‘ட்ரம்ப் திட்டம்’ என்ற ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டால், அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

918
0
SHARE

இந்த இதழில் Leftword பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர் விஜய் பிரசாத் பதிலளிக்கிறார். நேர்காணல் ஆர்.ப்ரசாந்த். தமிழில் வீ.பா.கணேசன்.

‘ட்ரம்ப் திட்டம்’ என்ற ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டால், அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அல்லது திறமையற்றதொரு அதிபரின் குழப்பமான நடவடிக்கைகளின் தொடர்ச்சிதான் அது என்பதாகவே பார்க்கிறீர்களா?

மேலோட்டமாகத் தெரிவதை விட ‘ட்ரம்ப் திட்டம்’ என்பது மிகவும் ஒழுங்கமைவான ஒன்று என்றே நான் கருதுகிறேன். திறமையற்ற வகையில் அவரது நடவடிக்கைகள் உள்ளன என்பது உண்மைதான். டிவிட்டரிலும் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார். அவர் என்ன செய்கிறார் என்பதை தொடர்ந்து கவனிப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது என்பதோடு, அதில் ஒரு சில விஷயங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகவும் உள்ளன. என்றாலும் ட்ரம்ப்-இன் மீது மட்டுமே நம் கவனத்தைச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. முதலில் திட்டம் பற்றிப் பார்ப்போம்.

முதலாவதாக, தங்கள் வேலைகள் காணாமல் போய்விட்டன என்றும், தங்கள் எதிர்காலம் மறைந்து விட்டது என்ற எண்ணத்தோடு தாங்கள் அவமானப்படுத்தப் படுகிறோம் என்றும், தரம் தாழ்த்தப்படுகிறோம் என்றும் நினைத்துக் கொண்டிருந்த வெள்ளை இனத்தைச் சேர்ந்த கருத்தால் உழைக்கும் தொழிலாளர்களில் ஒரு பிரிவினரை மிகச் சிறப்பான வகையில் ட்ரம்ப்பினால் நெருங்க முடிந்துள்ளது. அமெரிக்காவை மீண்டும் மிகச் சிறப்பானதாக ஆக்குவோம் என்ற கோஷம் அவர்களிடையே எதிரொலித்தது. ஏனெனில் அவர்களது அமெரிக்கா, அதாவது கருத்தால் உழைக்கும் தொழிலாளர்களின் அமெரிக்கா, மிக வேகமாக மறைந்து வருகிறது என்றே அவர்கள் கருதினார்கள். அது வெள்ளையர் பிரிவைச் சேர்ந்த தொழிலாளி வர்க்கம் அல்ல; 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஒபாமா அதிபராக இருந்தபோது தேநீர் விருந்து இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த வெள்ளை இனத்தைச் சேர்ந்த கருத்தால் உழைக்கும் தொழிலாளர்கள்தான் ட்ரம்ப்பின் இயக்கத்திற்குள் பெருமளவிற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

