இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் மூன்று கால கட்டங்கள்…

4986
1
SHARE
  • அன்வர் உசேன்

(பிரண்ட்லைன் இதழில் கே.என்.பணிக்கர் எழுதிய கட்டுரையைத் தழுவி தமிழில் எழுதப்பட்டது)

நவீன இந்தியாவின் வரலாற்றில் சமூக மறுமலர்ச்சி இயக்கத்தின் தொடக்கம் எது? காலனியாதிக்கத்திற்கு எதிராக அரசியல் போராட்டம் தொடங்குவதற்கு முந்தைய காலகட்டத்தில், சமூக மறுமலர்ச்சி இயக்கம் ஆரம்பித்தது என்று மதிப்பீடு செய்யப்படுகிறது. சமூக மற்றும் மத சீர்திருத்த இயக்கங்கள்  பொதுவாக மறுமலர்ச்சி இயக்கங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை பிற்காலத்தில் மிகவும் தீவிரமான அரசியல் போராட்டங்களுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தன எனவும் கருதப்படுகிறது. இதிலிருந்துதான் இந்திய தேசியம் உருவானது என்பதும் மதிப்பீடு ஆகும். எனவே இந்திய தேசியம் என்பது இந்த மறுமலர்ச்சி இயக்கங்களின் நேரடி விளைவு என உருவகப்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் வரலாற்றை பழங்காலம், மத்திய காலம், நவீன காலம் மற்றும் சமகாலம் என வகைப்படுத்துவது ஒரு மதிப்பீடு. காலனியாதிக்க காலம், சீர்திருத்த காலம், தேசிய இயக்க காலம் என வகைப்படுத்துவது இன்னொரு மதிப்பீடு. இத்தகைய மதிப்பீடுகள்தான் சமீப காலம்வரை இருந்தன. எனினும் இந்த மதிப்பீடுகள் கேள்விகளுக்குள்ளாக்கப்பட்டன. முதலில் மார்க்சிய ஆய்வாளர்கள் இதனை கேள்வி கேட்டனர். இவர்கள் தேசிய இயக்கத்தின் சமூக தோற்றுவாய் என்ன என்பதை ஆய்வு செய்தனர். பின்னர் தலித் ஆய்வாளர்களிடமிருந்து வலுவான கேள்விகள் எழுந்தன. இவர்கள் சாதி அடக்குமுறை அடிப்படையிலான மாற்று வரலாற்றை உருவாக்கினர். விளிம்பு நிலை மக்களின் வரலாறை உருவாக்கியவர்களும் இந்த மதிப்பீடுக்கு எதிராக சவால் எழுப்பினர். அடக்குமுறை மற்றும் அதன் விளைகள் குறித்து இவர்கள் அழுத்தமாக ஆய்வு செய்தனர். இத்தகைய மாற்று மதிப்பீடுகள் இந்திய வரலாற்றின் ஆய்வு குறித்த புதிய கருத்தாதக்கத்தை உருவாக்கின.

மறுமலர்ச்சியும் நவீனமயமும்

இந்திய சமூக அரசியலில் மறுமலர்ச்சிக்கும் நவீனத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? இக்கேள்வி வேறு பல கேள்விகளை எழுப்புகிறது..

  • மறுமலர்ச்சி இயக்கம் சமூகத்தில் நிலவிய முரண்பாடுகளுக்கு தீர்வு கண்டதா?
  • மறுமலர்ச்சி இயக்கம் ஏன் மதம் அல்லது சாதி கட்டமைப்பு சார்ந்து இருந்தது? ஏன் அது இத்தகைய எல்லைகள் கடந்து பயணிக்கவில்லை?
  • மறுமலர்ச்சி இயக்கம் என்பது வெறும் மேல் சாதியினரின் சமூக மற்றும் மதம் சார்ந்த நலன்களை மட்டுமே பிரதிபலித்ததா?
  • பிராமணிய கோட்பாடுகள் வகுத்த எல்லைகளை மறுமலர்ச்சி இயக்கம் மீறவில்லை எனும் மதிப்பீடு சரியானதாக இருக்குமா?
  • தலித் மற்றும் விளிம்புநிலை மக்களின் வரலாறு பல்கலை கழகங்களின் பாடத்திட்டங்களில் இடம் பெறவில்லை என்பது தற்செயல்தானா?
  • நவீன இந்தியாவின் பரிணாமம் குறித்த ஆவணங்கள் 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் உருவான மறுமலர்ச்சி இயக்கங்களுக்கு எல்லைகளற்ற முக்கியத்துவம் தருவது ஏன்? இந்த ஆவணங்கள் தலித் மற்றும் விளிம்பு நிலை மக்கள் குறித்து மவுனம் சாதிப்பது ஏன்?

