உலகமயமாதல் காலத்தில் பெண்கள் மீதான சுரண்டல்

368
2
SHARE

விஜூ கிருஷ்ணன்

இந்தியாவில் 1991-ல் காங்கிரஸ் அரசு நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகளையும் அமைப்புசார் மாற்றங்களையும் தொடங்கியபோது, உலகவங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு ஏற்ப பொருளாதார உலக மயமாக்கல்  செயல்முறைகளும் தொடங்கின. தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல், உலக மயமாக்கல் என்றெல்லாம் வழக்கமாக அழைக்கப்படும் இந்தக் கொள்கைகள் ஆரம்பம் முதல் கவர்ச்சியானதாகவே சித்தரிக்கப்பட்டு வந்தன. அவை வளர்ச்சியும் நலனும் கொண்டுவரும், முதலீடுகளைக் கொண்டுவந்து எந்த பாலினப் பாகுபாடும் இல்லாத வாய்ப்புகளை உருவாக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. தாராள மயமாக்கப்பட்ட உலக வர்த்தகத்திலும் நிதிச் சந்தைகளிலும் பங்கேற்பது பெண்கள் உள்ளிட்ட அனைவரின் நிலைகளை உயர்த்தி, நிறைய வாய்ப்புகளைத் தரும் என்றொரு வாதமும் முன்வைக்கப்பட்டது. சிபிஐ-எம், முற்போக்குப் பெண்கள் இயக்கம் மற்றும் பிற தொழிலாளர்கள், உழவர் இயக்கங்களோ முதலிலேயே, ஏற்கனவே ஆணாதிக்க அமைப்பிலிருக்கும் சமமின்மைகள், பாகுபாடுகள், வாய்ப்புகள் மறுப்பு போன்றவற்றை இந்த நடவடிக்கைகள் இன்னும் ஆழமாக்கும் என்று சொல்லிவந்தன. உலகமயமாதல் பெண்களுக்கு, அவர்களது சமூகப் பொருளாதாரச் சூழல்களில், வாழ்க்கைத் தரத்தில், பாலினச் சமத்துவத்தில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது?

உலகமயமாதலின் ஆதரவாளர்கள் பலரும் சொல்வது என்னவென்றால், உலகமயமாதலுக்கு எதிரான கொள்கைகள் எல்லாமே பெண்களின் நலனுக்கும் எதிரானவை; அதிலும் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அத்தகைய கொள்கைகள் பெண்களுக்கு பணி வாய்ப்புகள், சமூக பொருளாதார நிலைகளில் மேம்பாடு ஆகிய அனைத்தையுமே நடைமுறையில் மறுக்கும் கொள்கைகளாக அமையும் என்பதே ஆகும். பாகுபாடுகள் இல்லாத, பாலின ரீதியாக கவனமுடைய சமவாய்ப்புகளைத் தரும் மாற்றுகள் குறித்த எல்லா பேச்சுகளுமே அடையமுடியாத ’கற்பனையுலகு’ என்று சொல்லப்படும். இதற்காக, எந்த வேலையும் இல்லாமல் இருப்பதை விட ஏதோ ஒரு வேலை நல்லது; இப்படி உருவாக்கப்படும் வேலைகள் பெண்களின் பிழைப்புக்கும், ஆண் உறவினர்களிடமிருந்து சுதந்திரமாக இருக்கவும், தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்கவும் பயன்படுகின்றன என்பதுபோன்ற வாதங்கள் முன்வைக்கப்படும். உண்மையில் பெண்களுக்கு உலகமயமாதலால் ஏற்பட்ட தாக்கங்கள் சமமற்றதாகவே இருந்திருக்கின்றன. பாலின ரீதியாக மட்டுமின்றி, நகரம்-கிராமம், அமைப்பு சார்- அமைப்புசாரா தொழில்துறைகள் போன்ற பிரிவுகளிடையும் சமமின்மை நிலவுகிறது.

ஆசிய-பசிஃபிக் பகுதிகளில் ஏறக்குறைய வேளாண் பணிகள் முழுவதுமே (94.7%) அமைப்புசாராதவைதான். இந்தியாவை உள்ளடக்கிய தெற்காசியாவில் இது 99.3% என்ற உச்ச அளவை எட்டுகிறது.

