சமீர் அமின்: அரசியல் பொருளாதார சிந்தனையும் மார்க்சிய பங்களிப்பும்

நைல் நதிக்கரையில் பிறந்து, ஐரோப்பாவில் வளர்ந்து, ஆப்பிரிக்காவில் வாழ்ந்து, லத்தீன் அமெரிக்க, ஆசிய, அரபு நாட்டு மக்களின் மேம்பாட்டுக்கான ஆய்வுகளைச் செய்து கடைசிவரை பணியாற்றினார்.

1410
1
SHARE

ஏ. ஆறுமுக நயினார்

சமீர் அமின் :

பேராசிரியர் சமீர் அமின் (1931-2018)‘நான் அறிந்த மூன்றாம் உலக நாட்டு அறிவு ஜீவிகளின் வரிசையில் மிகச் சிறந்த தீர்க்க தரிசனமும், தளராத ஈடுபாடும், மன உறுதியும் நிறைந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளில் முதன்மையானவர் சமீர் அமின் ’ என்று மார்க்சிய பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் தெரிவிக்கிறார். எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 1931 ஆம் ஆண்டு பிறந்த சமீர் அமின் கடந்த ஆகஸ்ட் 12, 2018 அன்று உடல் நலக் குறைவின் காரணமாக மறைந்தார் என்ற செய்தி மார்க்சிய சிந்தனையாளர்கள் வட்டத்தில் பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.எகிப்தில் பிறந்து பள்ளிக்கல்வியைத் தொடர்ந்த அவர் மேல்நிலைப் பள்ளிக் காலத்திலேயே தன்னை ஒரு கம்யூனிஸ்டாக வரித்துக்கொண்டார். பின்னர் எகிப்து கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். அன்று முதல் இறக்கும் தருவாய் வரை அவர் ஒரு கம்யூனிஸ்டாகவே திகழ்ந்தார். 1952 ஆம் ஆண்டு பிரான்சில் அரசியல் விஞ்ஞானத்தில் பட்டமும், 1956ல் புள்ளியியலில் பட்டமும், 1957 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். பின்னர் பொருளாதாரப் பேராசிரியராக பாரிசிலும், ஆப்பிரிக்க பல்கலைக் கழகங்களிலும் பணியாற்றினார்.கெய்ரோவில் உள்ள பொருளாதார நிர்வாக கல்வி நிறுவனத்தில் 1960 ஆம் ஆண்டு பணியாற்றிய பின்னர் 1960 – 63 காலத்தில் மாலி நாட்டின் திட்ட அமைச்சக ஆலோசகர் பணியில் திறம்பட செயல்பட்டார். பாரிசில் இருந்த காலத்தில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் (பி.சி.எப்) கட்சியில் இணைந்து பணியாற்றினார். செனகல் நாட்டின் டாக்கர் நகரில் உள்ள அரசியல் பல்கலைக் கழகத்திலும் சில காலம் பேராசிரியராகப் பணி புரிந்தார். ஆப்ரிக்காவுக்கான சமூக விஞ்ஞான வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலை (CODESRIA) உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். ஆப்பிரிக்காவின் சுற்றுப்புறச்சூழல் வளர்ச்சி (ENDA) நிறுவனத்தையும் அவர் உருவாக்கினார்.1980ஆம் ஆண்டில் டாக்கர் நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயலாற்றிய மூன்றாம் உலக நாடுகளின் மன்றம் (Third World Forum) அமைப்பின் நிறுவனராக பல காலம் செயல்பட்டார். சுதந்திர சிந்தனைக்கான ரஷ்ட் விருது 2009ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற Monthly Review என்ற சோசலிச பத்திரிக்கையில் ஆரம்பகாலம் முதலே பல கட்டுரைகளை எழுதத் தொடங்கி அந்தப் பங்களிப்பைச் இறுதிவரை செய்தார். மாற்றுக் கொள்கைகளுக்கான உலக மன்றம் (World’s Forum for Alternatives) என்ற அமைப்பில் 1997 முதல் தலைவராக செயல்பட்டார்.எகிப்திய தந்தைக்கும், பிரெஞ்சு அன்னைக்கும் மகனாகப் பிறந்த சமீர் அமின் மிகச் சுலபமாக பிரெஞ்சு, அரபி மற்றும் ஆங்கில மொழிகளில் விற்பன்னராகத் திகழ்ந்தார். அவர் 1970 முதல் இறுதி வரை 30க்கும் மேற்பட்ட அரிய நூல்களை எழுதி உள்ளார். உலகளாவிய அளவில் மூலதனச் சேர்க்கை (1974), சமனற்ற வளர்ச்சி (1976), ஏகாதிபத்தியமும் சமனற்ற வளர்ச்சியும் (1979), உலகமயமாக்கல் காலத்தில் முதலாளித்துவம் (1997), காலாவதியாகிப்போன மூலதனம் (1998), ஐரோப்பிய மைய இயல் (2005), முன்னோக்கிய பார்வையில் ஒரு வாழ்க்கை (2006), ஒரு நூற்றாண்டுக்குப் பின் புரட்சி (ரஷ்ய புரட்சி 1917 – 2017) ஆகிய நூல்கள் அவற்றில் மிகவும் புகழ் பெற்றவை.

