வி.பி.சிந்தன் எனும் தோழமை …

1390
0
SHARE

ஏ.கே. பத்மநாபன்

தோழர் வி.பி.சிந்தன் அவர்களது நூற்றாண்டு விழா இன்றைய தலைமுறையினர் அவரையும், அவரைப் போன்றவர்கள் வாழ்ந்து பணியாற்றிய காலம் பற்றியதுமான வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்ப்பதற்கும் பயில்வதற்குமான காலமாகப் பயன்பட வேண்டும்.

ஏனெனில் ஒரு கம்யூனிஸ்ட் எப்படியிருக்க வேண்டுமென்பதற்கு என் போன்று பலர் அளிக்கக்கூடிய பதில், தோழர் வி.பி.சி-யை ஒட்டியே இருக்கும்; இருக்க முடியும். மேற்கண்ட கேள்விக்குக் குறைந்தபட்சம் தோழர் வி.பி.சி யைப் போன்று இருக்க வேண்டும் என்பதே எனது பதில். என் தலைமுறை சார்பாக, அவர் காலத்தில் அவரது வழிகாட்டுதலில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தவர்கள் பலரும் இதை ஏற்கனவே அறிவார்கள்.

அன்றைய சென்னை மாகாணத்தில் மலையாள மொழி பேசும்  மலபார் மாவட்டத்தில் இன்றைய கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் ஸ்ரீகண்டன் என்ற ஜிண்டனாகப் பிறந்தவர். பள்ளிப்பருவத்திலேயே காங்கிரஸ் இயக்கத்தில், தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியின் தாலுகா செயலாளரானார். குறுகிய காலத்திற்குள் கம்யூனிஸ்ட் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். சுறுசுறுப்புமிக்க ஊழியராக மாறினார். கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள், அவர்களது மேடைப்பேச்சுகளில் ‘ஜிண்டன் எனும் சிண்டையிலிருந்து ஜோஷி(பொதுச்செயலாளர்) எனும் பெருச்சாளி வரை’ எனக் குறிப்பிட்டுப் பேசும் நிலையைத் தனது வீறு கொண்ட பணிகளின் மூலம் உருவாக்கியவர். அவர் மட்டுமல்லாது அவரது சகோதரி வி.பி. ஜானகியும் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் பேச்சாளராக விளங்கியவர்.

கேரளாவில் கம்யூனிஸ்ட் இயக்க நிறுவுநர் என்றே அறியப்படும், ‘சகாவு’ கிருஷ்ணப்பிள்ளை அவர்களால் ஊக்குவிக்கப்பட்டு, அவராலேயே தமிழகப்பகுதிக்கு அரசியல் பணியாற்ற அனுப்பி வைக்கப்பட்டவர் வி.பி.ஜிண்டன். இவரது பெயரை  வி.பி.சிந்தன் என மாற்றியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

தமிழகத்தில் இராமநாதபுரம் பகுதியில் துவங்கித் தமிழகத்திற்கு எழுச்சியூட்டிய தலைவர்களில் ஒருவராக வளர்ந்த, அவரது அரசியல் வாழ்க்கை, பல்வகைகளில் இளம் தலைமுறையினருக்குப் பாடமாக இருக்கும்.

ஒரு கம்யூனிஸ்ட் ஊழியன், உயர் பொறுப்புகளுக்கு வந்துள்ள ஓர் தலைவர் எப்படிப்பட்ட பண்புகள் கொண்டவராக இருக்க வேண்டுமென கம்யூனிஸ்ட் இயக்கத்தவரும், பொதுமக்களும் அரசியல் எதிரிகளும் கூடக் கருதுவார்களோ, அப்பண்புகளுக்கெல்லாம் சொந்தக்காரராக வாழ்ந்தவர் தோழர் வி.பி.சி.

சிறந்த ஊழியராக, தலைவராக, நல்லாசிரியராக, பேச்சாளராக, போராட்ட நாயகனாக, மன உறுதி கொண்ட படைத்தளபதியாக, மிகப்பெரும் மனிதாபிமானியாக…. இவை எல்லாம் சேர்ந்த கம்யூனிஸ்ட்டாக, புரட்சியாளராக வாழ்ந்து, வழி காட்டியவர் தோழர் வி.பி.சி.

இந்தியத் தத்துவவியலிருந்து துவங்கி மார்க்சியத்தின் அனைத்து உள்ளடக்கக் கூறுகளையும், வரலாற்று பாடங்களையும் அவர் விளக்கிக் கூறுகின்ற பாணியே அலாதியானது. குழந்தைகளிலிருந்து பேரறிஞர்கள் வரையிலுமானவர்களை ஈர்க்கக்கூடிய அவரது திறன் வியப்பளிக்கக்கூடியதாக இருந்தது.

வரலாறு, பொருளாதாரம், அறிவியல்,  இலக்கியம் எனப் பல்துறை வாசிப்பும் அதைப் பகிர்ந்து அளிப்பதிலுள்ள தேர்ச்சியும் எங்கள் தலைமுறை நன்கறிந்தது. அகில இந்திய வானொலியில், அந்த நாட்களில் ஒலிபரப்பப்பட்ட சமஸ்கிருத நிகழ்ச்சியை, மாறுபட்ட முறையில் நிகழ்த்தி, பலரது பாராட்டைப் பெற்றவர் வி.பி.சி. அதனாலேயே சமூகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் ஒரு நட்பு வட்டத்திற்குச் சொந்தக்காரராக வாழ்ந்தவர் அவர். தான் கொண்ட கொள்கையின் உறுதியைத் தக்க வைத்துக் கொண்டே, இந்த நட்பு வட்டத்தை வளர்த்தெடுத்தார்.

