வெண்மணியின் பொருளியல் -சமூக வேர்கள்

222
0
SHARE

மைதிலி சிவராமன்

(டிசம்பர் 25, 1968 அன்று கீழத்தஞ்சையின் வெண்மணி கிராமத்தில் செங்கொடி தாங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 44 உயிர்கள் நிலச்சுவான்தார்களால் எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு தமிழகத்தில் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று தியாகச் சின்னமாக அழியாது பதிந்துள்ளது. மிராசுதார்களையும் அவர்களுக்கு துணையாக நின்ற அரசு நிர்வாகத்தையும் “தங்கள் குடிசைகளை தாங்களே பற்ற வைத்த கம்யூனிஸ்ட் தொழிலாளர்கள் “என்றெல்லாம் செய்தி வெளியிட்ட ஊடகங்களையும் கடந்து செங்கொடி இயக்கம் வீருகொண்டு போராடியது, வெற்றிகளை சாதித்தது.

வெளியூர் தொழிலாளர்கள் அறுவடை செய்வதை தடுத்ததால் நள்ளிரவில் கிராமத்தினுள் புகுந்து 42 தாழ்த்தப்பட்ட இன பெண்களை இழுத்துச் சென்ற காவல் துறையினருக்கு எதிராக ஆயுதம் தாங்கி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உழைக்கும் மக்களின் சொல்லுக்கு காவலர்களை அடிபணிய வைத்த புதுச்சேரி கிராம மக்கள், பண்ணையாட்கள் ஒன்றிணைந்து புறம்போக்கு நிலத்தை குத்தகை எடுத்த பின்னும் அரசு அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு அந்நிலத்தை பிடுங்கிக் கொண்ட “ஐயர்”-ருக்கு செருப்படி கொடுத்த நெய் விளக்கு கிராம மக்கள் என எழுச்சி மிக்க போராட்டக் கதைகள் எண்ணிலடங்காதவை.

இந்த போராட்ட களத்தின் பொருளியல்-சமூக அமைப்பு குறித்து தோழர். மைதிலி சிவராமன் அவர்கள் வெண்மணி படுகொலைக்கு பின்னர் அப்பகுதியில் ஊடகவியலாளராக செயல்பட்டு, மேற்கொண்ட கடும் ஆய்வின் அடிப்படையில் 1970ல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். அதன் ஒரு பகுதி மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.)

தஞ்சை மண்ணின் பிரச்சனைகளுக்கு பின்னால்

தஞ்சை மாவட்ட பிரச்சனைகள் குறித்து தமிழக அரசும் ஊடகங்களும் தரக் குறைவான விளக்கம் கொண்டுள்ளனர் – “கம்யூனிஸ்டுகளே பிரச்சனைகளின் ஆணி வேர். உற்பத்திக்கும் சுமூகமான வாழ்க்கை செயல்பாட்டிற்கும் பாதிப்பு ஏற்படுத்தி, சட்ட ஒழுங்கின்மையை உருவாக்குவது கம்யூனிச வெற்றிக்கு அவசியமாக உள்ளது” என்கின்றனர். ஆனால் உண்மை நிலவரம் குறித்து 1961 மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது.

அநியாய நிலச் சொத்துரிமை முறை மற்றும் அதீத விழுக்காட்டிலான நிலமற்ற தொழிலாளர்கள் ஆகிய இவை இரண்டுதான் தஞ்சையில் நிலவும் தனித்துவமான முக்கிய அம்சங்களாகும்.

நிலச் சொத்துரிமையை பொறுத்தவரை விளைச்சலில் ஈடுபடும் 50 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் 2.5 ஏக்கருக்கும் குறைவான நிலமே வைத்துள்ளனர். ஐந்து ஏக்கருக்கும் குறைவான நிலமுள்ள 76 சதம் விவசாயிகள் மொத்த விளைச்சல் பரப்பளவில் வெறும் 37 சதத்தை மட்டுமே வைத்துள்ளனர். ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள நான்கில் ஒரு பங்கு குடும்பங்கள் 62 சதத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த பகுதியினரிடையேயும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. பதினைந்து ஏக்கருக்கு மேல் வைத்துள்ள வெறும் 3.85 சதம் குடும்பங்கள்தான் 25.88 சதவிகித பரப்பளவை கட்டுப்படுத்துகின்றனர்.