(குரல்: யாழினி)

மரணம் என்பது மனிதனின் சமூகம் சார்ந்த பங்களிப்பில் இருந்து ஒருவரை அத்தனை எளிதாகப் பிரித்துவிட முடிவதில்லை. சமீர் அமின் என்ற மார்க்சிய சிந்தனையாளர், பொருளாதார பேரறிஞர், ஏகாதிபத்திய எதிர்ப்பு செயல்பாட்டாளர், மூன்றாம் உலக நாடுகளுக்கான போராளி, ஆகஸ்ட் 12, 2018 அன்றோடு மறைந்துவிட்ட நிலையில் அவரது பங்களிப்புகள் முற்றுப்பெறவில்லை அல்லது மறைந்து விடவில்லை.

சமூகம் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் அவரது அறிவார்ந்த பங்களிப்பு உற்று நோக்கப்படுவதாகவும், மேலும் செழுமைப்படுத்தி உபயோகப்படுத்தவேண்டிய ஆயுதமாகவும் விளங்குகிறது. சுரண்டலுக்கு எதிராகத் திரளும் மக்களுடன் சமீர் இன்றைக்கும் கைகோர்த்து நடக்கிறார்; ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் தோளோடு தோள் நிற்கிறார்; மக்களைப் பிளவுபடுத்துபவர்களுக்கு எதிராக, தேச எல்லைகளுக்கு அப்பால் ஒருமைப்பாட்டை உருவாக்குகிறார்; சுரண்டலுக்கு எதிரான அணி திரட்டலைச் செய்கிறார். அவரின் மரணத்திற்கு பின்னும் அவர் மேற்கொண்ட பாதையில் மேலும் உற்சாகமாக ஈடுபட அவரது நூல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், கொள்கை விளக்கங்கள் உத்வேகமளிக்கின்றன.

“வடக்கு-தெற்கு” அரசியல் பொருளாதாரம்

அவரது அரசியல் பொருளாதார பங்களிப்புகளில் பிரதானமானது வடக்கு – தெற்கு சம்பந்தமானது. ஊடகங்களிலும், பல்கலைக் கழகங்களிலும், மிக உயர்ந்தபட்ச சர்வதேச அமைப்புகளிலும் பயன்படுத்தக்கூடிய பதங்களாக இருந்தாலும் கூட அவை யதார்த்தமான சூழல்களையும், அதன் தன்மைகளையும், அதன் அரசியல் பொருளாதார ஆதிக்கங்களையும் வெளிக்கொண்டு வருகிற பதப்பிரயோகங்களாக அவை அமைந்துவிடுகின்றன. பெரும்பான்மையான வளர்ந்த நாடுகள் பூமத்திய ரேகைக்கு வடக்கேதான் உள்ளன. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் உட்பட ஜி7-ஐ பிரதிநிதித்துவப்படுத்துகிற அனைத்து நாடுகளுமே வடக்கே உள்ளன. மாறாக லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசிய/தெற்காசிய நாடுகளின் கணிசமான பகுதிகள் சிறிது வடக்கே இருந்தாலும் கிழக்கு நாடுகளான ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் இன்னும் சொல்லப்போனால் ஐரோப்பாவிற்குத் தெற்கே உள்ள வளைகுடா நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் ‘தெற்கு’ என்ற அரசியல் பொருளாதார மொழியால் வர்ணிக்கப்படுகின்றன.