முதலாளிகள் கைக்கூலிகளான, சமூக விரோதிகளின் கொலை தாக்குதலுக்கு ஆளாகியவரின் மன உறுதி குறித்து, அவருக்குச் சிகிச்சையளித்து அவரது உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள், அறிவியலின் வளர்ச்சியும், வாய்ப்புகளும் மட்டுமல்லாது, அவரது மனவுறுதியும் தான் அவரைக் காப்பாற்றியது என்று வெளிப்படையாகக் கூறினார்கள். உடலில் பாய்ச்சிய கத்தியுடன் பல மணிநேரம் உறுதியுடன் இருந்ததாலேயே அறுவை சிகிச்சை வெற்றி பெற்றது. உடல் சாய்க்கப்பட்ட பேருந்தில் உயிர் இருக்கிறதா என்பதை அறிய அவரது முட்டிக்குக் கீழ் எலும்பில் இருந்து கம்பியால் தாக்குதல் நடத்தச் சொன்ன கயவர்களின் குரல் கேட்டுக் காலை அசைக்காமல் அந்தத் தாக்குதலைத் தாங்கியவர் அவர்.

சிறையில் உண்ணாவிரதமிருந்து, தண்ணீரும் கூட இல்லாமல் பல நாள் சென்ற பின், உதட்டில் அமர்ந்த ஈயை விரட்டக்கூட இயலாமல் சகித்துக் கொள்ள வேண்டியிருந்ததை அவர் இயலாமையின் உச்சக் கட்டம் என்பார். வெள்ளையன் சிறையிலும், காங்கிரஸ், திமுக ஆட்சிகளில் சிறையிலும்  அவர் பட்ட துன்பங்கள் ஏட்டிலடங்காதவை. சிறையில் தாக்குதலுக்குள்ளான போதும், படுகாயமடைந்த மற்றவர்களுக்கு உதவுவதில், நீவி விட்டு ரத்த ஓட்டத்தை முறைப்படுத்துவதில் வல்லமை கொண்டவர் சிந்தன் எனத் தோழர் ஏ.கே.கோபாலன் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் இங்கிலாந்தை மட்டுமல்லாது, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்த போராட்டத்தில் ஈடுபட்டவர். புதுவையின் விடுதலைப்  போராட்டத்தில் காவல்நிலையத்தைக் கைப்பற்றுவது உட்படக் களப்போராட்டத்தில் பங்கேற்றவர். களப்போராட்டத்திற்கென பயிற்சி பெற்ற தலைவர்களில் ஒருவர் வி.பி.சி. என்பது ஒரு சிலர் அறிந்த செய்தி.

விடுதலைக்கு முந்தைய சென்னை நகரத் தொழிற்சங்க இயக்கம், பிறகு விவசாயப் போராட்டக்களமான தஞ்சைப்பகுதி எனத் தலைமை பொறுப்பேற்றவர். 1967க்குப் பிறகு 20 ஆண்டு காலம் சென்னைத் தொழிலாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவராக விளங்கினார். தொழிலாளி வர்க்கத்தை ஒன்றுபடுத்துவதிலும், அதை வர்க்க ஒற்றுமையாக வளர்த்தெடுப்பதிலும் அவர் ஆற்றிய அரும்பணிகள் இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தப்பட வேண்டிய ஒன்று. தொழிலாளி வர்க்க இயக்கம் தத்துவார்த்த ரீதியான பல் வகை சங்கத்தை அந்த நாட்களில் சென்னையில் நடைபெற்ற அரசியல் பணிகளில் அவர் பெரும் பங்காற்றினார்; பெருமைக்குரிய பங்காற்றினார்.

சென்னை நகர் சுற்றுப்பகுதிகளில் 1970-80களில் தொழிலாளர்களிடையே உருவாக்கப்பட்ட போராட்ட ஒற்றுமையையும், உறுதிமிக்க போராட்டங்களும் மிகப் பெரும் அடக்குமுறைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலை உருவாக்கியது. கருப்புச் சட்டங்களைப் பயன்படுத்தித் தலைவர்களைச் சிறையிலடைப்பது, தொழிலாளர்களை மட்டுமல்லாது, தலைவர்களையும் – தோழர் வி.பி.சி. உட்பட – நேரடியாகத் தாக்குவது என்பதைத் தொடர்ந்து நடைபெற்றதுதான் 1973 ஜூலை 18 அன்று சென்னை மூலக்கடையில் அவர் மீது நடைபெற்ற கொலைவெறித்தாக்குதல்.

அந்தக் கொலைவெறி தாக்குதலிலிருந்து மீண்டு ஃபீனிக்ஸ் பறவையாக எழுந்து தலைமை தாங்கி நடத்திய எண்ணற்ற போராட்டங்களுக்கிடையேதான் அவர் 1987 மே தின விழாவில் பங்கேற்க மாஸ்கோ சென்றார். சி.ஐ.டி.யு.,-வின் சார்பாக அந்த விழாவில் பங்கேற்றவரை இறுதி அஞ்சலிக்காகவே நம்மால் காண முடிந்தது.

விமான நிலையத்தில் வழியனுப்பச் சென்றவர்களிடமும், திரும்பி வந்தபின் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றியே அவர் பேசிக் கொண்டிருந்தார். அவற்றில் பல இன்னமும் நம் முன் உள்ளது. வி.பி.சி. அவர்களது பிறந்த நாள் நூற்றாண்டை, அவர் விட்டுச் சென்ற பணிகளை உணர்ந்து, பணிகளை வேகப்படுத்த உதவும் முறையில் கொண்டாடுவோமாக.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்