விவசாய தொழிலாளர்களை பொறுத்தவரை தமிழகத்தில் தஞ்சையில் தான் அதிகபடியான விவசாய தொழிலாளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தின் 33 சதவித உழைக்கும் மக்கள் நிலமற்ற விவசாய தொழிலாளர்கள். தமிழகம் முழுமைக்கு இந்த எண்ணிக்கை 18 சதம் மட்டுமே. தஞ்சையில் சராசரியாக பத்து விளைச்சல்காரர்களுக்கு ஒன்பது விவசாய தொழிலாளர்கள் உள்ளனர். 1961 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி “பெரும்பாலான விளைச்சல்காரர்கள் செல்வம் படைத்தவர்களாக இருப்பதால், இப்பகுதியில் பெருமளவு வேளாண் பணிகள் கூலிக்கு பணி புரியும் விவசாய தொழிலாளர்களால் மேற்கொள்ளப்படுகிறது. மேற்பார்வை செய்வது மட்டுமே நிலப்பிரபுக்களின் பணியாக உள்ளது”. ஆனால் மேல்தட்டு நிலப்பிரபுக்கள் “மேற்பார்வை” கூட செய்வதில்லை. பெரும்பாலானோர் அருகிலுள்ள நகரங்களுக்கோ, மதராஸுக்கோ இடம்பெயர்ந்துவிட்டனர். தொழிலாளர்கள் “மிராசுதார்”எனும் பொழுது, அவர்கள் பெரும்பாலும் நிலத்தை பராமரிக்கும் “ஏஜென்டுகள்”பற்றியே குறிப்பிடுகின்றனர். இவ்வாறு அப்பகுதியில் வசிக்காதோரின் நிலப்பிரபுத்துவம் (absentee landlordism) பற்றிய முழு தரவுகள் இல்லாவிட்டாலும், தமிழகத்திலேயே தஞ்சையில் தான் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும். வசிக்காத நிலப்பிரபுக்கள் மற்றும் அரசால் கையாளப்படும் பெருமளவிலான கோயில் மற்றும் வம்சாவளி நிலங்களும் இந்த போக்கிற்கு உறுதுணையாக உள்ளன.

விளைச்சல்காரர்களை ஒப்பிடும் பொழுது அதீத அளவு விவசாய தொழிலாளர்களை கண்டறிந்தாலும், இது குறித்த தவறான நிலைபாட்டையே 1961 மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை எடுக்கிறது. “விளைச்சல்காரர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் விழுக்காடுகளை வைத்துப் பார்த்தால், தஞ்சாவூரில் நிலவுவது “முதலாளித்துவ விவசாயம்”என்றும், சேலத்தில் நிலவுவது “தேவையை ஒட்டிய விவசாயம்”என்றும் உதாரணம் கூறலாம்” என்கிறது அந்த அறிக்கை. “முதலாளித்துவ விவசாயம்”பற்றிய இப்படிப்பட்ட தவறான வரையறை மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் காணப்படுவது, “காங்கிரஸ் சீர்திருத்தங்கள் இந்திய விவசாயத்தில் முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி உறவுகளை தகர்த்துவிட்டது”என்ற பொய்யான மாயையில் வசிக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தினரின் சிந்தனைகளை பிரதிபலிக்கிறது.

“முதலாளித்துவ விவசாயம்”

முதலாளித்துவ விவசாயம் என்பது சிறு விவசாயிகளை அவர்களின் தேவைக்கேற்ப விளைவிக்க விடுவதற்கு மாற்றாக கூலித் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவது மட்டும் அல்ல. கடந்த பத்தாண்டுகளில் தஞ்சையில் விவசாய தொழிலாளர்களின் எண்ணிக்கை 60 சதம் உயர்ந்துள்ளது. வறுமையால் சிறு-குறு விவசாயிகள் தங்களின் நிலத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டதும் பெருமளவில் குத்தகைதாரர்கள் வெளியேற்றப்பட்டதுமே இதற்கான காரணமாகும்.