இப்போது ட்ரம்ப் வெளிப்படுத்தும் பழமைவாதம் என்பது அமெரிக்காவை மற்ற நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தும்படியான அமெரிக்காவின் பழைய பழமைவாதத்தைப் போன்றது அல்ல. அமெரிக்காவை மீண்டும் மிகச் சிறப்பானதாக ஆக்குவோம் என்பதன் பொருள் தனது தேச நலனுக்காக சர்வதேச மேடையில் அமெரிக்கா தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும். தீவிரமான வலதுசாரிகள் வாதாடுவதெல்லாம் பிரிட்டன், ப்ரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் உள்ள தலைமை உலகமய நோக்கம் கொண்டதாக மாறியுள்ளது. அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால், இந்தத் தலைமை தங்கள் தேசிய நலன்களின் மீது கவனம் செலுத்துவதாக இல்லை என்பதே ஆகும். ஆண்டுதோறும் டவோஸ் நகரில் ஒன்று கூடும் உலகத்தின் மேல்தட்டுப் பிரிவினரின் நலன்களில்தான் அவர்கள் கவனம் செலுத்தி வந்தனர். உண்மையில் இந்த வாதத்தில் கொஞ்சம் உண்மையும் இருந்தது என்றும் கூறலாம். உண்மையில் டவோஸ் முதலாளிகளின் இந்த சர்வதேச நிர்வாகிகள் தங்களது நலன்களை கவனமாகவே பார்த்துக் கொண்டார்கள். டவோஸ் முதலாளிகளின் சார்பாகவே அவர்கள் உலக அமைப்பை நிர்வாகம் செய்து வந்தார்கள். இதற்கு மாறாக டவோஸ் முதலாளிகளின் சார்பாக இல்லாமல் அமெரிக்க முதலாளிகளின் சார்பாகவே உலக அமைப்பை நாம் நிர்வாகம் செய்ய வேண்டும் என்றுதான் ட்ரம்ப் சொல்கிறார். உலகளாவிய முதலாளிகளில் பெரும்பகுதியினர் அமெரிக்க முதலாளிகளாகவே இருக்கிறார்கள் என்பதாகவே இருந்தது. அவர்களின் திட்டத்தில் பெரும்பகுதி அமெரிக்க டாலர்-வால் ஸ்ட்ரீட் கூட்டணியால்தான் நடத்தப்படுகிறது. எனவே, ட்ரம்ப் சொல்வது என்னவென்றால், உலகப் பொருளாதார அமைப்பை நிர்வகிப்பதற்காக உலகளாவிய பொருளாதார நிகழ்ச்சி நிரல், உலகளாவிய மனித உரிமைகளுக்கான நிகழ்ச்சி நிரல் அதாவது மனித உரிமைகள் குறித்த ஜெனிவா ஒப்பந்தம் போன்றவற்றால் நாம் மிகவும் கட்டுண்டு கிடக்கிறோம். எனவே அமெரிக்க ராணுவம் மேலும் தீவிரமாக சண்டையிட வேண்டும்; மேலும் அதிகமான வன்முறையில் இறங்க வேண்டும்; அதே நேரத்தில் அமெரிக்க நிதித் துறை அமெரிக்காவில் நலன்களைப் பாதுகாப்பதற்கு மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும். எனவே ‘முதலில் அமெரிக்கா’ என்ற இந்த நிலைபாடு என்பது நிச்சயமாக மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டிருப்பது அல்ல; மாறாக, அது மேலும் மேலும் அப்பட்டமான ஏகாதிபத்தியம் என்பதைத் தவிர வேறல்ல.

எனவே ‘ஹிலாரி ஒரு ஏகாதிபத்தியவாதி என்பதால் அவரை விட ட்ரம்ப் மேலானவர்’ என்று மக்கள் சொல்லும்போது குழப்பம்தான் ஏற்படுகிறது. ஹிலாரி ஏகாதிபத்தியவாதிதான். ஆனால் ட்ரம்ப் ஊக்கமருந்தால் உரமேற்றப்பட்ட ஏகாதிபத்தியவாதி. அவரது ஏகாதிபத்தியம் மேலும் மேலும் பராக்கிரமம் மிக்க ஏகாதிபத்தியம் என்றே கூறலாம். லிபியா, சிரியா, இராக் போன்ற நாடுகளின் கண்ணோட்டத்தின்படி தங்களின் மீது குண்டுகள் வந்து விழும்போது, அது நடுத்தரமான ஏகாதிபத்தியவாதி போட்டதா? அல்லது முரட்டுத் தனமான ஏகாதிபத்தியவாதி போட்டதா? என்பது முக்கியமில்லை. என்றாலும் கூட, ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, ஒரு மார்க்சிய கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இதிலுள்ள ஒருசில வேறுபாடுகளை நாம் கண்டறிவது மிகவும் முக்கியமாகும். ஹிலாரி அதிபராக இருந்திருந்தால் ஒரு விதமான உலகளாவிய கண்ணோட்டத்துடன்  ஆட்சி செய்திருப்பார்; உலகளாவிய முதலாளிகளின் நிர்வாகியாகவும் அவர் இருந்திருப்பார். உலகம் முழுவதிலும் இருந்து வரும் சமிக்ஞைகள் குறித்து ஓரளவிற்கு உணர்ச்சியை வெளிப்படுத்துபவராகவும் இருந்திருப்பார். ஆனால் ட்ரம்ப்-ஐப் பொறுத்தவரையில், இவை குறித்தெல்லாம் முற்றிலும் கவலைப்படாத ஒருவராகவே இருக்கிறார். அதனால்தான் அவர் ஐரோப்பாவிற்குச் சென்றபோது அவர்களது திட்டத்திற்காக ஜெர்மன் முதலாளிகளை, ப்ரெஞ்சு முதலாளிகளை மிரட்டுகிறார். அவர்களைக் கேலி செய்கிறார். அமெரிக்க முதலாளிகள்தான் முதன்மையானவர்களாக இருக்க வேண்டும் என்றே அவர் நம்புகிறார். எனவே இந்த இரு ஏகாதிபத்தியங்களும் அதன் வகையில் அல்ல; அளவில்தான் வேறுபட்டவையாக இருக்கின்றன.

கருத்துக்கள் இல்லை

Please start yout discussion here ...