இந்திய சமூக அரசியலில் மறுமலர்ச்சிக்கும் நவீனத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி ஆய்வு செய்தால் இக்கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கும்.

நவீனம் பற்றிய விவாதம்:

மறுமலர்ச்சி இயக்கத்திலிருந்துதான் இந்தியாவில் நவீனத்துவதுவம் தோன்றியது என கூறப்படுகிறது. எனினும் உலக அளவில் மறுமலர்ச்சி என்பது என்ன. மறுமலர்ச்சி என்பது சமூக சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் மதிப்புகளில் மாற்றத்தை விளைவிக்க கூடியது. மனிதம் குறித்து புது விளக்கம் உருவாக்குவது. புதிய மனிதன் தோன்றினான். இந்த புதிய மனிதன் கலாச்சார படைப்பாக்கத்திற்கு புத்துயிர் அளித்தான். இசை, இயல், நாடகம், சிற்பம், ஓவியம் என  அனைத்திலும் புதிய கருத்துகள் உருவாயின. இவ்வாறு உருவான புதிய அழகியல் என்பது சமூக அமைப்புடனும் உற்பத்தி உறவுடனும் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருந்தது. முதலாளித்துவ உதயத்தின் அறிவுசார் அங்கமாக இது இருந்தது. நிகழ் காலத்தை கடந்த காலத்திலிருந்து வேறுபடுத்தி காட்டியது. புதியதை பழையதிலிருந்து பிரித்து காட்டியது.

எனினும் முதலாளித்துவத்தின் வளர்ச்சி போக்கில் “நவீனம்” என்பதற்கு பல அர்த்தங்கள் முன்னுக்கு வந்தன. “நவீனம்” என்பது விவாதத்திற்குரிய ஒன்றாக மாறியது. ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவம் உருவாக்கிய நவீனம் போலவே ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலும் உருவானதா? இது ஒரு முக்கிய கேள்வி. ஏனெனில் காலனியாதிக்க காலத்தில்தான் மேற்கத்திய நாடுகளால் நவீனத்துவத்தின் பல அம்சங்களும் இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டன எனும் ஒரு கருத்து உள்ளது. காலனியாதிக்க ஆட்சியாளர்கள் இத்தகைய கருத்தாக்கத்தை உருவாக்கினர். இந்தியாவை நவீன தேசமாக மாற்றுவதற்காகவே தாங்கள் ஆட்சி செய்வதாக அவர்கள் கூறிக்கொண்டனர்.

காலனி ஆதிக்கம் நவீனமயத்தை அறிமுகப்படுத்தியதா?

காலனி ஆதிக்கத்தின் பொழுது உருவான நிர்வாக முறைகள், போக்குவரத்து மற்றும் தகவல் கட்டமைப்புகளின் அறிமுகம், விவசாயத்தில் வணிகமயம் ஆகியவை நவீனமயத்திற்கான உதாரணங்களாக கூறப்படுகின்றன. இவை அடிப்படையில் “காலனிய நவீனமயம்” என்று வகைப்படுத்துவதுதான் பொருத்தமானது. அதாவது காலனி ஆதிக்கத்தின் நலன்களுக்காகவே இந்த நவீனமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை காலனி ஆதிக்க திட்டங்கள்தான். இந்தியாவின் நவீனமயத்திற்கான திட்டங்கள் அல்ல. எனினும் அதிகாரபூர்வ ஆவணங்கள் “காலனியம்” என்பதை தவிர்த்துவிட்டு “நவீனமயம்” என்பதை மட்டுமே குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சாரத்தில் உருவான மாற்றங்கள் நவீனமயத்தின் ஒரு பகுதியே என்பதை நிலைநாட்ட முயல்கின்றனர்.