உலக முதலாளித்துவத்தையும், ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாண்மையையும் எப்படி வளர்ந்த பணக்கார நாடுகளான, ‘வடக்கு’ நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன என அமின் விளக்குகிறார். ‘தொழில்நுட்பத்தில் ஏகபோகம், அனைத்து இயற்கை வளங்களையும் கையகப்படுத்துவது, அனைத்து நிதியங்களையும் ஆளுமை செய்வது, உலகளாவிய ஊடகங்களின் முழு ஆதிக்கம் மற்றும் அனைத்து அழிவு ஆயுதப் பெட்டகங்களையும் தன் வசம் வைத்திருப்பது’ ஆகிய ஐந்து வழிகளில் உலக முதலாளித்துவம் தன்னிகரற்ற உலக சக்தியாக வலம் வருவதை சமீர் அமின் தனது ஆய்வுகளில் வரிசைப்படுத்துகிறார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அறிவு ஜீவி ஏவுகனைகளாக இந்த ஆய்வுத் தாக்குதல்களை அவர் தொடுக்கிறார். மூன்றாம் உலக சிந்தனையாளர்கள் – பதவிக்கும், பொருளுக்கும் சுலபமாக விலைபோய் விடக்கூடியவர்கள் என்ற கூற்றைப் பொய்யாக்கி, சமீர் அமின் தனது இறுதி மூச்சு உள்ளவரை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆய்வுகளைச் செய்தார். இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக கூட சமகாலப் பொருளாதார அறிவு ஜீவிகளுக்கு – உலகளாவிய அளவில், குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் உள்ளோருக்கு அவர் அனுப்பிய மின் அஞ்சலே அதற்கு சாட்சி. உடனடியாக ஒரு “சோசலிச அகிலம்” உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை அவர் அனைவருக்கும் அதன்மூலம் முன்வைத்தார். பேராசிரியர் ஜெயதி கோஷ் தனது அஞ்சலிக்குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுக் கூறி, முன்முயற்சி எடுக்க முடியாததற்கு நாங்கள் வெட்கிக் குனிகிறோம், நீங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்கிறோம், நீங்கள் கோரியவற்றில் சிலவற்றையாவது நிறைவேற்றுவதே நாங்கள் உங்களுக்குச் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என அவர் தெரிவிக்கிறார்.

ஏகாதிபத்தியத்தையும், சமகால முதலாளித்துவத்தையும் நுணுக்கமாக ஆய்வு செய்த சமீர் அமின் எவ்வாறு வடக்கு – தெற்கு பிளவு என்பது தெளிவாகியுள்ளது என்பதை விளக்கினார். வளர்ந்த ஏகாதிபத்திய மையம் என்பது நடுவிலும் (Core) புறக்கணிக்கப்பட்ட தெற்கு என்பது விளிம்புகளிலும் (Periphery) எவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது அவரது ஆராய்ச்சிகளில் பிரதான உள்ளடக்கமாக இருந்தது.

வர்க்கச்சுரண்டலும் முதலாளித்துவ நெருக்கடியும்

‘உலகளாவிய மதிப்பின் சட்டம்’ என்ற அவரது நூலில் மையம் – விளிம்பு ஆகிய பகுதிகள் எவ்வாறு வர்க்கச் சுரண்டலில் வகைப்படுத்தப்பட்டுள்ளன என ஆய்வு செய்கிறார். 1) ஏகாதிபத்திய பெருமுதலாளித்துவ வர்க்கம் மையத்தில் உபரி மதிப்பு முழுவதையும் குவிப்பது 2) மையத்தில் உழைப்புக்கு ஓரளவு நிவரணம் பெறும் பாட்டாளி வர்க்கப் படை நிரந்தரமற்ற அச்சத்துடனேயே உள்ளது. 3) மையப் பெருமுதலாளி நலனுடன் இணைந்துள்ள, விளிம்பில் உள்ள பெருமுதலாளித்துவ வர்க்கம் – அது தரகுத்தன்மை கொண்டது 4) விளிம்பிலுள்ள தொழிலாளி வர்க்கம் ஒட்டச் சுரண்டப்படுவது; அதனது கூலி சமனற்ற பரிவர்த்தனை (Unequal Exchange) மதிப்பு கொண்டது 5) விளிம்பில் உள்ள விவசாய வர்க்கம் அதுவும் மேற்கூறியது போல உற்பத்தியுடன் இருந்து பிரிக்கப்பட்டு ஒட்டச் சுரண்டப்படுவது. 6) பெருமுதலாளித்துவமல்லாத அடக்குமுறை வர்க்கங்கள் முதலாளித்துவ சார்பாளர்கள், தனிப்படைகள் உடையோர், ஆட்சியதிகாரத்தின் ஆதிக்க சக்திகள்.

