உலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் பொருளாதாரம் வளர்ந்ததா? (புள்ளிவிபரங்கள்)

2775
1
SHARE

பெருகும் ஏற்றதாழ்வுகளின் 25 ஆண்டுகள் – பகுதி 2

முந்தைய பகுதி: <<<        அடுத்த பகுதி : >>>

பொருளாதார வளர்ச்சி விகிதம்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஆங்கிலத்தில் GDP) இந்த ஆண்டு கடந்த ஆண்டைவிட எவ்வளவு சதவிகிதம் வேறுபடுகிறது என்பதன் அடிப்படையில் கணக்கிடுவர். ஜி.டி.பி. என்பது ஒருநாட்டில் ஓர்ஆண்டில் உற்பத்தியாகும் அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தைமதிப்பு ஆகும். இது ஒரு நாட்டின் பொருளாதார வலுவை குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். ஆனால் ஜி.டி.பி.யின் அளவை வைத்து நாட்டு மக்களின் வாழ்நிலை பற்றி ஒரு முடிவுக்கு வர இயலாது. மக்கள் வாழ்நிலை என்பது, என்ன உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, அது பல்வேறு பகுதி மக்களுக்கு எந்தெந்த அளவில் கிடைத்துள்ளது போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாகும். இருப்பினும், நவீன உலகில், ஜி.டி.பி.யின் ஆண்டு வளர்ச்சி விகிதம் ஒரு முக்கிய குறீயீடாகக் கருதப்படுகிறது. நம் நாட்டு ஆளும்வர்க்கங்கள் தாராளமய காலத்தைப் புகழும்பொழுது இக்குறியீட்டையே முக்கியமாக முன்வைக்கின்றனர். மார்க்சீயப் பார்வையில், ஜி.டி.பி. வளர்ச்சி என்பது பொருளாதார செயல்பாட்டின் ஒரு அம்சம்தான். இருந்த போதிலும், ஜி.டி.பி. வளர்ச்சியையும் நாம் பரிசீலிக்கலாம். குறிப்பாக, தாராளமய கொள்கைகள் 1991இல் வேகப்படுத்தப்பட்ட பொழுது, அவை ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தைப் பெரிதும் அதிகரிக்கச் செய்யும் என்ற வாதம் ஆளும் வர்க்கங்களால் முன்வைக்கப்பட்டது. இது நிகழ்ந்துள்ளதா? என்று முதலில் பரிசீலிப்போம்.

பொருளாதார வளர்ச்சியின் அளவு, மற்றும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், தாராளமய காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல்பகுதி 1991முதல்1997வரை. அடுத்தது 1998முதல்2004வரை. மூன்றாம் பகுதி 2004முதல்2014வரையிலான பத்துஆண்டுகள்.

1991-1997 காலத்தில் பொருளாதார வளர்ச்சி

1991 இல் இருந்து 1997 வரை ஒருபுறம் அரசு உரமற்றும்உணவு மானியங்களை வெட்டி, மக்களின் வாங்கும் சக்தியைப் பறித்த போதிலும், நிதித்துறை தாராள மயமாக்கல், உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளின் தாக்கம் ஆகியவை துவக்க நிலையிலேயே இருந்தன. மேலும் ஐந்தாம் ஊதியக்குழு பரிந்துரைகளும் உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்குக் கிடைத்த ஏற்றுமதி வாய்ப்புகளும் பொருளாதார வளர்ச்சி விகிதம் 1980களின் பிற்பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சி விகிதத்திற்குக் குறையாமல் இருக்க உதவின. இதன் பொருள் 1990களில் ஏற்பட்ட வளர்ச்சி விகிதம் 1980களில் நிகழ்ந்த வளர்ச்சி விகிதத்தைவிட கூடுதலாக இல்லை என்பதும் முக்கிய செய்தி. எனவே, தாராளமய காலத்தின் முதல் பத்து ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