ஆங்கிலேய கல்வியால் உருவாக்கப்பட்ட இந்திய நடுத்தர வர்க்கத்தினர் காலனி ஆதிக்கத்தின் நவீனமயம் எனும் பிரமையை கட்டமைத்தனர். தமது சொந்த மேற்கத்திய நவீன வாழ்க்கை நடைமுறை மூலம் இந்த பிரமைக்கு நம்பகத்தன்மை அளித்தனர். இக்கால கட்டத்தில் நவீனமயம் என்பதன் பொருள் என்ன? மேற்கத்திய உலகில் எது முன்னேற்றமோ அதுவே நவீனமயம் என வரையறைக்கப்பட்டது. காலனிய நவீனமயம் என்பது அதன் பிரதிபலிப்பாக இருந்தது.

“காலனிய நவீனமயத்தின்” நன்மைகள் குறித்த சாதகமான கருத்து மத்தியதர வர்க்கத்துக்கு மட்டுமல்ல; சமூகத்தின் பல பிரிவினருக்கு இருந்தது. தலித் மக்களின் தலைமையின் ஒரு பகுதிக்கு கூட அத்தகைய கருத்து இருந்தது. கடுமையான ஒடுக்குமுறையை கொண்ட சாதிய அமைப்பிலிருந்து விடுதலை பெற “காலனிய நவீனமயம்” ஒரு நம்பிக்கை கீற்றாக இருக்கும் என அவர்கள் நம்பினர். இதில் காரணம் இல்லாமல் இல்லை. காலனி ஆதிக்கத்தின் சில தலையீடுகள் சில சிறிய மாற்றங்களை விளைவிதத்து. இதன் மூலம் தலித் மக்களின் ஒரு சிறு பகுதி விடுதலை காற்றை சுவாசிக்க வழிவகை ஏற்பட்டது. எனினும் சாதிய அடக்குமுறையின் அடிப்படை கட்டமைப்பில் எவ்வித பெரிய மாறுதலையும் “காலனிய நவீனமயம்” கொண்டுவரவில்லை.

காலனி ஆதிக்கம் உருவாக்கிய நிர்வாக முறைகள், போக்குவரத்து மற்றும் தகவல் கட்டமைப்புகளின் அறிமுகம், இரயில்வே ஆகியவை காலனி ஆட்சியாளர்கள் இந்தியாவில் நவீனமயத்தை அறிமுகப்படுத்தினர் எனும் கருத்துக்கு நம்பகத்தன்மை அளித்தது. எனினும் காலனி ஆதிக்கம் என்பது சுரண்டலின் கருவியாகவே இருந்தது: காலனிய ஆதிக்கம் நவீனமயத்தை உருவாக்கிய கருவி அல்ல. அது இந்தியாவின் இயற்கை வளங்களை கொள்ளை அடித்தது. உள்நாட்டு தொழில்களை அழித்தது. கலாச்சார வாழ்வை சீர்குலைத்தது. காலனியம் விளைவித்த அழிவுகளை ஒப்பிடும் பொழுது “காலனிய நவீனமயம்” உருவாக்கிய நன்மைகள் மிகச்சொற்பமே!

நவீனத்துவத்தின் மெய்யான தொடக்கம்:

இந்தியாவில் நவீனத்துவத்தின் தொடக்கம் மேற்கத்திய கலாச்சாரத்தின் வருகையால் உருவானது அல்ல. மாறாக சமூக மற்றும் மதம் சார்ந்த சீர்திருத்த இயக்கங்கள்தான் நவீனத்துவத்தை தொடங்கிவைத்தன. இதுவே மேற்கத்திய வரையறை அடிப்படையில் “மறுமலர்ச்சி” என அழைக்கப்பட்டது. எனினும் சீர்திருத்தமும் மறுமலர்ச்சியும் ஒன்றல்ல. சீர்திருத்தம் என்பது மிகவும் ஆழமான சமூக மற்றும் அறிவுசார் விழிப்புணர்வை உள்ளடக்கியது ஆகும். வங்கத்தில் இராஜாராம் மோகன்ராய் உருவாக்கிய இயக்கம்தான் இதன் தொடக்கம் ஆகும். அன்றைய சூழலில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் துன்பங்களையும் அகற்றிடவும் மதம் சார்ந்த நடவடிக்கைகளில் சீர்திருத்தம் கொண்டு வரவும் இராஜாராம் மோகன்ராய் முனைந்தார். வட இந்தியாவில் தயான்ந்த சரஸ்வதி, மராட்டியத்தில் ரானடே உருவாக்கிய “பிரார்த்தனா சமாஜ்”, ஆந்திராவில் விரேசலிங்கம் தொடங்கிய இயக்கம் ஆகியவையும் இத்தகைய சீர்திருத்தங்களின் தொடக்கம் ஆகும்.