தஞ்சையில் நிலவும் பெருமளவிலான குத்தகை விவசாயம், சட்ட ரீதியான பாதுகாப்புகள் இருந்தும் நிலத்திலிருந்து வெளியேற்றப்படும் அச்சத்தில் வாழும் காரணத்தால் குத்தகைதாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும் சட்டவிரோத கொள்ளை வாடகை, இதெல்லாம் முதலாளித்துவ விவசாயத்தின் அம்சங்களாக சொல்லவே முடியாது. 33.6 சதம் குடும்பங்கள் முழுக்க முழுக்க குத்தகைதாரர்கள் (தமிழக சராசரி 11 சதம்). விளைச்சல் நிலங்களில் 55 சதம் குத்தகையில் உள்ளன. நிலப்பிரபுகளுக்கு நிலத்தை குத்தகைக்கு விடுவது அதிக லாபகரமாகவும், குறைந்த சிக்கல் நிலவுவதாகவும் கருதுகின்றனர். வறுமையினால் பெருமளவு விவசாயிகள் குத்தகை பத்திரங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிலத்தை குத்தகைக்கு எடுக்க தயாராக இருப்பதால், குத்தகை மற்றும் வெளியேற்றம் குறித்த சட்டங்களை அமலாக்குவது மிகக் கடினம். “குத்தகை நிலங்களில் பாதியாவது வாய் வழி குத்தகை ஒப்பந்தங்களாக மட்டுமே உள்ளன” என பக்தவச்சலம் (காங்கிரஸ் முதல்வர்) அரசே ஒப்புக்கொள்கிறது. தமிழகத்தில் 80 சதம் குத்தகைதாரர்களுக்கு குத்தகை காலம் குறித்த உறுதியான பாதுகாப்பு இல்லை என உள்துறை அமைச்சகத்தின் அண்மை அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த “குத்தகை காலம்” நிலை குறித்து பல ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். இந்திய அரசின் ஆலோசகராக இருந்த வுல்ஃப் லடெய்ன்ஸ்கி என்ற ஆய்வாளர் தஞ்சையின் “குத்தகை காலம்”முறை பசுமை புரட்சிக்கு ஏற்புடையதா ? என்று ஆய்வு செய்தார். “இது தான் நாட்டிலேயே மிக மோசமான “குத்தகை காலம்”முறை கொண்ட மாவட்டம். (பசுமை புரட்சி) ஆதரவுக்காக மாவட்டங்களை தேர்வு செய்வதில் நில “குத்தகை காலம்”முறை ஒரு அளவுகோலாக இருந்தால், நிச்சயமாக தஞ்சாவூர் தேர்வாகாது”என்ற முடிவுக்கு அவர் வந்தார். பத்து ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாக தஞ்சை வந்த அவர், “குத்தகை காலம்”முறை மோசமடைந்திருப்பதாக கண்டறிந்தார். நில உரிமையாளர்கள் தங்களின் சொந்த விளைச்சலுக்காக நிலத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்பிப் பெற்றுக் கொள்வது அதிகரித்ததாக கண்டார். சட்டப்பூர்வமாக விளைச்சலில் 40 சதத்திற்கும் மேல் குத்தகைத் தொகை இருக்கக் கூடாது என்றாலும், உண்மையில் குத்தகைத் தொகை 60 முதல் 65 சதமாக இருந்தது. தஞ்சையின் ஒரு சராசரி குத்தகைதாரர் பசுமை புரட்சியின் ஒரு அங்கமாக மாறவே முடியாது என லடெய்ன்ஸ்கி கண்டறிந்தார்.