மேற்கூறிய ஆறு வழிகளில் மையத்திலும், விளிம்பிலும் இன்றைய முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தில் வர்க்கச் சுரண்டல் நடைபெற்று வருவதை சமீர் விளக்குகிறார்.

முதலாளித்துவம், சமீபகால வரலாற்றில் பல நெருக்கடிகளுக்கு ஆளானபோதிலும் அந்தந்தக் காலங்களின் தன்மைக்கு ஏற்ப சில உடனடி மாறுதல்களைச் செய்துகொண்டு அது தன்னைப் புனரமைத்துக்கொள்கிறது. மனித சமூகத்தையும், இயற்கைச் செல்வங்களையும் மானுடத்துக்கான இயற்கையின் கொடை என்ற நிலையில் இருந்து அவற்றை பண மதிப்பில் பரிவர்த்தனை செய்யக் கூடிய சரக்காக, பண்டமாக அது மாற்றியுள்ளது. 1873 ஆம் ஆண்டில் தொடங்கிய 19வது நூற்றாண்டின் முதலாளித்துவ நெருக்கடி 1914 முதல் 1945 வரையிலான முப்பது ஆண்டுகள் நடந்த புரட்சி மற்றும் போர்கள் மூலம் தீர்த்துவைக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு தொடங்கிய அராஜக வர்த்தக/உற்பத்தி நெருக்கடிகள் உலகலாவிய நிதி நெருக்கடியாக 2008 ஆம் ஆண்டில் வந்து முடிந்தது.

எனவேதான், முதலாளித்துவம் ஒரு புதிய அமைப்பு சார்ந்த நெருக்கடியின் கட்டத்துக்குள் அது இன்று தள்ளப்பட்டுள்ளது. இன்று அதனுடைய வடக்கு சார்ந்த மையங்களில் வளர்ச்சியின் வேகமான வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது.

நவீன உலகமயப்பட்ட தாராளவாதம், அதன் வறட்டுத்தனமான – சுதந்திர வர்த்தகம், தனியார்மயம், தடையற்ற பரிவர்த்தனை மதிப்பு, பொதுச் செலவினச் சுருக்கம் – ஆகியவற்றின் காரணமாக, முதலாளித்துவத்தை நெருக்கடியிலிருந்து வெளியேற்றுவதற்கான கதவுகள் அனைத்தையும் மூடி, பொருளாதாரத் தேக்கம் எனும் முட்டுச் சந்தில் உலகப் பொருளாதாரத்தைக் கொண்டு வந்து முடக்கியுள்ளது. அதை உடைத்துக்கொண்டு புதிய பொருளாதாரப் பாதையில் அடி எடுத்துவைக்க முடியாமல் அது மாட்டிக்கொண்டுள்ளது. பொது நம்பிக்கையின்படி பொருளாதார அடிப்படை விதியான “சந்தைகள்” தானாக தன்னை ஒழுங்குபடுத்திக்கொள்ளும் என்பது தோற்று விட்டது. இன்று அதற்கு அரசுக் கட்டுப்பாடும் ஒழுங்குபடுத்துதலும் தேவைப்படுகிறது – எனவும் சமீர் அமீன் முதலாளித்துவத்தின் இன்றைய நெருக்கடியைப் பற்றி பேசுகிறார்.