எனினும் இந்த சீர்திருத்த இயக்கங்களுக்கு ஒரு வலுவான பொது அம்சம் இருந்தது. அது என்ன? இந்த இயக்கங்கள் எல்லாம் உயர் சாதியினர் மற்றும் மேல்தட்டு வர்க்கங்களால் தொடங்கப்பட்டவை ஆகும். புதியதாக உருவாகிக்கொண்டிருந்த மத்தியதர வர்க்கத்தின் சமூக மற்றும் ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்வதே இவற்றின் நோக்கமாக இருந்தது.

தென்னகத்தின் சீர்திருத்த இயக்கங்கள்:

அதே சமயத்தில் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும் கேரளாவிலும் நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. இங்கு மறுமலர்ச்சி தாமதமாகவே தொடங்கியது. ஏனெனில் இப்பகுதிகள் 19ம் நூற்றாண்டில் பின் தங்கியவையாக இருந்தன. எனவே மத்தியதர வர்க்கம் தாமதமாகவே தோன்றியது. இதனைவிட மிகமுக்கியமான வேறுபாடு உண்டு. இந்தியாவின் வடபகுதியில் உருவான சீர்திருத்த இயக்கங்கள் உயர்சாதி மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினரால் தொடங்கப்பட்டது. ஆனால் தென் பகுதியில் இத்தகைய சீர்திருத்த இயக்கங்கள் அடிமட்ட சாதியினரால் தொடங்கப்பட்டது. கேரளாவில் நாராயணகுருவும் அய்யன்காளியும் தொடங்கினர். தமிழகத்தில் பெரியாரும் அயோத்திதாசரும் சீர்திருத்த இயக்கங்களை தொடங்கினர். மராட்டியத்தில் ஜோதிபா புலே அவர்களின் சீர்திருத்த இயக்கமும் இந்த வரிசையில் குறிப்பிடத்தக்கது.

இந்த தலைவர்கள் தொடங்கிய இயக்கம் வெறும் சீர்திருத்த இயக்கம் மட்டுமே என்று கூறிவிடமுடியாது. இவர்களின் செயல்கள் சீர்திருத்தங்கள் சார்ந்து இருக்கலாம். ஆனால் அவர்களின் கருத்தாக்கங்கள் மிகவும் தீவிரமாக இருந்தன. சாதிய கட்டமைப்பில் மாற்றங்களை இவர்கள் கோரவில்லை. மாறாக சாதிய அமைப்பு முழுவதுமே அகற்றப்பட வேண்டும் என பிரச்சாரம் செய்தனர். இவர்களின் வலுவான கருத்து பிரச்சாரம் புதிய சிந்தனைகள் கொண்ட ஒரு நவீன சமூகம் உருவாகிட உதவியது. இவர்கள் கல்வி, தொழில்மயம், பெண்ணுரிமை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்தனர். இவர்கள் சமூக மாற்றத்தின் சித்தாந்த முன்னோடிகளாக திகழ்ந்தனர். சாதிகளற்ற வர்க்கமற்ற சமூகமே அவர்களின் இலட்சிய வேட்கையாக இருந்தது.

சீர்திருத்த இயக்கங்கள் முன்வைத்த நவீன கருத்துகள்

இந்தியாவின் வடபகுதி மற்றும் தென்பகுதியில் உருவான அனைத்து சீர்திருத்த இயக்கங்களுக்கும் சில பொதுவான அம்சங்கள் இருந்தன. தம் சமகாலத்தில் நிலவிய சமூக கலாச்சார சூழலில் முக்கிய மாற்றங்களை கொண்டுவர இந்த இயக்கங்கள் முயன்றன. பகுத்தறிவுக்கு பொருந்தாத மதம் சார்ந்த சடங்குகள் தொடங்கி பெண்கள் மீது தொடுக்கப்படும் அடக்குமுறைகள் வரை வாழ்வியலின் பல்வேறு அம்சங்களில் மாற்றம் கொண்டுவர விரும்பினர். மக்களுக்கு சிலை வழிபாடின் மீது இருந்த ஆழ்ந்த நம்பிக்கையே மூடநம்பிக்கைகளுக்கு ஆதாரம் என இவர்கள் கருதினர். எனவே சிலை வழிபாடின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை அகற்றுவது என்பது முன்னுரிமை பணியாக இருந்தது.

பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், பிரார்தனா சமாஜம் ஆகிய அனைத்துமே சிலை வழிபாடினை எதிர்த்தன. தமது பிரார்த்தனைகளில் சிலை வணக்கத்தை அகற்றினர். பெரியார் சிலை வழிபாடினை எவ்வளவு கடுமையாக எதிர்த்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. நாராயண குரு இப்பிரச்சனையில் இதே நிலை கொண்டிருந்தார். எனினும் இதனை நடைமுறை படுத்துவதில் நிதானம் கடைபிடித்தார். இப்பிரச்சனையில் “துல்லிய தாக்குதல்” எதிர்விளைவுகளை உருவாக்கும் என்பதால் புதிய அணுகுமுறையை செயல்படுத்தினார். ஒரு கல்லை சிவன் சிலையாக உருவகப்படுத்திவிட்டால் அதற்கு எப்படி ஆன்மீக சக்தி வந்துவிடும் என கேள்வி எழுப்பினார். பின்னர் சிலைக்கு பதிலாக கண்ணாடியை பயன்படுத்தினார். பின்னர் சிலை வழிபாடை முழுவதுமாக அகற்றினார். சிலர் நாராயணகுரு சிலை வழிபாடினை ஆதரித்தார் என கூறுகின்றனர். அது உண்மை அல்ல. சிலை வழிபாடினை எதிர்ப்பதில் அவரின் கருத்து  பெரியார், ராஜாராம் மோகன்ராய் ஆகியோரின் கருத்துகளுக்கு உடன்பட்டே இருந்தது. சிலை வழிபாடினை எதிர்த்த நாராயணகுருவை இன்று சிலர் வழிபடும் சிலையாக மாற்றியிருக்கும் கொடுமையை என்னவென்று கூறுவது?

பெண்களின் சுயமரியாதை:

இந்த சீர்திருத்த தலைவர்கள் அனைவருமே கவனம் செலுத்திய இன்னொரு பிரச்சனை பெண்களின் நிலை குறித்தது ஆகும். அவர்களின் சமகாலத்தில் பெண்கள் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானார்கள். சொல்ல முடியாத துன்பங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன. செல்லரித்து போன கொடுமையான சடங்குகளின் அடிமைச் சங்கிலியிருந்து பெண்களை விடுவிப்பது அவசியமாக இருந்தது. சதி எனும் உடன்கட்டை ஏறும் கொடிய நடைமுறையை எதிர்த்து இயக்கம் உருவாக்கிய ராஜாராம் மோகன் ராயின் செயல்கள் தொடங்கி அனைத்து சீர்திருத்த தலைவர்களும் பெண்கள் விடுதலைக்கு வலுவாக குரல் தந்தனர். இது வெறும் பெண்கள் மீதான பச்சதாபம் அல்ல. மாறாக பெண்களின் விடுதலை மற்றும் சுயமரியாதையை மீட்பது எனும் நோக்கம் இதில் இருந்தது. பெண்விடுதலையின் நீண்ட வரலாற்றில் இந்த நோக்கம் சிறியதாக இருக்கலாம்; ஆனால் அதன் முக்கியத்துவம் சிறிதளவும் குறைந்தது அல்ல.

சமூகம் மற்றும் மதம் சார்ந்த சீர்திருத்தங்கள் குறித்த முயற்சிகள்தான் இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் முதல் கட்டம் ஆகும். சமூகத்தின் புத்தாககத்திற்கு இந்த சீர்திருத்தங்கள் மிக அவசியம் என இந்த கட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இந்தியாவின் எதிர்காலம் இந்த சமூக சீர்திருத்தங்களில்தான் அடங்கியுள்ளது என கருதப்பட்டது. எந்த அளவிற்கு துரிதமாக சமூகம் செல்லரித்து போன நடைமுறைகளிலிருந்தும் மூடநம்பிக்ககளிருந்தும் விடுபடுகிறதோ அந்த அளவிற்கு வேகமாக இந்திய சமூகம் முன்னேறும் என இந்த சீர்திருத்த இயக்கங்கள் கருதின.