அதேசமயம், 1990களில் வளர்ச்சியின் தன்மையில் மாற்றம் நிகழ்கிறது. 1991இல் தாராளமய கொள்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட பின், 1986-1990உடன் ஒப்பிடுகையில், அடுத்த பத்து ஆண்டுகளில் வேளாண் மற்றும் வேளாண்சார் துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் பெரிதும் குறைந்தன. தொழில்துறையைப் பொறுத்தவரையிலும் கூட, 1990களின் இரண்டாம் பகுதியில் வளர்ச்சி விகிதம் குறைந்தது. இதன்பொருள் மிக முக்கியம். நாட்டு மக்களில் பாதிக்கும் அதிகமானோர் தங்கள் வாழ்வுக்கு நம்பியிருக்கும் வேளாண்மைத் தொழில் தேக்கத்தில் இருந்தால் ஒட்டுமொத்த பொருளாதாரவளர்ச்சி கூடக்குறைய இருந்து என்ன பயன்? தாராளமய கொள்கைகள் வேளாண்துறையை பாதித்தது என்பது முக்கியமான செய்தி.

1998-2004 கால பொருளாதார வளர்ச்சி

தாராளமய கொள்கைகள் வேளாண்துறையை மிகக் கடுமையாக பாதித்துள்ளதை ஒரு விவரம் நமக்கு உணர்த்துகிறது. 1984-85முதல் 1994-95வரையிலான காலத்தில் ஆண்டுக்கு 4.1 % வேகத்தில் வளர்ந்து வந்த வேளாண்துறையின் வளர்ச்சி விகிதம் 1994-95 முதல் 2004-05 வரையிலான காலத்தில் ஆண்டுக்கு 0.6% என்று சரிந்தது. உணவுதானிய உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 0.7% என்று ஆகியது. அதாவது, மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஈடுகட்டும் அளவிற்குக்கூட உணவுதானிய உற்பத்தி அதிகரிக்கவில்லை. எனவே, தலா தானிய உற்பத்தி சரிந்தது. விடுதலைக்குப்பின் 1950முதல்1995வரை இப்படி ஒரு நிலைமை ஏற்படவே இல்லை. காலனி ஆதிக்க காலத்தில்தான், 1900முதல்1947வரையிலான காலத்தில்தான், தானியஉற்பத்தி வளர்ச்சிவிகிதம் இதையும் விடக் குறைவாக ஆண்டுக்கு 0.5% என்று இருந்தது. வேறுவகையில் சொன்னால், தாராளமயக் கொள்கைகள் நாட்டின் வேளாண்மைதுறையை கிட்டத்தட்ட காலனிஆதிக்ககால வேதனைக்கே இட்டுச் சென்றுவிட்டது எனலாம். 1998க்குப்பின் உள்நாட்டில் அரசின் கொள்கைகளின் பாதிப்போடு, உலக வர்த்தக அமைப்பின் தாக்கமும் வலுவாக இருந்தது. உள்நாட்டில் தாராளமயமாக்கல் – குறிப்பாக, நிதித் துறையில்– தீவிரப்படுத்தப்பட்டது, அரசின் செலவுகள் வெட்டப்பட்டு பாசனம், வேளாண்ஆராய்ச்சி, வேளாண் விரிவாக்கம், கொள்முதல் உள்ளிட்ட அனைத்து வேளாண் ஆதரவு நடவடிக்கைகளும் பலவீனப்படுத்தப்பட்டது ஆகியவையும் வேளாண்துறை பின்னடைவுக்குக் காரணமாக அமைந்தன. இன்னொரு முக்கிய காரணம் 1990களின் பிற்பகுதியில் உலக வேளாண்பொருட்சந்தைகளில் விலைசரிவு ஏற்பட்டது. மேலும், ஏறத்தாழ அதே சமயத்தில், இந்திய அரசு வேளாண்பொருட்களின்மீதான அளவு கட்டுப்பாடுகளை நீக்கியது. இறக்குமதி வரிகளைக் குறைத்தது. இவை அனைத்தும் 1998இல் இருந்து 2004வரையிலான காலம்தான். இக்காலம் -1998 முதல் 2004 வரை –பொருளாதார வளர்ச்சி பெரிதும் குறைந்த காலம். வேளாண்துறை மட்டுமின்றி தொழில்துறையும் வளர்ச்சி குறைவை சந்தித்தது. 1984-85 முதல் 1994-95 வரை ஆண்டுக்கு 6.2% வேகத்தில் வளர்ந்து வந்த தொழில் துறையின் வளர்ச்சி அடுத்த பத்து ஆண்டுகளில், அதாவது 1994-95 முதல் 2004-05 வரையிலான காலத்தில் ஆண்டுக்கு 5% என குறைந்தது.

