லத்தீன் அமெரிக்காவின் கோபம்…

634
0
SHARE

நாங்கள் முழுமையாக இறப்பதற்காக
இங்கு வரவில்லை!
மரங்களைப் போல்
இலைகளை இழந்து விடுவதற்காகத்தான்
வந்திருக்கிறோம்!
வெட்டப்பட்டாலும், மகத்தான
வேர்களிலிருந்து மீண்டும்
உயிர் பெற்று வாழும்
மரங்களாக…
– ராபர்ட் ப்ளை

சிலியில் சோசலிச அரசு சால்வாடோர் அலெண்டே தலைமையில் நவம்பர் 1970இல் பதவியேற்றது. யுனைடெட் பாப்புலர் அல்லது மக்கள் கூட்டணியின் தேர்தல் வெற்றியைக் கண்டு அந்நாட்டு முதலாளிகள் அடைந்த பதற்றத்தின் விளைவாக பங்குச் சந்தை வீழ்ந்தது. முதலாளிகள் நாட்டை விட்டே ஓடினர். உற்பத்தி குறைந்து; வேலையின்மை அதிகரித்தது. பிற்போக்கு சக்திகள் ஒன்று சேர்ந்து ராணுவக் கலகம் ஒன்றைத் தூண்டிவிட முயன்றனர். கலகம் செய்வதற்கு அது சரியான தருணமல்ல என்று ராணுவத் தளபதிகள் உணர்ந்திருந்தமையால் அம்முயற்சி வெற்றிபெறவில்லை. மக்கள் ஆதரவினர் கலக முயற்சி மங்கிப் போனதில் உத்வேகமடைந்த அலெண்டே மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொருளாதாரக் கொள்கைகளை அறிவித்தது. விலைவாசி குறைந்தது. கூலி உயர்ந்தது. வீட்டு வசதி பெருகியது. விவசாய சீர்திருத்தம் முடுக்கி விடப்பட்டது. இவற்றின் விளைவாக ஆட்சிக்கு வந்து சில மாதங்களுக்குள்ளேயே அரசுக்கு மக்கள் ஆதரவு பெருகியது. ஏப்ரல் 1972இல் நடந்த நகராட்சித் தேர்தல்களில் மக்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.
தேர்தலின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய இடதுசாரி களின் கட்டுப்பாட்டில் அரசு எந்திரத்தின் ஓர் அங்கமான நிர்வாகத் துறை மட்டும்தான் இணைந்தது. மக்களின் மகத்தான ஆதரவைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தில், நீதித்துறை, ராணுவம் ஆகிய மற்ற அரசு அங்கங்களின் மீது முழு ஆதிக்கம் பெறாதது மாபெரும் வரலாற்றுத் தவறானது. இராணுவத்துறையில்தான் இந்த தவறு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. பழைய இராணுவ அலுவலர்கள் தொடர்ந்து பதவியிலிருந்தனர். கோவிலை அரசுக்கு ஆதரவான அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. மேலும் உயர்ந்த சம்பளம், வாழ்க்கைத்தரம், ஜனநாயக உரிமைகளை அளித்து இளம் இராணுவ வீரர்களையும், தளபதிகளையும் தன்வசப்படுத்த தவறியது அலெண்டே அரசு. இராணுவப் பயிற்சியின் புற பகுதியாக அவர்களுக்கு அரசியல் கல்வியும் அளிக்கவில்லை. இவற்றுக்கெல்லாம் மேலாக சிலி ராணுவத்திற்கும், அமெரிக்காவிற்கும் இருந்த பழைய தொடர்புகள் தொடர்ந்தன. அலெண்டே அரசுக்கு நிதி கொடுக்க முன்வந்த வங்கிகளையும், நிதி நிறுவனங்களை மிரட்டி, முடக்கிய போதிலும் சிலியின் இராணுவத்திற்கும் அமெரிக்கா தன் உதவியைத் தொடர்ந்தது. இராணுவத்தை வென்றொழிப்பதில் இருந்த சுணக்கம் தவிர, ஆர்ப்பரித்து நிற்கும் மக்கள் கூட்டங்களுக்கு ஆயுதம் அளித்து, பயிற்சி கொடுத்து சோசலிச அரசைக் காத்து நிற்கும் மக்கள் ராணுவத்தையும் உருவாக்கத் தவறியது அலெண்டே அரசு.