அதே நேரத்தில் இந்த சீர்திருத்த இயக்கங்கள் அரசியல் போராட்டத்திலிருந்து விலகி நின்றன. அன்னிய ஆட்சி குறித்து விமர்சனங்கள் இருந்தாலும் அவை வலுவாக முன்வைக்கப்படவில்லை. சமூக பலவீனங்களை அகற்றிவிட்டால் அரசியல் பிரச்சனைகளக்கு எளிதாக தீர்வு காணலாம் என மதிப்பீடு செய்தனர்.. அக்காலகட்ட அறிவுஜீவிகளுக்கு “காலனிய நவீனம்” குறித்த ஒரு சாதகமான மதிப்பீடு இருந்தது. காலனியாளர்கள் புகுத்திய நவீன அம்சங்கள் இந்திய சமூகத்தின் பிற்போக்கு தன்மையை பின்னுக்கு தள்ள உதவும் என கருதினர். சமூக விடுதலைக்கும் காலனியாதிக்கத்திற்கும் இருந்த தொடர்பு சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை.

சமூக மாற்றத்தை பின்னுக்கு தள்ளிய இந்திய தேசியம்

இந்த சீர்திருத்த இயக்கங்களுக்கு இணையான காலகட்டத்திலும் அதற்கு பின்பும் உருவான இந்திய அறிவுஜீவிகள் காலனி ஆதிக்கம் குறித்து சரியான மதிப்பீடு உருவாக்கினர். காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டமும் சமூக பிரச்சனைகளுக்கான போராட்டமும் இணைந்து நடத்தப்பட வேண்டும் என எண்ணினர். இது மறுமலர்ச்சி காலத்தின் இரண்டாவது கட்டம் ஆகும். இந்திய தேசிய இயக்கம் மறுமலர்ச்சி இயக்கத்தின் அவசியத்தையும் உணர்ந்தது. அதாவது அரசியல் மாற்றத்திற்கான போராட்டத்துடன் சமூக மாற்றத்திற்கான போராட்டம் இணைக்க வேண்டியதன் தேவை உணரப்பட்டது. இது மிகவும் சாதகமான வளர்ச்சிப்போக்கு ஆகும். ஆனால் இது தொடரவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்று!

காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போரட்டம் வலுவடைந்த பொழுது அரசியல் போராட்டத்திற்கு அளித்த முக்கியத்துவம் சமூக மாற்றத்திற்கான போராட்டத்திற்கு தரப்படவில்லை. “இந்திய தேசிய சமூக மாநாடு” எனும் அமைப்பின் தோற்றமும் அதன் மறைவும் இதனை தெளிவாக்குகிறது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் அமைப்பில் அரசியல் மட்டுமே பேசவேண்டும் எனவும் சமூக முரண்பாடுகள் குறித்து பேசக்கூடாது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. இதன் காரணமாக ரானடே போன்றவர்கள் “இந்திய தேசிய சமூக மாநாடு” எனும் அமைப்பை உருவாக்கினர். இது காங்கிரசின் அங்கம் போலவே செயல்பட்டது. காங்கிரஸ் மாநாடு நடக்கும் அதே நேரத்தில் அதே இடத்தில் இந்த அமைப்பும் கூடியது; சமூக சீர்திருத்தம் குறித்த பல விவாதங்கள் நடத்தப்பட்டன; தீர்மானங்கள் இயற்றப்பட்டன. ஆனால் குறுகிய காலத்திலேயே இது செயலற்று போனது. தேசிய இயக்கம் எதற்கு முன்னுரிமை அளித்தது என்பதை இது தெளிவாக வெளிப்படுத்தியது.