வேளாண்மை மற்றும் வயல் வேலை ஆகியவை உள்ளடக்கிய முதல் நிலைத் தொழில் துறையிலேயே பெரும்பான்மையான பெண்கள் பணிக்குச் செல்கிறார்கள். இன்றும் பெண்களுக்கு அதிகம் வேலை அளிக்கும் துறை வேளாண்மைதான். ஆனால் உலகமயமாதல், வர்த்தக தாராளவாதம், மானியங்கள் குறைப்பு, வேளாண்மை அதிகம் ஏற்றுமதியை நோக்கி நகர்தல் போன்றவற்றால் பெண்களுக்கு பணி வாய்ப்புகள் குறைந்திருக்கின்றன. வேளாண் துறையில் தீவிரமடைந்திருக்கும் நெருக்கடியால் இடர்ப்பாடிலும் கடனிலும் சிக்கியிருந்த பல லட்சம் உழவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

75 சதவீதம் பெண்கள் இன்னும் வேளாண்மையில் ஈடுபட்டிருக்கின்றனர் என்றாலும் இந்த எண்ணிக்கையில் பெண்கள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. ஆணாதிக்க கருத்தியலும், நிலப்பிரபுத்துவ கடந்தகாலத்தின் சமூக-கலாச்சார பாரம்பரியங்களுமே உலகமயமாதலின் கீழ் மீண்டும் மறு நிர்ணயம் செய்யப்படுகின்றன. இதில் கல்வி, சுகாதாரம் எல்லாம் தனியார்மயமாக, அரசாங்கம் சமூக நல, பொதுநலன் செலவீனங்களில் இருந்து பின்வாங்குகிறது. இடர்பாடுகளால் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் கிராமங்களை விட்டு இடம்பெயர, பெண்கள் வேளாண்மையையும், தினக்கூலி வேலைகளையும் மேற்கொண்டு தங்கள் குடும்பத்தின் பிழைப்பைப் பார்க்க வேண்டியுள்ளது.

இப்படி சம்பாதிப்பதும் குறைந்துகொண்டே வருவதால், உணவு, கல்வி, சுகாதாரம் போன்ற தேவைகளை எதிர்கொள்வது கடினமாகிறது. கிராமங்களிலிருந்து ஆண் தொழிலாளர்கள் இடம்பெயர்வதும், மக்கட்தொகை பெண்மயமாவதாக சொல்லப்படுவதாலும் சேர்த்து ஏற்கனவே வீட்டுப் பராமரிப்புச் சுமையைத் தாங்கியிருக்கும் பெண்களின் மேல் வேளாண்மை, வேளாண்மைசார் கூலி வேலைகள், நூறு நாள் வேலைத் திட்டம் போன்ற திட்டங்களின் வேலைகள் எல்லாம் சுமத்தப்படுகிறது. இடர்ப்பாடுகளில் சிக்கிய பெண்கள் நகர்ப்பகுதிகளுக்கு இடம்பெயரும்போது பாலியல் தொல்லைகள், கடத்தல் போன்றவையும் அதிகமாகின்றன. ஏற்கனவே பெண்களுக்கு எதிராக இருந்த நிலக்குவிப்பு உலகமயமாதல் காலத்தில் இன்னும் பெருகியிருக்கிறது. நிலச் சீரமைப்புகள் திரும்பிப் பெறப் பட்டது; அதிகரிக்கும் நிலமிழப்பு போன்றவை இதற்குக் காரணமாகியுள்ளன.

வேளாண்மைக்கு வெளியிலும் பெண்கள் அதிக அளவில் அமைப்புசாரா வேலைகளில் ஈடுபடவேண்டியுள்ளதோடு, வீட்டு வேலைகள், வீடுசார் வேலைகளில் அடிமை போன்ற ஊதியத்திலோ, அல்லது ஊதியமில்லாத ஆனால் பங்களிக்கும் குடும்ப உறுப்பினர்களாகவோ மோசமான சூழல்களில் சிக்குகிறார்கள். இன்றும் கூட இந்தியாவில் 90 சதவீதம் பெண்கள் அமைப்புசாரா துறைகளில், உழைப்புக்கு மதிப்பில்லாத நிலையில், சமூகப் பாதுகாப்பு இல்லாமல், சரியான நேரத்தில் போதுமான ஊதியம் வழங்கப்படாமல்தான் பணியாற்றுகின்றனர். பெரும்பாலும் அவர்கள் தொழிலாளர்களாகவே கணக்கில் கொள்ளப்படுவதில்லை.