கொள்ளை குத்தகைத் தொகையாலும், வெளியேற்றப்படுவதின் அச்சம் காரணத்தாலும், குத்தகைதாரர்கள் நிலத்தில் முதலீடுகள் மேற்கொண்டு உற்பத்தியை பெருக்குவதற்கு வாய்ப்பே இல்லாமல் இருந்தது. விவசாயத்தில் முதலாளித்துவ உறவுகள் நிலவுகிறது என்றால், நவீன உற்பத்தி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முதலீடுகள் செய்யும் ஒரு ஆக்கப்பூர்வ தொழில் முனைவோர் வர்க்கம் ஒன்று காணப்பட வேண்டும். பணக்கார விவசாயிகளுக்கு அதிக விளைச்சல் தரும் விதைகள், உரங்கள் மற்றும் கடன் உதவி அளித்து அப்படிப்பட்ட வர்க்கத்தை உருவாக்க முயற்சித்தது “பசுமை புரட்சி”. இது ஒரு சிறு பகுதி பணக்கார விவசாயிகள் மற்றும் நிலப்பிரபுக்கள் மேலும் கொழுக்கவே வழி வகுத்தது. ஆனால் பயனற்ற குத்தகை வசூலிப்போர் மற்றும் அதிக வட்டி கடனளிக்கும் நிலப்பிரபுக்களை கீழே தள்ளி தொழில் முனையும் வர்க்கம் உருவெடுப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. முதலாளித்துவ உற்பத்தி முறையுடன் தொடர்புடைய நவீன தொழில்நுட்பங்களை (தரமான விதைகள், ரசாயன உரங்கள், எந்திரங்கள்) ஏற்கனவே நிலவி வரும் முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி முறையின் மேல் வலுக்கட்டாயமாக புகுத்தியதன் காரணமாக முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை பசுமைப் புரட்சி தவறாக திசைதிருப்பி விட்டது. பசுமை புரட்சி சிறுபான்மை பணக்கார விவசாயிகளை நவீன விவசாய தொழில்நுட்பங்களை நிர்பந்தித்தாலும், அதீத உபரி விவசாய தொழிலாளர்கள், பாதுகாப்பற்ற குத்தகைதாரர்கள், இரத்தத்தை உறிஞ்சும் சமூக கூறுகள் போன்றவற்றின் மேல் எவ்விதத்திலும் கை வைக்கவில்லை. விளைச்சல் தொழிற்நுட்பங்கள் முதலாளித்துவ தன்மை கொண்டிருந்தாலும், உற்பத்திக்கான சமூக அமைப்பு முதலாளித்துவத்திற்கு முந்தைய முறையாகவே உள்ளது.

வெண்மணியும் பசுமை புரட்சியும்

“முதலாளித்துவ விவசாயம்” மற்றும் “அதிக உற்பத்தி திறன்” என்ற பெயர்களில் பசுமை புரட்சி நூதனமான திசைதிருப்பல்களை உருவாக்கியது. கம்யூனிஸ்டுகளின் முக்கிய நோக்கம் என சொல்லப்பட்ட “அமைதியின்மை”யை இந்த திசைதிருப்பல்களே இன்று கூர்மைபடுத்தியுள்ளன. பசுமை புரட்சியின் “புதிய உக்தி”-யில் உள்ள இரண்டு முக்கிய பிழைகளை உள்துறை அமைச்சக அறிக்கை குறிப்பிடுகிறது:

“முதலில், இது பெரும்பாலும் பிற்போக்கான வேளாண் சமூக அமைப்புகளை சார்ந்து உள்ளது. “விவசாய வர்க்கங்கள்”என அழைக்கப்படுவோர் ஒரு ஒன்றிணைந்த, அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட சமூக-பொருளாதார குறிக்கோள்கள் எனும் ஒரு முனையில் வந்தடையவில்லை. இரண்டாவதாக, சமூக உந்துதல்களை சரிவர கணக்கில் கொள்ளாமல், உற்பத்தி குறிக்கோள்களுடன் மட்டும் கொண்ட தொழில்நுட்ப உக்தி உருவாக்கிய நிலைமையால் ஏற்றத்தாழ்வுகள், திடமின்மை மற்றும் அமைதியின்மையுடன் சேர்ந்து மோதல்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் வெளிப்படையாக தெரிகிறது”, என்கிறது அந்த அறிக்கை.