ஒத்துழையாமை இயக்கம் வரிகொடா இயக்கம் என தொடர்ச்சியான போரட்டங்கள் மூலம் தேசிய இயக்கம் வலுவடைந்து முன்னேறியது. ஆனால் சமூக மறுமலர்ச்சி இயக்கம் பின்தங்கியது. ஒரு புறம் தேசிய இயக்கம் பீடுநடை போட்டு முன்னேற்றம் காண மறுபுறம் சமூக இயக்கம் பழமைவாதத்திலும் மூடநம்பிக்கைகளிலும் மூழ்கி கிடந்தது. சாதிய உணர்வும் மத உணர்வும் மேலோங்கிட இந்நிலை வழிவகுத்தது. காந்திஜியின் சில நடவடிக்கைகள் அரசியல் போராட்டத்துடன் சமூக மறுமலர்ச்சி போராட்டத்தை இணைத்திட வாய்ப்பு உருவாக்கியது.  கிராம சுயராஜ்யம், தீண்டாமை ஒழிப்பு மதஒற்றுமை ஆகியவை குறித்தும் காந்திஜி சில இயக்கங்களை உருவாக்கினார். இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் இரண்டாவது கால கட்டத்தில் இது முக்கியமான தருணமாக இருந்தது. ஆனால் இது முழுவீச்சை அடையவில்லை. காங்கிரஸ் இயக்கம் முழுவதையும் இதனை நோக்கி செயல்படுத்துவதில் காந்திஜி வெற்றிபெறவில்லை என்றுதான் கூறவேண்டும்.

அரசியல் போராட்டத்திற்கும் சமூக மறுமலர்ச்சி போராட்டத்திற்கும் இடையே உருவான இந்த இடைவெளி இந்திய சமூகத்தில் பல பாதகமான பின்விளைவுகளை உருவாக்கியது. சமூக அரங்கில் பின்தங்கிய உணர்வை தேசிய உணர்வு விளைவித்தது. காங்கிரசுக்கு தலைமை தாங்கியவர்களின் ஒரு பகுதியினருக்கு முற்போக்கு கருத்துகள் இருந்தாலும் அது நடைமுறையில் பிரதிபலிக்கவில்லை. மறுமலர்ச்சி இயக்கத்தின் முதல் கட்டம் சமூக பிரச்சனைக்கு முன்னுரிமை அளித்து அரசியல் போராட்டத்தினை பின்னுக்கு தள்ளியது. மறுமலர்ச்சியின் இரண்டாவது கட்டம் அரசியல் போராட்டத்திற்கு முன்னுரிமை அளித்து சமூக பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளியது.

மார்க்சியமும் மறுமலர்ச்சியும் சங்கமித்த மூன்றாவது கட்டம்

இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் மூன்றாவது கட்டம் காலனியாதிக்கத்தின் முடிவில் தொடங்குகிறது.  இந்த மூன்றாவது கட்டம்  மார்க்சியமும் மறுமலர்ச்சியும் சங்ககமித்த காலம் ஆகும். உண்மையில் மறுமலர்ச்சியின் பல்வேறு அம்சங்கள் மார்க்சியத்தினுள் பொதிந்துள்ளன. மறுமலர்ச்சியின் அம்சங்கள் கம்யூனிஸ்டு இயக்கத்தின் ஒன்றிணைந்த நிகழ்ச்சி நிரல் ஆகும். சாதிய கட்டமைப்பை அகற்றுவது அல்லது பாலின சமத்துவம் என்பது தொடர்ந்து கம்யூனிஸ்டு இயக்கத்தின் பிரிக்கமுடியாத கோட்பாடுகளாக உள்ளன. மூன்றாவது கட்டம் என்பது முதல் மற்றும் இரண்டாவது கட்டத்தின் தொடர்ச்சியே ஆகும். சாதிய ஒழிப்பு, பாலின சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவை முதல் இரண்டு கட்டங்களிலும் இடம் பெற்றிருந்தன.

இடதுசாரி இயக்கத்தின் இலக்கு என்பது சமகால கலாச்சார சமூக நடைமுறைகளில் சீர்திருத்தம் கொண்டு வருவது என்பது அல்ல; மாறாக இவற்றை முற்றிலும் மாற்றுவது என்பதே இலக்கு ஆகும். அவ்வாறு அடிப்படை தீவீர மாற்றத்திற்கு முயலும்பொழுது இடதுசாரி இயக்கம் மறுமலர்ச்சி என்பதற்கு புதிய பொருள் தர முனைகிறது. எனினும் பல்வேறு காரணங்களால் மறுமலர்ச்சி இயக்கத்தின் மூன்றாவது கட்டத்தை இடதுசாரி இயக்கம் வெற்றிகரமாக உருவாக்கிட இயலவில்லை என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது. இது ஆச்சர்யமாக அல்லது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை.