அவர் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறப்பதற்கு முன் அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நவீன தாராளமயக் கட்டம் குலைந்து விழுகிற கட்டத்துக்கு வந்துவிட்டது. அதன் பொருள் முதலாளித்துவம் அந்த நிலைக்கு வந்துவிட்டது என்பதல்ல. அதாவது முதலாளித்துவத்தின் இந்தக் கட்டம் நிலைகுலைந்துள்ளது. அது ஒரு புதிய கட்டத்துக்குள் மீண்டும் நுழையும். அத்தகைய கட்டம் எவ்வாறு யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது வர்க்க சக்திகளின் சார்பில் இருந்துதான் பின்னர் வெளிப்படும்”.

கண்ணியிலிருந்து பிரிவது

முதலாளித்துவ அரசியல் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதை குறித்த இந்த மார்க்சிய பார்வையின் மூலம் ஒரு புதிய மாற்றுப்பாதையை – உருவாக்க அவர் ஆலோசனை வழங்கினார். அதுதான் கண்ணியைப் பிரித்தல் (Delinking); ஏற்கனவே சங்கிலி போல் பிணைந்து அதன் பகுதியாக இருக்கும் அந்தக் கண்ணியைப் பிரித்து எடுப்பது. இது, அமீன் அவர்களது சிறப்பான அரசியல் பொருளாதாரப் பங்களிப்பாக இன்றும் பாராட்டப்படுகிறது. சமீர் அமின் மறைந்த உடனேயே அஞ்சலி செலுத்தியவர் வெனிசுவேலாவின் குடியரசுத்தலைவர் நிக்கோலஸ் மதுரோ ஆவார். நடைமுறையில் ஓரளவுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளும், மக்கள் சீனமும், பிரிக்ஸ் போன்ற அமைப்புகளும் இவர் பங்களித்த டி-லிங்கிங், “கண்ணியிலிருந்து பிரிதல்” என்ற அரசியல் பொருளாதாரக் கோட்பாட்டினை ஒட்டி நடைபெற்று வரும் நடவடிக்கைகளாக பார்க்கப்படுகின்றன. பொலிவாரியப் புரட்சி இயக்கங்களும், பல துருவ உலக முயற்சிக்கான நடவடிக்கைகளிலும், சீனா, இரான், ரஷ்யா, பொலிவியா ஆகியவற்றின் பொருளாதாரப் பாதைகளிலும், பிராந்தியக் கூட்டுகளான அல்பா, ஆப்பிரிக்க ஒருமைப்பாடு ஆகிய பல அமைப்புகளிலும் அமீன் அவர்களது கண்ணியை விலக்கும் கோட்பாடு மிகப்பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது.

சமீபத்திய ஓர் ஆய்வறிக்கையில் பொருளாதார நிபுணர் ஏ.கே.அன்வர் கண்ணியைப் பிரிப்பது (Delinking Theory) பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

“எளிமையாகக் கூறுவதானால், தேசப் பொருளாதார அமைப்பு, வெளி அரசுகளின் மேலாதிக்கத்துக்கும், நிர்ப்பந்தங்களுக்கும் பணியாமல், தனது நாட்டு வளர்ச்சிப் பாதையை மையப் பொருளாகக் கொண்டு பொருளாதாரத் திட்டமிடலைச் செய்ய வேண்டும்” என்பதே அது ஆகும்.

சர்வதேச அரசியல் பொருளாதார அரங்கில் அவரது “கண்ணியிலிருந்து பிரிவது” என்பது தீவிரத் தத்துவார்த்த பங்களிப்பாக கருதப்படுகிறது.

எந்தத் தத்துவமும் – விளக்கமும் ‘புனிதமான’ சொத்துடைமையின் தன்மையைக் கேள்வி கேட்காவிடில் – அவை பொருளற்றவை ஆகிவிடும். சொத்துடைமையாளர்களின் ஆதிக்கத்தையும் – அதற்கு தேவையான சமத்துவமற்ற சொத்துடைமை வடிவத்தையும் மாற்றுகிற வர்க்கப் போராட்டத்தின் மீது சமீர் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருந்தார்.

