ.ஆ : மரம் ராமனால் வெட்டப்பட்டது என்பதற்கு பதிலாக ராமன் மரத்தை வெட்டினான் என எழுதுவது நல்லது.
 • எழுதியதை வாய்விட்டுப் படித்துப் பார்க்கலாம். அல்லது யாராவது சாதாரணமான வாசகரிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லி கேட்கலாம்.

முதல் நாள் முடிவில் பங்கேற்பாளர்களுக்கு சில தலைப்பில் ஓரிரு பத்திகள் எழுதிவரக் கூறி, அடுத்த நாள் அந்த எடுத்துக் காட்டுகளில் உள்ள நல்ல மற்றும் மேம்படுத்தக் கூடிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.

மேலும் அறிவுஜீவிகளின் வகைகள், ‘சோசலிச அறிவுஜீவி’ ஆகியன குறித்து அண்டோனியோ கிராம்ஸ்கியின் கோட்பாடுகளின் அடிப்படையில் இடதுசாரி எழுத்தாளர்கள் சோசலிச அறிவுஜீவிகளாக அவற்கு செய்ய வேண்டிய முயற்சிகள் குறித்து விஜய் பிரசாத் விளக்கினார்.

நடைமுறையில் இடதுசாரி எழுத்தாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், பல சிக்கலான விவகாரங்கள் குறித்து எழுதுவதில் இருக்கும் வரம்புகள், சாத்தியங்கள் ஆகியவை குறித்தும் சுதந்திரமான, மனம் திறந்த வாதங்கள் மிகுந்த தெளிவையும், நம்பிக்கையையும் அளித்தன.

லெஃப்ட் வேர்ட் பதிப்பகத்தின் நிர்வாக ஆசிரியர் சுதன்வா தேஷ்பாண்டேயும் கலந்துகொண்டு அவரது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டது ஒரு அதிகப்படியான பரிமானத்தை அளித்தது. அனுபவங்களின் பகிர்வு மூலம் பங்கு பெற்ற அனைவரும் தாம் பெரிதும்பயன் பெற்றது குறித்தும் கற்றுக்கொண்டது பற்றியும் கூறினார்கள். ஆனால் பயிலரங்கை நடத்தியவர்களும் தாம் மிக்கப் பயன்பெற்றதாகக் கூறியது, கற்றல் எப்போதும் இருவழி நிகழ்வுதான் என்பதை நிணைவூட்டியது

கருத்துக்கள் இல்லை

Please start yout discussion here ...