இந்த வரலாற்றுத் தவறுகள் 1973ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று ஒரு வரலாற்றுச் சோகத்திற்கு இட்டுச் சென்றன. சிலி நாட்டின் ராணுவத் தளபதியான அகஸ்டோ பினோசெட் தலைமையில் ராணுவத்தின் ஒரு பகுதியினர் அமெரிக்காவின் முழு ஆசியுடனும், ஆதரவுடனும் அலெண்டே தங்கியிருந்த ஜனாதிபதி மாளிகையைத் தாக்கினர். இறப்பதற்கு சில கணங்களுக்கு முன் அலெண்டே வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை இதோ:
“நிச்சயமாக இதுதான் உங்களிடையே நிகழ்த்தும் கடைசி உரையாக இருக்கும். வானொலி மையத்தின் ஒலிபரப்பு கோபுரங் களை விமானப்படை குண்டு வீசி தகர்த்து விட்டது. எனது சொற்களில் கசப்புணர்வு படிந்திருக்கவில்லை. ஏமாற்ற உணர்வுதான் உள்ளது. சிலியின் ராணுவ வீரர்கள் பதவியேற்ற போது எடுத்துக் கொண்ட உறுதிமொழிகளுக்கு துரோகம் செய்ததற்காக அவர் களைத் தார்மீக ரீதியாக தண்டிக்கும் செய்றகளாகும் இவை. இன்று அட்மிரல் மெரினோ தன்னைத் தானே கப்பற்படைத் தளபதியாக அறிவித்துக் கொண்டிருக்கிறார். நேற்றுவரை இந்த அரசுக்கு உண்மையாக இருப்பேன் என்று கூறிவந்த மென்டோஸா இன்று போலீஸ் படையின் தளபதியாக தன்னைத்தானே அறிவித் திருக்கிறார்.
இந்த உண்மைகளை எதிர் கொண்டுள்ள நான் தொழிலாளி களிடம் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நான் பதவி விலக மாட்டேன்! வரலாறு மாறும் இந்தத் தருணத்தில் மக்களின் நம்பிக்கையை நான் உயிர் கொடுத்தேனும் காப்பேன். ஆயிரமாயிரம் சிலி மக்களின் உணர்வுகளில் இன்று நாம் விதைக்கும் விதை வீரியம் இழந்து விடாது என்று நான் உறுதியாகக் கூற முடியும்.
அவர்களிடம் (இராணுவத்திடம்) அதிகாரம் உள்ளது. அவர்கள் நம்மை அடித்து நொறுக்கிவிட முடியும். ஆனால் சமூக வளர்ச்சிப் போக்குகளை குற்றங்களினாலும், அதிகாரத்தினாலும் தடுத்து நிறுத்திட முடியாது. வரலாறு நம்முடையது. மக்கள் அதனை உருவாக்குவர்.
நம் நாட்டின் தொழிலாளர்களே, நீங்கள் எனக்கு எப்போதுமே காட்டி வந்துள்ள விசுவாசத்திற்காக நான் நன்றி கூற விரும்புகிறேன். நீதியும், நியாயமும் வேண்டும் என்று பல உள்ளங்களில் ஊறிக் கிடக்கும் ஆசைகளுக்குஉணர்ந்து வெளிப் படுத்திய ஒரு மனிதனாக மட்டுமிருக்கும் என் மீது, அரசியல் சட்டத்தையும் மற்ற சட்டங்களையும் மதிப்பேன் என்று மட்டும் கூறி அப்படியே நடந்த என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி கூறுகிறேன்.
வரையறைகளைச் செய்ய வேண்டிய இத்தருணத்தில் ஒன்றை மட்டும் கடைசியாகச் சொல்ல விரும்புகிறேன். அந்நிய மூலதனமும் ஏகாதிபத்தியமும் உள்நாட்டு பிற்போக்கு சக்திகளுடன் இணைந்து உருவாக்கிய ஒரு சூழ்நிலையைப் பயன்படுத்தி நமது ராணுவம் ஒரு பாரம்பரியத்தை உடைத்து விட்டது. பெரும் தோட்டங்களையும், சொத்துக்களையும், அதன் உரிமையாளர்களையும் பாதுகாக்கும் பணியை மீண்டும் துவங்கி விட்டது.