இந்த இரண்டு அம்சங்களையும்–அதாவது, வேளாண்வளர்ச்சியின் பெரும் சரிவு, தொழில் துறையின் மந்தநிலை ஆகிய இரண்டையும் – சேர்த்துப் பார்த்தால், தாராளமய காலத்தின் முதல் பதினைந்து ஆண்டுகளில் பொருள் உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி என்பது மந்தமாகவே இருந்தது என்பது புலனாகும். 1991முதல் 2004வரையிலான தாராளமய கொள்கைக்கால வளர்ச்சி சேவைத்துறையில் மட்டுமே குறிப்பிடத்தக்கதாக இருந்தது என்பது தெளிவாகிறது.

சேவைத்துறையின் வளர்ச்சியை ஆராயும்பொழுது அதன் இரட்டைத்தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சேவைத்துறை என்றவுடன் பலரும் வங்கி, இன்சூரன்ஸ், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளையே முதலில் மனதில் கொள்வார்கள்.ஆனால், ஆங்கிலத்தில் சிலசமயம் FIRE (Finance, Information Technology, Real Estate) என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற இத்துறைகள் சேவைத்துறையின் ஒரு பகுதியே. இத்துறைகளில் பணிபுரிவோரில் ஒரு சிறுபகுதியினர் வசதியாக இருக்க இயலும் என்றாலும், இங்கும் கூட கணிசமான பகுதியினர் நிச்சயமற்ற பணிஇடங்களில் குறைந்த ஊதியங்களுக்குப் பணிபுரிகின்றனர்.[1] மறுபுறம் சேவைத்துறை என்பது ஏராளமான உழைப்பாளிகள் -உதாரணம், சிறுவணிகம், வேறு பல குறைந்த வருமானம் தருகின்ற சுயவேலைகள் போன்றவற்றில் உள்ளோர்– குறைந்த ஊதியத்திலும் உற்பத்தி திறனிலும் உழைக்கும் துறையாகும்.

இதன் பொருள் என்னவென்றால், தாராளமயக் கொள்கைகள், அவற்றின் முதல் பதினைந்து ஆண்டுகள் அமலாக்கத்தில் பொருள்உற்பத்தி வளர்ச்சியை பெருமளவிற்கு சாதிக்கவில்லை என்பதுடன், நிகழ்ந்த சேவைத்துறை வளர்ச்சியும், ஒரு சிறியபகுதி – நிதி மற்றும் தகவல்தொழில்நுட்பப்பகுதி – நீங்கலாக, பெருமளவிற்கு உற்பத்தி திறன் உயர்வையோ, உழைப்போர் வருமான உயர்வையோ சாதிக்கவில்லை என்பதுதான்.