தகவல் தொழில்நுட்பம், அதை ஒட்டிய சேவைத் துறைகள், மின்னணுத் துறை, சேவைத் துறை, உணவு பதப்படுத்துதல் போன்ற சில ‘மின்னும்’ துறைகளில் மட்டுமே, மிகச்சிறிய அளவிற்கு படித்த மேல்தட்டு வர்க்கத்தினருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. அதே நேரத்தில் குறைவான உழைப்பே தேவைப்படும் ஏற்றுமதிக்கான பயிர்களில் அதிக கவனம் செலுத்தப்படுவது; அதிகளவு இயந்திரமயமாக்கல் போன்ற போக்குகளால் வேளாண்மைத் தொழிகளில் இருந்து பெண்கள் அதிகளவு இடம்பெயர வேண்டியிருக்கிறது. பாரம்பரிய தொழில்துறைகள் மூடப்படுவது; நிலம், நீர், காடுகள், தனிமங்கள் போன்ற இயற்கை வளங்கள் மீதான உரிமை இழப்பு, இலாபங்களை அதிகரிக்கவும் மூலதனத்தைப் பெருக்கவும் வளங்களைச் சுரண்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இவற்றால் பெண்கள் பொருளாதார ரீதியாக பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

உலகமயமாதலின் கூடவே கஷ்டப்பட்டு வென்ற தொழிலாளர் உரிமைகள் மீறப்படுவதும் மறுக்கப்படுவதும் நடக்கின்றன. விற்பனைத் துறை, கடைகள், துணி உற்பத்தி, வாகன உற்பத்தித் துறை போன்ற பிற துறைகளில் பெண்கள் கடும் ஒடுக்குமுறையையும் மோசமான வேலைச் சூழலையும் சந்திக்கின்றனர். ஊதியம் சார் பாகுபாடுகளையும் எதிர்கொள்கின்றனர்.

உற்பத்தித் துறையில் பெண்கள் பெரும்பாலும் குறைந்த ஊதியமுள்ள, தற்காலிகமான, வீட்டிலிருந்து செய்யும் பணிகளிலோ அல்லது குடும்பமாக நடத்தும் தொழில்களில் ஊதியமின்றியோ இருக்கின்றனர். அல்லது மூன்றாம் நிலைத் துறைகளில் விற்பனை, கல்வி போன்ற துறைகளிலும், ஊதியமுடைய வீட்டு வேலைக்காரர்களாகவும் பெரும் எண்ணிக்கையில் நியமிக்கப்படுகின்றனர். இந்த அதிகரிக்கும் தற்காலிகமாக்கல், குறைந்த ஊதியம், சுரண்டும் வேலை ஒப்பந்தம், வேலைகளில் எந்த உத்தரவாதமுமின்றி, விரும்பியபோது அமர்த்திக்கொள்ளப்பட்டும் -வெளியேற்றபட்டும், சமூகப் பாதுகாப்புகளும் ஓய்வூதியங்களும் அமைப்புரீதியாக மறுக்கபட்டும் வருவது பெருமளவு உழைக்கும் வர்க்கத்தினரை பாதித்துள்ளது.

அதிலும் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பெண்களை மேலும் பாதித்துள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர் சங்கங்கள் போன்ற நடைமுறைகள் இல்லாதது பெண் தொழிலாளர்களை மேலும் பாதுகாப்பற்ற சூழலில் தள்ளுகிறது. ஒடுக்குமுறை, பாலியல் வன்முறைக்கு அவர்கள் உள்ளாவதோடு சரியான ஊதியம் போன்ற அடிப்படை உரிமைகளும் கூட அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. அமைப்புசார் துறைகளில் பெண்கள் பங்களிப்பும், தொழிலாளர்களாக அவர்களது பணிச்சூழலும் சரிவில் இருக்கின்றன.