நான் நம் நாட்டின் எளிமையான பெண்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் விவசாயப் பெண்களிடம் பேசுகிறேன். ஆலைகளில் மேலும், மேலும் உழைத்துத் தேயும் பெண்களிடம் பேசுகிறேன். குழந்தைகளைப் பற்றி எங்களுக்கும் அக்கறையைப் புரிந்து கொண்ட தாய்மார்களிடம் பேசுகிறேன்.
நமது போராட்டத்திற்கு உலகையும், உணர்வையும் ஊட்டிய பாடல்களைப் பாடிய இளைஞர்களிடம் பேசிக் கொண்டிருக்கி றேன். பாசிசத்தின் ஆட்சி ஏற்பட்டுச் சில மணி நேரங்கள் ஆகிவிட்டதால்; கொல்லப்படவிருக்கும் தொழிலாளி, விவசாயி, அறிவுஜீவிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். பேச வேண்டிய வர்கள் மௌனமாயிருக்கும் இந்த நேரத்தில் பாலங்களைத் தகர்த்து, ரயில் பாதைகளை வெட்டி, எண்ணெய், எரிவாயுக் குழாய்களை உடைத்தெறிந்து கொண்டிருக்கும் தீவிரவாதிகளிடம் பேசுகிறேன். வரலாறுதான் அவர்களை நிர்ணயம் செய்யும்.
ரேபியோ மெகல்லனிஸ எனப்படும் நமது வானொலியின் சப்தம் நசுக்கப்படலாம். அமைதியாக கணிரென ஒலிக்கும் என் குரல் எங்களைச் சென்றடையாமல் கூட இருக்கலாம். அது பற்றிக் கவலை இல்லை! என் குரல் உங்களுக்குக் கேட்டுக் கொண்டே இருக்கும்! நான் எப்போதும் உங்கள் அருகிலேயே இருப்பேன்! அல்லது ஒரு கண்ணியமான உண்மையான மனிதனாக இருந்தான் இவன் என்ற நினைவு உங்களிடம் எப்போதும் இருக்கும்.
சிலி நாட்டின் தொழிலாளர்களே! சிலி மீதும் அதன் எதிர்காலம் பற்றியும் எனக்கு நம்பிக்கை உள்ளது. துரோகம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள நினைக்கும் இந்த கசப்பான சாம்பல் நேரத்திதை மற்ற வகையான மனிதர்கள் வெற்றி கொள்வார்கள்!
ஒரு நல்ல சமூதாயத்தை உருவாக்க வேண்டி சுதந்திரமான மனிதர்கள் நடந்து வருவதற்காக நிழல்தரும் மரங்கள் நிறைந்த சாலைகள் திறந்து விரியும் என்ற நம்பிக்கைகள் நீங்கள் என்றுமே மனதில் வைத்திருங்கள்.
நீடூழி வாழ்க சிலி! நீடூழி வாழ்க அதன் மக்கள்! நீடூழி வாழ்க தொழிலாளர்கள்!இவையே அன்று இறுதி வார்த்தைகள்! என் தியாகம் வீணாய்ப் போகாது என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது! துரோகத்தையும், கோழைத் தன்மையையும் தண்டிக்கும் தார்மீக பாடமாகவாவது என் தியாகம் நிலைக்கும்!
பாராளுமன்றப் பாதையில் சென்று அதிகாரத்தைக் கைப்பற்றுவது இடதுசாரிகளுக்க முக்கியமானதென்றாலும் அரசியல் சட்டப்படி தாங்கள் ஆண்டுவிட முடியும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை சில அனுபவம் காட்டுகிறது என்று தோழர் ஈ.எம்.எஸ். சுட்டிக்காட்டியுள்ளார். ஆட்சியைப் பிடித்தாலும் இரட்டைக் கவசமாக்கி பிற்போக்கு சக்திகள் ஊர்ந்து வந்து தாக்கும் என்ற வரலாற்று அனுபவம் வெனிசுலாவில் சாவேசுக்கும் ஏற்பட்டதையும், அதை அவர் எவ்வாறு முறியடித்தார் என்பது சமீபத்திய அனுபவம்.