தேவை மறுமலர்ச்சியின் நான்காவது கட்டம்

மறுமலர்ச்சி என்பது முற்று பெற்ற நிகழ்வு அல்ல. அது தொடர் நிகழ்வு. சமூகம் அல்லது பொருளாதாரத்தில் முக்கிய பெரிய மாற்றங்கள் நிகழும்பொழுது மறுமலர்ச்சியின் பல்வேறு அம்சங்களிலும் இந்த மாற்றங்கள் பிரதிபலிக்கின்றன. ஒரே மாதிரியான நிகழ்வுகளை இரண்டாவது முறையாக மறு ஆக்கம் செய்ய இயலாது. அது போல மறுமலர்ச்சியின் முதல் கட்டத்தில் உருவாக்கப்பட்ட மதிப்புகளை மாறுபட்ட இன்றைய சூழல்களில் அரங்கேற்க இயலாது. ஏனெனில் முதலாளித்துவமும் நவீன தாராளமயமும் முற்றிலும் வேறுபட்ட புறச்சூழலை உருவாக்கியுள்ளன. முதல் கட்டத்தின் மதிப்புகள் செல்லாதவையாக ஆகிவிட்டன என இதன் பொருள் அல்ல! ஆனால் சமூக சூழலும் காலமும் மாறிவிட்டன. எனவே அந்த மதிப்புகளை புத்தாக்கம் செய்ய வேண்டிய தேவை உள்ளது.

மறுமலர்ச்சியின் முதல் காலகட்டம் என்பது காலனிய நிலபிரபுத்துவ சூழல் ஆகும். அந்த சூழலில் உருவான மறுமலர்ச்சியின் மதிப்புகளை அப்படியே பொருத்துவதற்கு பதிலாக இடதுசாரி இயக்கம் மறுமலர்ச்சியை புதியதாக மீண்டும் படைக்க வேண்டும். இந்த மறுமலர்ச்சி என்பது சுரண்டப்படும், ஒடுக்கப்படும் மற்றும் விளிம்பு நிலைக்கு தள்ளப்படும் மக்களின் கோணத்திலிருந்து படைக்கப்பட வேண்டும். சோசலிச மனித நேயம் என்பது

அரசியல் சமூக சமத்துவத்தை தனது குறிக்கோளாக கொள்வது மட்டுமல்ல; கலாச்சார மற்றும் அறிவுசார் விடுதலையையும் தனது இலட்சியமாக கொண்டுள்ளது.

சமூகத்தில் தற்சமயம் நிலவும் வன்முறையும் சகிப்பற்ற தன்மையும் மறுமலர்ச்சியின் முதல் காலகட்டத்தில் உருவான மதிப்புகளின் தோல்வியால் விளைந்தவை அல்ல! மாறாக அந்த மதிப்புகளை இன்றைய சூழலுக்கு பொருத்துவதில் நமக்கு உருவான பின்னடைவுதான் முக்கிய காரணம் ஆகும். தொழில்நுட்பமும் அறிவியலும் உருவாக்கும் புதிய வசதிகள் மூலம் எதார்த்த புறஉலகம் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் கலாச்சார கருத்துகளின் சூழலோ சீரழியவில்லை என வைத்துக்கொண்டாலும் தேக்கம் அடைந்துள்ளது.

சமூகத்தில் பல்வேறு மதிப்புகள் மேலும் மேலும் வீழ்ச்சி அடைந்துகொண்டுள்ளதை தடுக்க நம் முன் உள்ள வழி அரசியலுக்கும் கலாச்சாரத்திற்கும் உள்ள தொடர்பை மறுசிந்தனைக்கு உட்படுத்துவதுதான்! அரசியல் என்பது கலாச்சாரத்தை தூண்ட வேண்டும்; கலாச்சாரம் அரசியலை செழுமைப்படுத்த வேண்டும்.

இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் நான்காவது கட்டம் குறித்து சிந்திக்க இது சரியான தருணம் எனில் மிகை அல்ல!

(பிரண்ட்லைன் இதழில் கே.என். பணிக்கர் எழுதிய கட்டுரையை தழுவி எழுதியது)

 

ஒரு கருத்து

கருத்தைப் பதிவு செய்யவும்