உலகமயமாதல் காலத்தில், உலகளவில் பாலின இடைவெளி அதிகரித்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலின இடைவெளி குறித்த அறிக்கையின்படி, தற்போதைய மாற்றங்களின் போக்கில், பொருளாதாரப் பங்கேற்பிலும் பெண்களுக்கான வாய்ப்புகளிலும் இருக்கும் பாலின இடைவெளியை ஒழிக்க இன்னும் 257 ஆண்டுகள் ஆகும். (கடந்த ஆண்டு இது 202 ஆண்டுகளாக இருந்தது). அதாவது ஆண்களுக்குச் சமமான ஊதியம் பெற பெண்கள் 2277ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டும். இந்த அறிக்கை பொருளாதாரம், அரசியல், கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் பாலின இடைவெளியை அளவிட்டு 153 நாடுகளை மதிப்பிட்டுள்ளது.

உலகளாவிய அளவில் பெருகும் பாலின இடைவெளியை விரிவாக சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நான்கு துறைகளில், அரசியலில்தான் அதிகபட்ச பாலின இடைவெளி இருக்கிறது என்றாலும், அது கடந்த ஆண்டை விட முன்னேறியிருக்கிறது. உலகளாவிய அரசியலில் 24.7 சதவீத பாலின இடைவெளி நிரப்பட்டிருக்கிறது. உலகமெங்கும் பாராளுமன்றங்களில் கீழ்-சபைகளில் 25.2 சதவீத இடங்களையும், 21.2 சதவீத அமைச்சரவை இடங்களையும் பெண்கள் வகித்திருக்கின்றனர். நம் நாட்டில் இந்த சதவீதம் மிகக் குறைவு. இதில் மிக மோசமான நிலையில் இருக்கும் நாடுகளில் நமது நாடும் ஒன்று.

இந்தியா நான்கு இடங்கள் சரிந்து பாலின இடைவெளிப் பட்டியலில் 112ஆவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு தொடர்ந்து குறைந்து வருவதோடு உலகின் மிகக் குறைவான அளவாகவும் இருக்கிறது. இந்திய மக்கட்தொகையில் சரிபாதி பெண்களாக இருந்தாலும், தொழிலாளர்களில் கால் சதவீதத்துக்கும் குறைவாகவே அவர்கள் இருக்கிறார்கள். தரவுகளின்படி 2004-2005இல் 42.7 ஆக இருந்த தொழிலாளர்கள் இடையேயான பெண்கள் சதவீதம், 2011-2012இல் 31.2 ஆகவும், 2013-2014இல் 31.1 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

மனிதவள மேம்பாட்டு அறிக்கையின்படி 2019இல் தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கேற்பு மேலும் குறைந்து முன்னெப்போதும் இருந்திராதபடி 23.6 சதவீதம் என்ற மிகக்குறைந்த அளவை எட்டியுள்ளது. பாகிஸ்தான், ஏமன், சிரியா, ஈராக் போன்ற நாடுகள் மட்டுமே நம்மைவிட பின் தங்கியிருக்க, பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வாய்ப்புகளைப் பொருத்தவரை இந்தியா 149ஆவது இடத்தில் இருப்பதைப் புரிந்துகொண்டால் நமது தற்போதைய மோசமான சூழல் தெளிவாகும். சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பொருத்தவரை பாகிஸ்தானுக்கும் பின்னே 150ஆவது இடத்தில் நாம் இருக்கிறோம். அதாவது லட்சக்கணக்கான பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமான மருத்துவச் சேவைகள் வழங்கப்படவில்லை.

இத்தகைய சூழலில் உலகமயமாதலால் பெரும்பான்மை பெண்கள் மீதான சுரண்டல் அதிகரித்திருப்பது தெளிவு. நுகர்வுக் கலாச்சாரம் என்ற பெயரில் ஆணாதிக்க விழுமியங்கள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் வேளாண் துறையில், உழைக்கும் வர்க்கத்தின் தீவிர போராட்டங்களில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்திருப்பதோடு, சனநாயக மகளிர் இயக்கத்தின் போராளிகளும் அதிகரித்திருக்கிறார்கள்.

தமிழில்: வைலட்

2 கருத்துக்கள்

  1. I do agree that exploitation has increased over the years. But linking it with “Globalisation” seems a bit out of place. I suggest the block to post on current issues rather than on the same old stories. It will not gather mass.

கருத்தைப் பதிவு செய்யவும்