2004 2014 கால பொருளாதார வளர்ச்சி

2004இல் மக்களவை தேர்தல் நடைபெற்ற பொழுது பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசீய ஜனநாயக கூட்டணி முன்வைத்த தேர்தல் முழக்கம் “இந்தியாஒளிர்கிறது” என்பதாகும். இந்த முழக்கம் எந்த அளவிற்கு உண்மைக்குப் புறம்பானது என்பதை 1991 முதல் 2004வரையிலான காலத்தில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும், பாதிக்கும் மேற்பட்ட இந்திய மக்கள் சார்ந்திருக்கும் வேளாண் மற்றும் வேளாண்சார் துறையின் வளர்ச்சியும் எப்படி இருந்தன என்று நாம் மேலே வர்ணித்ததில் இருந்து ஊகித்துக் கொள்ளலாம். இந்த முழக்கத்திற்கு எதிராக, தாராளமய கொள்கைகளை அறிமுகப்படுத்தி தீவிரமாகப் பின்பற்றி வந்த காங்கிரஸ், “சாதாரணகுடிமகன்” என்ற கவர்ச்சிகரமான முழக்கத்தை முன்வைத்தது. இரு பெரும் முதலாளித்துவ– நிலப்பிரபுத்துவ கட்சிகளும் அவை உருவாக்கிய கூட்டணிகளும் இரண்டுமே மக்களவையில் 2004இல் பெரும்பான்மை பெற இயலவில்லை என்பது நினைவு கூரத்தக்கது. இத்தகைய சூழலில், மதவாத பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதைத் தடுக்க காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது என்ற சங்கடமான, ஆனால் தவிர்க்க முடியாத முடிவை இடதுசாரிகள் எடுக்கவேண்டி இருந்தது.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிஅரசு தாராளமய கொள்கைகளைத் தொடர்ந்தது. அதேசமயம், இடதுசாரிகள் அளித்த நிர்பந்தத்தின் காரணமாக, அரசின் முதலீட்டு செலவுகளை, குறிப்பாக, வேளாண் மற்றும் ஊரகவளர்ச்சிக்கான செலவுகளை சற்று அதிகரித்தது. மறுபுறம், பங்குச்சந்தை முதலீடுகளுக்கு பெரும் வரிச்சலுகைகள் அளித்து அன்னிய மூலதனத்தை ஈர்த்தது. உள்நாட்டில் நுகர்பொருள்சந்தைகளை ஊக்குவிக்க கடன்வசதிகளை நடுத்தர, உயர்நடுத்தரபகுதியினருக்கு வழங்க வங்கிகளைத் தூண்டியது அரசு. பன்னாட்டு அரங்கிலும், மேலைநாடுகளில், குறிப்பாக அமெரிக்கநாட்டில், பின்பற்றப்பட்ட கிராக்கியை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளும் இந்திய ஏற்றுமதி வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்தன. அன்னிய மூலதனத்தையும் இந்தியாவிற்கு ஈர்த்தன. இவையெல்லாம்சேர்ந்து, 2004முதல் 2008வரை இந்திய ஜி.டி.பி. வளர்ச்சியை முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு உயர்த்தின. எடுத்துக்காட்டாக, 2005-06, 2006-07 மற்றும் 2007-08 ஆண்டுகளில் ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 9%ஐயும் தாண்டியது.

2008இல் உலக முதலாளித்துவ நெருக்கடி வெடித்தவுடன் இந்த வளர்ச்சி நெருக்கடிக்கு உள்ளாகியது. 2007-08இல் 9.2% ஆக இருந்த ஜி.டி.பி. வளர்ச்சி 2008-09இல் 6.7% ஆகக் குறைந்தது. 2004-08 காலகட்டத்தில் இந்தியாவிற்குள் பங்குச்சந்தையில் சூதாடி பெரும்லாபம் ஈட்ட அதிகஅளவில் வந்த அன்னிய நிதிமூலதனம் 2008பிற்பகுதியில் வேகமாக வெளியேறியது. இது பங்குச்சந்தை வீழ்ச்சிக்கும், ரூபாயின் அன்னியச் செலாவணி மதிப்பின் வீழ்ச்சிக்கும் இட்டுச் சென்றது. ஏற்றுமதியும் சரிந்தது. இதனால் ஏற்பட்ட மந்தத்தை எதிர்கொள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, பொருளாதார ஊக்க நடவடிக்கை என்ற பெயரில் பெரிய அளவில் வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டன. கலால்வரி, சுங்கவரி, கார்ப்பரேட் லாபவரி மற்றும் தனிநபர் வருமானவரி என்று அனைத்து வரிஇனங்களிலும் சலுகைகள் அளிக்கப்பட்டன. இவற்றின் விளைவாக நாட்டு மக்கள் பயன் அடையவில்லை. எனினும், பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் ஒருமீட்சி ஏற்பட்டது. 2008-09இல் 6.7%ஆக சரிந்திருந்த ஜி..டி..பி. வளர்ச்சி விகிதம் 2009-10, மற்றும் 2010-11 ஆண்டுகளில் 8.4%ஆக உயர்ந்தது. ஆனால், உலகப் பொருளாதார மந்தநிலை தொடர்ந்த பின்னணியில், அரசின் வரவு-செலவு நெருக்கடியும், அன்னியச் செலாவணி நெருக்கடியும் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், 2012-13இல் துவங்கி தற்சமயம் வரை GDP வளர்ச்சி  இன்னும் மந்தமாகவே உள்ளது.[2]