எனவேதான், கண்ணியிலிருந்து பிரிவது என்ற கோட்பாட்டை முன்மொழியும்போது அது நீண்டகாலத் திட்டத்தின் கோட்பாடாக (Strategy) அமைய வேண்டுமென அவர் கருதினார். அது “தன்னெழுச்சியாக, நடைமுறைத் தேவையாக, மூலதனம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் தேவைக்கு தன்னைச் சரி செய்துகொள்வது;தமது சுயவளர்ச்சிக்குப் பதிலாக ஏகாதிபத்திய நலன்களை முதன்மைப்படுத்தி சட்டத் திட்டங்களை சரி செய்து கொள்வது”என்ற நிலைமையை மாறற வேண்டும் எனக் கோரினார்.

சமனற்ற உலகில், நாடுகளின் தனித்த வளர்ச்சிப்பாதை சார்ந்த திட்டமிடுதல் வெற்றிபெறக் கூடியதுதான் என அவர் உறுதியாக நம்பினார். நாடுகளுக்கு தொழில்நுட்பம், தொழில் வளர்ச்சி ஆகியவை தேவைதான்; வெளிநாட்டு ஒத்துழைப்பு தேவைதான். எனவே அந்நிய மூலதனத்தைக் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என அவர் கூறினார்.

இன்றைய தேவை பல துருவ உலகம்

உலகமயமாதல் என்பது ஏகாதிபத்தியத்தின் பொருளாதார விரிவாக்கத்தின் ஒரு கட்டம். உலக பெருமுதலாளித்துவ நிதி மூலதனம் அதைக் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள். அவர்கள் உலக உற்பத்தி, பொருளாதார-அரசியல் வாழ்க்கை ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். எனவே அந்த உலகமயமாதலை விட்டு வெளியே வாருங்கள் என சமீர் அறைகூவல் விடுத்தார்.

வளர்ந்த “வடக்கு” என்பது தெற்கைக் கபளீகரம் செய்துகொள்ளும். உலகமயமாக்கல் சவாலுக்கு கண்ணியிலிருந்து பிரிவதுதான் சரியான வழி. அது உயர்ந்த ஒரு கருத்துருவமாகப் படலாம். ஆனால் நடைமுறைப்படுத்தமுடியாத மாயை அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

உலகளாவிய அமைப்புகளை விளிம்புகளிலுள்ள தெற்கு நாடுகளைக் கொண்டு மறுகட்டுமானம் செய்யவேண்டும் என அவர் கோரினார். லத்தின் அமெரிக்க நாடுகள், ஆப்ரிக்க நாடுகள், அரபு நாடுகள், கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா, சீனா போன்ற முன்னணி நாடுகள் இவற்றைச் செய்ய முடியும். கூட்டுச் சேரா நாடுகளின் அனைத்து உறுப்புக்களையும் இதில் இணைக்க முடியும் என அவர் வலியுறுத்தினார். பல துருவ உலக முயற்சிகள் வெற்றி பெறும் காலத்தில் நாம் இருக்கிறோம் என அவர் கருதினார்.

சமீர் அமீன் உலக நடப்புகளின் பல்வேறு விசயங்கள் குறித்து தலையீடு செய்யக்கூடிய, தைரியமாகப் பொது வெளியில் கருத்து தெரிவிக்கக்கூடிய அரசியல் விஞ்ஞானியாகத் திகழ்ந்தார்.