ஜனநாயகத்தையும் சோசலியத்தையும் அடித்து நொறுக்குவதற்காக லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க ஏற்படுத்திய இன்னொரு சர்வாதிகார கொடுமைதான் அகஸ்டோ பிளோசெட். இன்று நாம் காணும் நவீன தாரளமயத்தின் முதல் பரிசோதனைகள் சிலியில்தாம் நிகழ்த்தப்பட்டன.
இந்தப் பரிசோதனைகளை நிகழ்ச்சி சிலியின் பொருளாதார நிபுணர்களுக்குப் பயிற்றி அளித்தவர்கள் அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிற்போக்கு பொருளாதாரக் கொள்கைகளின் பிதாமகனான மில்டன் ஸப்ரைட்மான் தலைமையில் இயங்கி வந்த சில நிபுணர்கள்தாம். இந்த சிகாகோ நிபுணர்கள்தாம் லத்தீன் அமெரிக்காவின் சர்வாதிகாரிகளுக்கு பொருளாதார ஆலோசகர்கள். சிலி நாட்டில் இவர்களுக்கிருந்த சீடர்களுக்கு “சிகாகோ சிறுவர்கள்“ (சிகாகோ பாய்ஸ்) என்று பெயர். இந்தியாவிலும் – மேஸ்டேக் சிங் அலுவாலியா போன்ற “சிறுவர்கள்“ செய்யும் சேட்டைகளை நாம் அறிவோம். சுதந்திர சதைக் கொள்கையின் நாயகர்களாகிய சிகாகோ பாய்ஸ் முதலில் தாக்கிய அமைப்பு ரீதியாக வலுவாக இருந்த தொழிலாளி வர்க்கத்தைதான்!
தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், சித்திரவதைக்குள்ளாயினர். படுகொலை செய்யப்பட்டனர், நாடு கடத்தப்பட்டனர். அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டன. தொழிற்சங்கங்கள் கூட விரோதமாக்கப்பட்டன. சுரங்கங்கள், தொழிற்சாலைகள், துறைமுகங்கள் போன்ற தொழிற் கேந்திரங் களில் உரிமையாளர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது. தொழிற்சங்க பலத்தை நசுக்க எந்த ஆயுதத்தையும் எடுக்கத் தயங்கவில்லை பிளோசெட் அரசு.
உலகப் பொருளாதாரத்தை 1930களில் பெருமந்தம் தாக்கியபோது, சிலி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனைச் சமாளிப்பதற்கு சிலி தாமிரம் போன்ற கனிம வளங்களை உலக சந்தையில் வீழ்ந்து வரும் வினாவுக்கு விற்பதையும் இயந்திரங் களையும் நுகர்வுப் பொருட்களையும் அதிக வேலை கொடுத்து இறக்குமதி செய்வதையும் நிறுத்திவிட்டு உள்நாட்டுத் தொழில்களை பெருக்கி, உள்நாட்டு சந்தையை வலுப்படுத்த வேண்டுமென்றும் நல்லெண்ணம் கொண்ட பொருளாதார நிபுணர்கள் கூறினர். உள்நாட்டுத் தொழிலும், உற்பத்தியும் பெருக வேண்டுமானால் அயல் நாடுகளிலிருந்து வளரும் பொருட்களுக்கு அதிகத் தீர்வை விதிக்க வேண்டும். உள்நாட்டு சந்தைகளை பரவலாக்கி வலுப்படுத்துவதற்கு மக்களின் பெரும்பாலோர் நுகரக் கூடிய பொருட்களை உற்பத்தி செய்வதற்கு முன்னுரிமை கொடுத்து, அப்பொருட்களை அவர்கள் வாங்குவதற்கான பொருளாதார சக்தியையும் மக்களுக்கு வழங்க வேண்டுமென்று அவர்கள் கூறினர். இந்தக் கொள்கை பின்பற்றப் பட்ட சூழலில்தான் தொழிற்சங்கங்கள் வளர்ந்தன.
உள்நாட்டுத் தொழிலையும், சந்தையையும் வளர்க்க நினைக்கும் எந்த பொருளாதாரக் கொள்கையும் தொழிலாளியின் குரலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் என்பதை உணர்ந்த “சிகாகோ“ சிறுவர்கள் தங்களுடைய மாற்றுக் கொள்கைகளுக்குத் தடையாக இருக்கும் தொழிற்சங்கங்களைக் குறிவைத்துத் தாக்கியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. முதலாளித்துவ வளர்ச்சிக்கு ஜனநாயகம் தடையாக இருந்தால் சர்வாதிகாரம் சர்வ மரியாதைகளுடன் ஆட்சியமைத்தது.