2004க்குப்பின் நிகழ்ந்துள்ள வளர்ச்சியின் துறைவாரி தன்மையைப் பொருத்தவரையில், வேளாண்துறை உற்பத்தி வளர்ச்சியில் 1998-2004 காலத்தோடு ஒப்பிடும்பொழுது ஓரளவு மீட்சி ஏற்பட்டுள்ளது. 11ஆம் ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-2012) சராசரி ஆண்டு வேளாண்வளர்ச்சி விகிதம் 3.5% ஆனது. இது பெரிய சாதனைஅல்ல என்றாலும், முந்தைய ஐந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் தானிய உற்பத்தி வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். மிகமோசமான வளர்ச்சி விகிதம் தொழில்துறையில் உள்ளது. 2011 ஜூன் மாதத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக ஆலை உற்பத்தி வளர்ச்சி என்பது மிகவும் சுமாராகத்தான் உள்ளது. கட்டமைப்பு துறைகளிலும் வளர்ச்சி மந்தமாகவே உள்ளது. ஆகவே தாராளமய காலத்தில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கவில்லை என்பது மட்டும் அல்ல; அதன் தன்மை மிகவும் சமனற்றதாகவும், பொருள் உற்பத்தி துறைகளில் குறைவாகவும் உள்ளது.

தாராளமய காலத்தில் பொருளாதாரம்

இந்த கட்டுரையில் இதுவரை தாராளமய காலத்தில் தேச உற்பத்தியின் வளர்ச்சியின் சில முக்கிய அம்சங்களைப் பார்த்தோம். பொதுவாக, 1980இல் இருந்து 2014வரை வளர்ச்சி விகிதம் சராசரியாக ஆண்டுக்கு 6% என்ற அளவில் உள்ளது. அரசுதரப்பிலும் ஆளும்வர்க்க ஊடகங்களிலும் எதிர்பார்க்கப்பட்டதுபோல் தாராளமய காலத்தில் பாய்ச்சல் வேகத்தில் ஒன்றும் பொருளாதாரம் வளரவில்லை. மேலும், வளர்ச்சியின் தன்மை மிகவும் சமனற்றதாக உள்ளது. இதன் துறைவாரி அசமத்துவத்தை நாம் விரிவாகப் பார்த்தோம்.

அடுத்து, தாராளமய கால பொருளாதார வளர்ச்சியின் பிற அம்சங்களைப் பரிசீலிப்போம். குறிப்பாக, வேளாண்மை துறை, வேலைவாய்ப்பு, வறுமை, ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை பார்ப்போம். அதனை அடுத்து, இன்று நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்கள் பற்றியும் அவற்றை எதிர்கொள்ள எத்தகைய மாற்றுக்கொள்கைகள் தேவை என்பதையும் பார்ப்போம்.

அடுத்தடுத்த பகுதிகளில் …

 

[1]இது தொடர்பாக,FRONTLINE ஆகஸ்ட் 5 2016 இதழில் குணால் சங்கர் எழுதியுள்ள கட்டுரையை (பக்கம் 39 – 43) காண்க

[2]அரசின் புள்ளிவிவர தகிடுதத்தங்கள் வளர்ச்சி விகிதம் கூடியுள்ளதாக கணக்கு காட்ட முனைந்தாலும்  உண்மையில் மந்தம் நீங்கவில்லை.

ஒரு கருத்து

Please start yout discussion here ...