அவர் மக்கள் சீனத்தின் அரசியல் பொருளாதார வளர்ச்சி குறித்து அபரிமிதமான நம்பிக்கை கொண்டிருந்தார். “கம்யூனிச நோக்கங்களை முதலாளித்துவப் பாதையில்” (Communist ends, Capitalist means) என பொருளாதார அறிஞர்கள் கிண்டலடிப்பதை அவர் கடுமையாகச் சாடினார். ஐரோப்பிய அமெரிக்க நாடுகளால் முடியாத ஒரு சமூகத்தை மக்கள் சீனத்தால் எவ்வாறு நிர்மாணிக்க முடிந்தது என்பதைக் கூர்ந்து ஆராய்ந்தார். கண்ணியிலிருந்து பிரிவதன் கருத்தாக்கத்துக்கு இது மிகவும் உதவி செய்தது. மக்களை மையப்படுத்தி சுயேட்சையான வளர்ச்சியக் கருத்தில்கொண்டு அந்நிய மூலதனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, லட்சியங்களைக் காவுகொடுக்காமல் ஒரு புதிய பொருளாதாரப் பாதையைத் தேர்வு செய்யக்கூடிய சாதுர்யம் மக்கள் சீனத்துக்கு இருந்தது என்பதை அவர் உலகுக்குக் காட்டினார். அவர் மாவோ மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். இன்றைய வளர்ச்சிப்பாதையின் மிக முக்கியமான சோசலிச அடித்தளத்தையும் கட்டுமானத்தையும் மாவோ உருவாக்கினார். அதன் காரணமாகவே 1966 ஆம் ஆண்டில் நடைபெற்ற “கலாச்சாரப் புரட்சி”-யைக் கூட அவர் ஆதரித்தார். “தலைமையகத்தைத் தகருங்கள்” என்ற கோஷம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அன்றைய தலைமுறை மக்கள் சீனத்தின் தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையையும், கொள்கை உறுதியையும் அவர் சரியாகப் புரிந்து வைத்திருந்தார் . ஆனால் இன்று மக்கள் சீனத்தில், சந்தை, அந்நிய மூலதனம், வர்த்தகம் என அனைத்தும் உள்நாட்டு வளர்ச்சியின் தேவையை ஒட்டியே தீர்மானிக்கப்படுகின்றன என்பது அவருக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது.

இஸ்லாமிய அரசியல் பற்றிய அவரது கருத்து கூர்ந்து கவனிக்கப்படவேண்டியது. “…அது ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மை கொண்டதல்ல. தீவிரவாதக் குழுக்கள் ஒருவேளை அவ்வாறு கருதிக்கொள்ளலாம். அவர்கள் ஏகாதிபத்தியத்தின் முக்கியக் கூட்டாளிகளாக உள்ளார்கள் என்பது “இஸ்லாமிய அரசியல்” செய்பவர்களுக்கு தெரிந்தேதான் இருக்கிறது. சவூதி அரேபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆளும் வர்க்கங்களின் செயல்பாடு இவற்றையெல்லாம் தெரிந்த வகையில்தான் உள்ளது.

அவர் என்றுமே இஸ்லாம் மதத்தையோ அதன் அடிப்படைகளையோ விமர்சித்தத்தில்லை. அதே சமயம் ஐரோப்பிய மற்றும் வடக்குப் பிரதேசங்கள் கையாள்கிற, “இஸ்லாமியோ போபியா” என அழைக்கப்படுகின்ற முஸ்லிம் எதிர்ப்பு நிலையைக் கடுமையாகச் சாடினார்.

ஒரு கொள்கைப் பிடிப்புமிக்க எகிப்திய கம்யூனிஸ்ட்டாக வாழ்க்கையைத் துவங்கிய சமீர் அமின் இறுதிவரை கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பாளனாக, மூன்றாம் உலக நாடுகளின் நண்பனாக, சோசலிசத்தின் ஆதரவாளனாக, செயல்பாட்டிலும், நடைமுறையிலும் மிகுந்த மனமார்ந்த ஈடுபாடு கொண்ட அறிவு ஜீவியாகத் திகழ்ந்தார். எதிர் நீச்சல்போட்டு, போராடி வெல்லவேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

நைல் நதிக்கரையில் பிறந்து, ஐரோப்பாவில் வளர்ந்து, ஆப்பிரிக்காவில் வாழ்ந்து, லத்தீன் அமெரிக்க, ஆசிய, அரபு நாட்டு மக்களின் மேம்பாட்டுக்கான ஆய்வுகளைச் செய்து கடைசிவரை பணியாற்றினார்.

மார்க்ஸ் பிறந்த 200ஆம் ஆண்டு, ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு ஆகியவற்றை – அதன் அனுபவங்களையும் கண்டறந்து ஏகாதிபத்தியத்தின் அசைவுகளைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டிய மாபெரும் மனிதாபிமானியான சமீர் அமின் அவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. “நீங்கள் விட்டுச் சென்ற அரும்பணியை நாங்கள் தொடர்வோம்” – என்பது தான்.

ஒரு கருத்து

கருத்தைப் பதிவு செய்யவும்