தொழிலாளி வர்க்கத்தையும், அதை பிரநிதித்துவப் படுத்திய அரசியல் இயக்கங்களையும் ஒடுக்கிய சிலியின் ஆளும் வர்க்கங்கள், அடுத்ததாகக் கை வைத்தது. சிலி மண்ணுக்கடியில் அளவின்றி புதைந்து கிடக்கும் கனிம வளங்கள், அமைதியின்றி ஆர்ப்பரிக்கும் கடலுக்குள் மூழ்கியிருக்கும் மீன் போன்ற செல்வங்கள், தென் பகுதியில் நீண்டு பரவிக் கிடக்கும் காடுகள், வளம் கொழிக்கும் விளைச்சல் நிலங்கள் மீதுதான். இப்பகுதிகளிலிருந்து கிடைக்கும் எண்ணற்ற இயற்கை வளங்களை ஏற்றுமதி செய்வது பினோசெட் சர்வாதிகாரம் பின்பற்றிய பொருளாதாரக் கொள்கையின் மையமாக இருந்தது.
‘பாரம்பரியத்திற்கு மாறான‘ ஏற்றுமதி என்ற பெயரில் சால்மன் என்ற மீனினமும், காடுகளிலிருந்து வெட்டப்பட்ட மரங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட கூழ், காகிதம் போன்ற பொருட்களும் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருளாதாரம் பூத்துக் குலுங்கியது. தாமிர ஏற்றுமதியை விட, மீன், புதிததாகத் தயாரிக்கப்பட்ட ரொமேட் உணவுப் பொருட்கள், ஒயின் போன்றவற்றில் ஏற்றுமதி அதிகரித்தது.
ஒரு புறத்தில் தொழிலாளி வர்க்கத்தின் மீது தாக்குதல். மறுபுறத்தில் காடுகளையும், கடலையும், நிலங்களையும் சார்ந்து வாழ்ந்து வந்த பிறபகுதி மக்களின் வாழ்வாதரங்களைப் பறிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் தாக்குதல். இவற்றையெல்லாம் அனுமதித்து, வசதி செய்து கொடுத்து, நிதி மூலதனத்தின் மீதிருந்த தடைகளை நீக்கி, இவற்றினால் பயனடையும் ஏகாதிபத்தியம் மற்றும் உள்நாட்டிலுள்ள மேல்தட்டு வர்க்கங்களின் ஆதரவுடன் செயல்படும் ஒரு சர்வாதிகார அரசு! இது தான் நாம் இன்று இந்தியாவிலும் காணும் நவீன தாராளமயவாதத்தின் (நியோ லிபரலிசம்) ஆரம்பகால அடிச் சுவடுகள் சிலி என்ற பரிசோதனைச் சாலையிலிருந்து கிடைத்த பாடங்களை லத்தீன் அமெரிக்காவின் 19 பிற நாடுகளிலிலும் அமுல்படுத்திய போது தான், ஐநூறு ஆண்டுகளாக மக்கள் அடக்கி வைத்திருந்து கோபம் பல நிறங்களில் வெளிப்பட்டது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தொழிலாளி வர்க்கம் மட்டுமின்றி, பலதரப்பட்ட மக்களும் ஏகாதிபத்தியத்தின் நிஜ முகத்தை நேரிடையாகக் கண்டபோது எதிர்ப்புகளும் பல வடிவங்களில் வெளிப்பட்டன. நவீன தாராளமயம் என்ற கருமேகம் சூழ்ந்த அஸ்தமான வேளையில், கோடிக்கணக்கான மக்களின் கண்ணீர்த் துளிகளில் பிரதிபலித்தது. ஒரு வானவில் லத்தீன் அமெரிக்காவில் தோன்றியது. பல வண்ணங்களைக் கொண்ட இந்த வில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பல வண்ணங்களில் அம்புகளை எய்தது!
(தொடரும்)

கருத்துக்கள் இல்லை

Please start yout discussion here ...