சிறு மற்றும் பெரு நில உரிமையாளர்கள் இடையேயும், நிலப்பிரபுக்கள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்கள் இடையேயும் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அது அதிகரித்தது. இந்த பிளவுகளின் அரசியல் விளைவுகள் கீழத் தஞ்சையில் அப்பட்டமாக தெரிந்தது. புதிய தொழில்நுட்பம் பெரும்பாலானோர் மத்தியிலும், குறிப்பாக சிறு-குறு விவசாயிகள் மத்தியிலும் எவ்வாறு கசப்புத்தன்மையை உருவாக்கியது? இந்த திட்டம் அனைத்து வர்க்கங்களும் பசுமை புரட்சியில் பங்கெடுக்கலாம் என்ற நம்பிக்கையை துவக்கத்தில் விவசாயிகளிடம் அளித்தது. ஆனால் பசுமை புரட்சியின் பலன்கள் சென்று சேர்ந்த இடங்களை ஆய்வு செய்தால், அது சிறு மற்றும் பெரு விவசாயிகள் இடையேயான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை பெருமளவில் அதிகரித்தது. பசுமை புரட்சி திட்டங்களை சிறு விவசாயிகள் கையிலெடுத்தாலும், பலதரப்பட்ட பாதகமான சூழலில் அவர்கள் செயல்பட்டு வந்ததால், ஒப்பீட்டளவில் பொருளாதார நிலையில் அவர்களை நலிவடையச் செய்தது. தொழிலாளர்கள் மத்தியிலோ, பொருளியல் சூழல் மோசமடைவதால் உண்டான கசப்புணர்வுடன் சேர்ந்து, புதிய தொழில்நுட்பங்களின் பலன் சிலருக்கு மட்டுமே அதீதமாக சென்றடைந்ததும் சேர்ந்து பெருமளவில் கோபத்தை உண்டாக்கியது.

ஆனால் இது போன்ற ஆய்வாளர்கள் மற்றும் உள்துறை அமைச்சகம் விடுத்த எச்சரிக்கைகள் ஏதுமே தெரிந்திராதது போல் காட்டிக் கொள்கிறது தமிழக அரசு. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இப்பகுதியின் இரண்டு போகம் விளையும் நிலங்களின் பரப்பளவு, உயர்தர விதைகள், உரங்களின் பயன்பாடு போன்றவை குறித்த தரவுகளை மகிழ்ச்சியுடன் தம்பட்டம் அடிப்பார்கள். “தொழிலாளர் பிரச்சனை” குறித்து கேட்டால், அதுதான் தமிழக அரசு விவசாய தொழிலாளர் நியாய ஊதிய சட்டம் இயற்றிவிட்டதே என்பார்கள். இதுவே விவசாய தொழிலாளர்களுக்கு அரசு “நீதியை நிலைநாட்டியதன்”அத்தாட்சி என்பார்கள். ஆனால் தொழிலாளர்கள் ஒரு நாளும் சட்டப்பூர்வ ஊதியம் பெறுவதில்லை. இதுகுறித்து தாசில்தாரிடம் புகார் அளித்தாலும், அவர் மிராசுதார் வீட்டிற்கே சென்று, உண்டு, இளைப்பாறி, பின் தொழிலாளர்களையே அழைத்து அவர்களை மிரட்டிச் செல்லும் நிலை தான் நிலவியது.

எனவே தஞ்சை பகுதியில் நிலவியது நிச்சயம் முதலாளித்துவ விவசாய முறை இல்லை. பிற்போக்கான நிலப்பிரபுத்துவமும், முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி உறவுகளுமே ஆதிக்கம் செலுத்தி வந்தன. பசுமை புரட்சி போன்ற அரசு திட்டங்கள் இந்த பிற்போக்கு சமூக உறவுகளை எந்த விதத்திலும் சிதைக்காமல், அதன் மேலேயே நவீன உற்பத்தி சக்திகளை புகுத்த முயற்சித்ததன் காரணமாக இப்பகுதியில் நிலவி வந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கவே செய்தன. இதன் விளைவு பொருளாதார தளத்தில் மட்டும் கட்டுப்படவில்லை. இதன் காரணமாக ஆளும் வர்க்கங்களின் சமூக ஆதிக்கமும் அதிகரித்து, அரசு எந்திரம் உட்பட அனைத்தும் அவர்கள் கட்டுக்குள் இருக்கின்றன. இதன் காரணமாக கூர்மையடைந்த வர்க்க மோதல் மற்றும் போராட்டங்களின் விளைவே வெண்மணி படுகொலையாகும்.

தோழர். மைதிலி சிவராமன் அவர்களின் ஆய்வு கட்டுரையை தமிழில் சுருக்கமாக தொகுத்தவர் தோழர் அபிநவ் சூர்யா.

கருத்துக்கள் இல்லை

Please start yout discussion here ...